செய்திகள்

பேசிக்கொண்டே இருக்காதீர்கள் களத்திற்கு வாருங்கள்: கமல்ஹாசனுக்கு சீமான் சவால்

Published On 2017-08-16 08:14 IST   |   Update On 2017-08-16 08:14:00 IST
பேசிக்கொண்டே இருக்காதீர்கள் களத்திற்கு வாருங்கள் என்று நடிகர் கமல்ஹாசனுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் சவால் விடுத்துள்ளார்.
தாம்பரம்

ஊழல் செய்தவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும், அதற்கு அரசியல் கட்சிகள் ஏன் வலியுறுத்தவில்லை என கமல்ஹாசன் கூறுவது வெறும் பேச்சுதான் என்று சீமான் கூறினார்.

சென்னையை அடுத்த தாம்பரத்தில் நாம் தமிழர் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.

முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்காக ‘நீட்’ தேர்வில் ஓராண்டு காலத்துக்கு மத்திய அரசிடம் விலக்கு கேட்பதற்கு காரணம் இருக்கிறது. அதே காரணம் அடுத்த ஆண்டும் இருக்கும். அதனால் தான் அதற்கு நிரந்தர விலக்கு கேட்கிறோம்.

சாதி வேண்டாம் என்று சொல்கிற ஒருவர் இருந்தால் சொல்லுங்கள், நான் தலைமை ஏற்கிறேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார். நடிகர் சிவாஜிகணேசன் சிலையை அதே இடத்தில் வைக்க கமல்ஹாசன் குரல் கொடுப்பேன் என்று சொல்லட்டும். அவருடன் சேர்ந்து நானும் குரல் கொடுக்கிறேன்.

ஊழலை எதிர்த்து ஒரு ஆர்ப்பாட்டம் செய்வோம் என கமல்ஹாசன் தெரிவிக்கட்டும். நாங்கள் அதில் கலந்து கொள்ள தயாராக இருக்கிறோம். தமிழகத்தில் ஊழல் செய்தவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும். அதற்கு அரசியல் கட்சிகள் ஏன் வலியுறுத்தவில்லை என கமல்ஹாசன் கூறுவது வெறும் பேச்சுதான். ராஜினாமா செய்ய இங்கு யாரும் காமராஜர் போல் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News