செய்திகள்

நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு, குமரி அனந்தன் கோரிக்கை

Published On 2017-03-25 08:42 IST   |   Update On 2017-03-25 08:42:00 IST
நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு, தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
காஞ்சீபுரம்:

தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், காந்தி பேரவை-பூரண மதுவிலக்கு பாதயாத்திரைக்குழு தலைவருமான குமரி அனந்தன் மதுவிலக்கை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இவர் நேற்று காஞ்சீபுரம் மாவட்டத்துக்கு வந்தார். அவரை காஞ்சீபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுந்தரமூர்த்தி, நகரத்தலைவர் ஆர்.வி.குப்பன் உள்பட நிர்வாகிகள் வரவேற்றனர். அவர்களுக்கு நன்றி தெரிவித்து குமரிஅனந்தன் பேசினார்.

அப்போது, ‘மதுநீர் கூடாது என்று நடைபயணம் மேற்கொண்டிருக்கும் நான் நதிநீர் வேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டுபவன். நம் நாடு தன்னிறைவு பெற்ற நாடாக வேண்டும் என்றால் தண்ணீரை சரியாக எல்லா இடங்களிலும் கிடைக்க செய்ய வேண்டும். நதிகளை இணைத்தால் 14,500 கி.மீட்டருக்கு நீர்வழிப்பாதை கிடைக்கும். எனவே மத்திய அரசு அவசர அவசிய பணியாக நதிகளை இணைப்பதற்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

குமரி அனந்தன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், காஞ்சீபுரத்தில் தியாகி கிருஷ்ணசாமி சர்மாவுக்கு சிலை வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


Similar News