இயற்கை எரிவாயு திட்டத்துக்கு எதிராக மக்களுடன் இணைந்து காங்கிரஸ் போராடும்: திருநாவுக்கரசர் பேட்டி
ஆலந்தூர்:
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் திருச்சி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது-
புதுக்கோட்டை நெடு வாசலில் இயற்கை எரிவாயு எடுக்க எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இன்று மாலை காங்கிரஸ் கட்சி சார்பாக நானும், காங்கிரஸ கட்சி சட்டமன்ற தலைவர் ராமசாமியும் அந்த பகுதி மக்களை சந்தித்து பேச உள்ளோம். தேவைப்பட்டால் மக்களுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியும் போராட்டம் நடத்தும்.
வருகிற 1-ந்தேதி அந்த பகுதி மக்கள் ‘பந்த்’ போராட்டத்தை அறிவித்து உள்ளனர். அதற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தரும். இந்த பந்த் போராட்டத்துக்கு அரசியல் கட்சிகள், வியாபார மக்கள், மற்றும் பல அமைப்புகள் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நான் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதாலும் அப்பகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறேன் என்பதாலும் எனக்கு கூடுதல் பொறுப்பு உள்ளதாக உணர்கிறேன்.
தமிழ்நாடு முழுவதும் ரேசன் கடையில் முறையாக அரிசி, பருப்பு, பாமாயில் வழங்கப்படவில்லை. இதில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு ஏழை,. எளிய மக்களுக்கு உணவு பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இல்லை எனில் தமிழ்நாடு முழுவதும் உள்ள ரேசன் அலுவலகங்களில் காங்கிரஸ் போராட்டம் நடத்தும்.
தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடக்கும் என்று சில பா.ஜ.க. தலைவர்கள் கூறி இருக்கிறார்கள். ஆனால் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்தித்து நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்து வலியுறுத்துவதாக பத்திரிகையில் செய்திகள் வெளி வந்துள்ளன. ஏற்கனவே தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு விதி விலக்கு வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்து அதை மத்திய அரசுக்கும், ஜனாதிபதிக்கும் அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது.
இதில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விதி விலக்கு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.