செய்திகள்

3 தொகுதிகளில் பணபட்டுவாடாவை தடுக்க வாக்காளர்களின் வங்கி கணக்குகள் கண்காணிப்பு

Published On 2016-11-01 12:18 IST   |   Update On 2016-11-01 12:18:00 IST
தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளில் பணபட்டுவாடாவை தடுக்க வாக்காளர்களின் வங்கி கணக்குகளை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
சென்னை:

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதி சட்டசபை தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 26-ந் தேதி தொடங்கியது. நாளை (புதன்கிழமை) மனுதாக்கல் முடிகிறது. 3-ந்தேதி மனுக்கள் பரிசீலனையும், 5-ந்தேதி வேட்பாளர் இறுதிப் பட்டியலும் வெளியாக உள்ளது.

மூன்று தொகுதி தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகளிடையே 5 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவுக்கு இன்னும் 18 நாட்கள் உள்ள நிலையில் 3 தொகுதிகளிலும் இன்னமும் தேர்தல் பிரசாரம் சூடுபிடிக்கவில்லை.

இந்த நிலையில், தேர்தலை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடத்தி முடிக்க வேண்டும் என்பதில் தலைமை தேர்தல் கமி‌ஷன் தீவிர ஆர்வம் காட்டி வருகிறது. குறிப்பாக 3 தொகுதிகளிலும் பண பட்டுவாடாவை ஒரு இடத்தில் கூட நடைபெற அனுமதிக்கக்கூடாது என்பதில் தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகள் உறுதியுடன் உள்ளனர்.

இது தொடர்பாக தலைமை தேர்தல் கமி‌ஷன் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மூன்று தொகுதிகளிலும் பாதுகாப்பு பணிக்கும், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்கவும் 5 கம்பெனி மத்திய துணை நிலை ராணுவம் ஈடுபடுத்தப்பட உள்ளது. தற்போது வேறு எந்த மாநிலத்திலும் தேர்தல் நடக்கவில்லை. எனவே இந்த 3 தொகுதி தேர்தலில் எங்களால் முழுமையாக கவனம் செலுத்த முடியும்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதைத் தடுக்க முடியும். தேவைப்பட்டால் 3 தொகுதிகளுக்கும் கூடுதல் மத்தியப் படைகள் வரவழைக்கப்படும். அந்த படையில் பறக்கும் படையினர் இடம் பெற்றிருப்பார்கள். அவர்கள் தீவிர வாகன சோதனை நடத்துவார்கள். வீடுகளிலும் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

3 தொகுதிகளிலும் அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள், தேர்தல் நடத்தை விதிகளை கடைபிடிக்க வேண்டும். நடத்தை விதிகளை வேட்பாளர்கள் மீறினால், தேர்தலை ஒத்திவைக்கவும் நாங்கள் தயங்க மாட்டோம்.

திருப்பரங்குன்றம் தொகுதியில் மட்டும்தான் நவம்பர் 24-ந்தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்ற கட்டாய நிலை உள்ளது. தஞ்சை, அரவக்குறிச்சி ஆகிய 2 தொகுதிகளிலும் எங்களுக்கு அத்தகைய நிர்ப்பந்தம் எதுவும் இல்லை.

எனவே வேட்பாளர்களும், வாக்காளர்களும் அதை புரிந்து கொண்டு தேர்தல் நடத்தை விதிகளை கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

கடந்த மே மாதம் தேர்தல் நடந்தபோது தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளில் வாக்காளர்களுக்கு வினியோகிக்க எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 7.12 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தடவை அத்தகைய பண பட்டுவாடா நடந்துவிட கூடாது என்பதற்காக தேர்தல் அதிகாரிகளுடன் வருமான வரித்துறை அதிகாரிகளும் களம் இறங்கியுள்ளனர். மூன்று தொகுதிகளிலும் ஏராளமான வருமான வரித்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வாக்காளர்களுக்கு பணத்தை கொடுக்க வாகனங்களில் எடுத்துச் செல்ல முடியாதபடி தீவிர வாகன சோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே வாக்காளர்களுக்கு வங்கி கணக்கு மூலம் பணபட்டுவாடா நடக்கலாம் என்ற தகவல் வெளியானது.

இதையடுத்து 3 தொகுதிகளிலும் வாக்காளர்களின் வங்கி கணக்குகள் கண்காணிக்கப்படுகின்றன. அதிக அளவில் பணம் போடுகிறார்களா? எடுக்கிறார்களா? என்று தினமும் கண்காணிக்கப்படுகிறது.

இதனால் 3 தொகுதிகளிலும் வங்கிகள் மூலம் பணபட்டுவாடா நடக்க கூடும் என்ற குற்றச்சாட்டுகளுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

Similar News