செய்திகள்
கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனர் திருமாவளவன் பேசிய போது எடுத்த படம்.

காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும்: திருமாவளவன் பேட்டி

Published On 2016-09-10 16:36 IST   |   Update On 2016-09-12 16:52:00 IST
காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு:

கனரா வங்கி எஸ்.சி.எஸ்.டி ஊழியர் சங்கம் சார்பில் சென்னை வட்ட மாநாடு ஈரோட்டில் இன்று நடந்தது.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார்.

முன்னதாக திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

காவிரி நதி நீர் பிரச்சனை தொடர்பாக தென் மாநில முதல் அமைச்சர்களின் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கர்நாடக முதல் அமைச்சர் சித்தராமையா கூறியதை எங்கள் கட்சி வரவேற்கிறது. சட்ட ரீதியாக மட்டும் அல்லாமல் அரசியல் ரீதியாகவும் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

முதல் அமைச்சர் ஜெயலலிதா உடனே அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி இது தொடர்பாக ஆலோசனை நடத்த வேண்டும். இது தொடர்பாக அனைத்து கட்சிகள் அடங்கிய குழு அமைத்து பிரதமர் மோடியை சந்தித்து நமது கருத்தை வலியுறுத்த வேண்டும்.

கோவையிலும், சிவகங்கையிலும் விநாயகர் சிலை ஊர்வலம் நடத்திய தலித்துகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இது கண்டிக்கத்தக்கது.

சில கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக தலித்துகள் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்துவதில் ஆர்வமாக உள்ளன. இவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News