பெண்கள் உலகம்
பழைய அனுபவங்களை துணையிடம் பகிர்ந்து கொள்ளலாமா?

பழைய அனுபவங்களை துணையிடம் பகிர்ந்து கொள்ளலாமா?

Published On 2022-06-03 12:02 IST   |   Update On 2022-06-03 12:02:00 IST
காலை முதல் மாலை வரை நடந்த விஷயங்களை துணையிடம் பேசாவிட்டால் தூக்கமே வராது என்ற மன நிலை கொண்டவர்களும் இருக்கிறார்கள்.
கோபத்தில் பேசும்போது கொட்டும் வார்த்தைகளை நினைவில் வைத்துக்கொள்ளும் ஆற்றலும் பெண்களிடம் உண்டு. எனவே வார்த்தைகளை கவனமாக கையாள வேண்டும். கோபத்தில் இருக்கும் சமயத்தில் அந்தரங்க விஷயங்களை பற்றி பேசுவதை தவிர்க்க வேண்டும்.

திருமணமான புதிதில் கணவன் - மனைவி இருவரும் மனம் விட்டு பேசுவதற்கு முனைப்பு காட்டுவார்கள். தங்கள் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான விஷயங்களை துணையிடம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்வார்கள். குடும்ப விஷயங்களை போலவே நாட்டு நடப்புகளையும் பகிர்ந்து கொள்பவர்கள் இருக்கிறார்கள்.

அன்றைய நாளில் காலை முதல் மாலை வரை நடந்த விஷயங்களை துணையிடம் பேசாவிட்டால் தூக்கமே வராது என்ற மன நிலை கொண்டவர்களும் இருக்கிறார்கள். சில சமயங்களில் தான் பேசுவதை துணை காது கொடுத்து கேட்கிறாரா? என்பதை கூட கவனத்தில் கொள்ளாமல் பேசிக்கொண்டிருப்பார்கள். ஒருகட்டத்தில் பேச்சை ரசித்து கேட்க முடியாமல் அவஸ்தைபடுவதை உடல் மொழியால் வெளிப்படுத்தினாலும் கூட அதை பற்றி கவலை கொள்ளாமல் சொல்ல விரும்பிய விஷயத்தை கூறி விடுவதிலேயே குறியாய் இருப்பவர்களும் இருக்கிறார்கள்.

எந்தெந்த விஷயங்களையெல்லாம் துணையிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்ற வரைமுறை இருக்கிறது. தங்கள் கடந்த கால வாழ்க்கையில் நடந்த அத்தனை விஷயங்களையும் ஒளிவு மறைவின்றி துணையிடம் கூறியாக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அப்படி வெளிப்படையாக பேசும் விஷயங்களே சில சமயங்களில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடக்கூடும்.

குடும்ப நிம்மதியை குலைத்துவிடவும் வாய்ப்பிருக்கிறது. காதல் விஷயங்களை துணையிடம் பேச வேண்டியதில்லை என்ற கருத்தை மன நல ஆலோசகர்கள் முன்வைக்கிறார்கள். அதுவே பெரும்பாலானவர்களின் மன நிம்மதியை சீர்குலைக்கக்கூடியதாக இருக்கிறது. ஒரு பெண் தன் பழைய காதல் கதையை கணவரிடம் கூற வேண்டியதில்லை என்பது போலவே, கணவரும் தன் காதல் அனுபவத்தை பகிரக்கூடாது.

இப்படித்தான் திருமணமான புதிதில் ஒருவர் தன் மனைவியிடம் கல்லூரி காலத்தில் தொடர்ந்த நட்பு காதலாக மாறிய கதையை சொல்லி இருக்கிறார். தனக்கு அந்த பெண் எழுதிய கடிதங்களையும் மனைவியிடம் காட்டியிருக்கிறார். அதை பார்த்ததும் மனைவிக்கு சட்டென்று கோபம் வந்துவிட்டது. அந்த கடிதங்களை கிழித்து எறிந்தவர் கணவருடன் கடுமையாக சண்டை போட்டுவிட்டார். இப்போதும் அந்த பெண்ணுடன் தொடர்பில் இருப்பாரோ என்ற சந்தேகம் மனைவிக்கு தலைதூக்க, பிரச்சினை பெரிதானது. கணவரிடம் கோபித்துக்கொண்டு தன் பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் கணவர் சிரமப்பட்டு சமாதானப்படுத்தி அழைத்து வந்திருக்கிறார்.

எனவே யாரிடம் எந்த விஷயத்தைப் பேச வேண்டும் என்பதை அறிந்து அதற்குத் தக்கபடி பேச வேண்டும். எந்த விஷயத்தை எந்த நேரத்தில் பேச வேண்டும் என்ற வரைமுறையும் இருக்கிறது. அந்த சமயத்தில் பேசினால்தான் அதற்கு மதிப்பு கூடும். துணையின் மீது நல்ல அபிப்ராயம் உண்டாகும். கோபத்தில் ஒருபோதும் வார்த்தைகளை கொட்டிவிடக்கூடாது.

சிலர் யார் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதை அறியாமல் அவசரப்பட்டு வார்த்தைகளை வீசிவிடுவார்கள். கோபம் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர்தான் அதை நினைத்து வருந்து வார்கள். அதற்கு இடம் கொடுக்காமல், கோபமாக இருக்கும் சமயத்தில் வார்த்தைகளை கவனமாக உச்சரிக்க வேண்டும். சிலரோ, எதை பற்றியும் கவலைப்படாமல் தான் நினைத்ததை அப்படியே அருவி போல் கொட்டித் தீர்த்து விடுவார்கள். இதனால் இருவருக்கும் இடையில் மனஸ்தாபம் ஏற்பட்டு காலாகாலத்துக்கும் அவர்கள் உறவில் விரிசல் விழுந்து விடும்.

பெண்களை கற்பூர புத்தி கொண்டவர்கள் என்று சொல்வதுண்டு. எதையும் ‘கப்’பெனப் பிடித்துக் கொள்வார்கள். கோபத்தில் பேசும்போது கொட்டும் வார்த்தைகளை நினைவில் வைத்துக்கொள்ளும் ஆற்றல் பெண்களிடம் உண்டு. எனவே வார்த்தைகளை கவனமாக கையாள வேண்டும். கோபத்தில் இருக்கும் சமயத்தில் அந்தரங்க விஷயங்களை பற்றி பேசுவதை தவிர்க்க வேண்டும்.

துணை கோபமாக இருக்கும்போது, உங்கள் மீது தவறு இல்லாத பட்சத்தில் பொறுமையாக அவரிடம் எடுத்து சொல்லுங்கள். அவரை போலவே நீங்களும் கோபப்பட்டால் பாதிப்பு உங்களுக்குத்தான். எனவே துணையிடம் பேசும்போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்துங்கள்.
Tags:    

Similar News