லைஃப்ஸ்டைல்
பாவங்களில் பெரும்பாவம் பெற்றோரைக் கைவிடுவதே...

பாவங்களில் பெரும்பாவம் பெற்றோரைக் கைவிடுவதே...

Published On 2019-08-13 02:05 GMT   |   Update On 2019-08-13 02:05 GMT
பெற்றோர் தம் இறுதிக் காலத்தை எவ்வளவு மகிழ்ச்சியோடு கழிக்கிறார்களோ, அவ்வளவு நல்ல மகிழ்ச்சியை நீங்களும் உங்கள் பிள்ளைகளும் எதிர்காலத்தில் அடைய முடியும் என்பதைக் கனவிலும் நினைவிலும் மறந்துவிடாதீர்கள் என்பார் எமர்சன்.
என் தாயார், நேரடியாக நம் நாட்டுச் சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டதில்லை. ஆனால், பள்ளியில் படிக்கும்போது, வழிபாட்டுக் கூட்டங்களில், வகுப்பறைகளில், போட்டி மேடைகளில்... சுதந்திரம் நமது நாட்டுக்கு எவ்வளவு அவசியம் எனத் தொடர்ந்து அவர் பேசியிருக்கிறார். பெண்ணுக்குப் பொருளாதாரச் சுதந்திரம் மட்டும் போதாது. பெண்ணின் விருப்பங்களையும், லட்சியங்களையும் மதித்து ஏற்றுக்கொண்டு அவள் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்கும் குடும்ப அமைப்பு நமக்குத் தேவை என்றும் அம்மா கூட்டங்களில் பேசியிருக்கிறார்.

இதெல்லாம் அவளின் இளமைப்பருவத்தில் நேர்ந்த பசுமையான நிகழ்வுகள். 1931-ல் பிறந்தவள் என் அம்மா. விடுதலைக்கு முந்தைய நமது சமூகத்தில் அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்ற நிலைதான் இருந்தது. ஆனால், என் அம்மா, ஒரு மிகப்பெரிய கூட்டுக்குடும்பத்தின் (16 குழந்தைகளுக்கு) முதல் மகளாகப் பிறந்திருந்தபோதிலும், தன் வீட்டுச் சூழலை மீறியும் கல்வியில் அவள் பேரார்வம் காட்டினாள். கணிதமும், ஆங்கிலமும் அவளுக்கு இரண்டு கண்களாக இருந்தன.

மிகப்பெரிய வருவாய் இல்லாத நிலையிலும், தன் குழந்தைகள் அனைவரையும் என் தாயார், மிக உயர்ந்த படிப்புகள் படிக்க வைத்தாள். தம்பி, வெளிநாட்டில் ஆடிட்டராக இருக்கிறான். இன்னொரு சகோதரன், நம் நாட்டிலேயே மதிப்பு வாய்ந்த ஒரு பதிப்புப் பணியில் உள்ளான். இவ்வளவும் அம்மாவால்தான் சாத்தியமானது. ஒரு மெழுகுவர்த்தியாய் தன்னை எரித்துக்கொண்டு எங்களை அவள் வாழவைத்தாள். அம்மா நிறை வாழ்வு வாழ்ந்து, தன் 88-ம் வயதில், இந்த வருடம் ஜூன் 30-ந் தேதி மறைந்துபோனாள்.

“88 வயது வாழ்ந்தாளே, இது போதாதா உங்களுக்கு?” எனச் சிலர் கேட்கக்கூடும். 88 வயது இல்லை, ஆயிரம் வருடம் வாழ்ந்து என் தாயார் இறந்தாலும், அப்போதும் இன்னும் ஓர் ஆயிரம் வருடம் என் தாயார் வாழ்ந்திருக்கக்கூடாதா என்றுதான் நான் நினைப்பேன். அம்மா என் குருதியில் கலந்திருக்கிறாள், என் நாடி நரம்புகளில் அவள் ஓடுகிறாள். சங்கரரும், பட்டினத்தடிகளும் இன்னும் பலப்பல ஞானிகளுமே தாயன்பை மறக்கமுடியாமல் திணறினர் என்றால், என்னைப் போன்றவர்கள், எப்படி எம் தாயாரை மறக்க முடியும்?

இந்த உலகம் எனக்கு அவள் காட்டியது. இந்த வாழ்க்கை எனக்கு அவள் தந்தது. இந்த உருவம் அவள் கொடுத்த கொடை. என் அம்மா என்பதற்காக, இதை நான் சொல்லவில்லை. அம்மா என்ற ஓர் ஆல மரத்தின் கீழ் நான் இளைப்பாறி இருக்கிறேன். அம்மா என்றோர் உயர் ஆலயத்தில் நான் மெய்மறந்து சிரம் தாழ்ந்து நின்றிருக்கிறேன். என் ஒவ்வொரு செயலிலும், இதைப்பற்றி அம்மா என்ன நினைப்பாள் என்ற ஒரு நினைவு, என்னை அறியாமலேயே கலந்திருக்கிறது.

ஐயோ, அம்மா போய்விட்டாளே எல்லாம் பொய்யாய்ப், பழங்கதையாய்ப், பழங்கனவாய்ப், பாழ்நினைவாய் மெல்லப் போய்விடக்கூடாதே. தாயின் நினைவுகளுக்கும் அவள் வாழ்ந்து காட்டிய அந்த நெறிமுறைகளுக்கும், உண்மையோடும் பொறுப்போடும் நான் நடந்துகொள்வேன் என்று எனக்கு நானே உறுதி அளித்துக்கொள்கிறேன். வான்மேலிருந்து அம்மா என்னைக் கவனித்துக்கொண்டிருக்கிறாள். அவள் மனம் குளிரும்படி, என் எஞ்சிய வாழ்நாளை நான் அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதுதான் என் ஒரே ஆசை.

என் தந்தையார் ஒரு முன்னோடித் தொழிற்சங்கவாதி. இரண்டாம் உலகப்போர் முடிந்த சில தினங்களில், 1946-ல், ‘இந்தியன் ஒயிட் காலர் வொர்க்கர்ஸ்’ எனப்படும் அலுவலகப் பணியாளர்களுக்காகப் பாடுபடும் ‘கமர்சியல் எம்ப்ளாய்ஸ் அசோசியேஷன்’ என்ற தொழிற்சங்க அமைப்பை, என் தந்தையார் தொடங்கினார்.

இது போல், ஒரு முன்மாதிரித் தொழிற்சங்கத்தைத் தொடங்கி, அதன் தலைவராகப் பணியாற்றும்போது, வீட்டுப் பொறுப்புகளைக் கவனிப்பது மிகச் சிரமமான காரியமாகும். ஆனால், என் தந்தைக்கு அந்தச் சிரமம் வராமல், குடும்பத்தின் முழுப்பொறுப்பையும் என் தாயார் எடுத்துக்கொண்டார். குடும்பத்திற்காக என் தாய், தன்னை உருக்கிக் கொண்டமையால்தான், வெளி உலகில் என் தந்தையார் சிறந்த தொழிற்சங்கவாதியாக திகழ முடிந்தது. அச்சங்கம் சார்பாக நடைபெற்ற வேலை நிறுத்தத்திற்கு தலைமை ஏற்றதால்தான், என் தந்தையார், தன் பணியிலிருந்தே நீக்கப்பட்டார். அதற்காக அவர் சோர்ந்து போகவில்லை.

ஏழை, எளிய மக்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று என் தந்தை போலவே என் தாயும் விரும்பினாள். அதற்காகவே என் தாய், என்னை வக்கீலுக்குப் படிக்கச் சொன்னாள். அன்னையின் அந்த லட்சியத்தின் பலனாகத்தான், இன்று நான் நீதிபதியாகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். இப்படிப்பட்ட தாயும், தந்தையும் எல்லோருக்கும் அமைவதில்லை. “அரிதினும் அரிதான உயர்ந்த பெற்றோர், உனக்குக் கிடைத்திருக்கிறார்கள்” என, என் நண்பர்கள் கூறுவர். அவர்களிடத்தில், நான் இதைத்தான் சொல்வேன். “கடவுளின் அருளால் இந்தப் பெற்றோர் எனக்குக் கிடைத்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் நான் காரணம் இல்லை. ஏதோ நல்லூழ்தான், இதை என் வாழ்வில் சாத்தியப்படுத்தியிருக்கிறது” என்பேன்.

என் தெய்வம் என் தாய்தான். இன்றைக்கு முதியோர் இல்லங்கள் நாட்டில் பெருகிவிட்டன. அவற்றைப் பார்க்கும்போதெல்லாம் என் அம்மா துயரப்படுவார். எனக்கும் மனம் சங்கடப்படும். ‘பாரம்பரியப் பெருமையுள்ள நமது பாரத நாட்டில், இவ்வாறு வயது முதிர்ந்த பெற்றோர் தனிமைப்படுவது என்பது, நமது வாழ்வுக்குச் சிறிதும் நல்லது இல்லை’ என்பதுதான் என் எண்ணம்.

என் தந்தையும், தாயும் கடைசிவரை என்னோடு இருந்தார்கள் என்கிற அந்த மகிழ்ச்சி, என் வாழ்வில் பணத்தாலும், பதவியாலும் புகழாலும் நான் பெறமுடியாத அரிய ஓர் மகிழ்ச்சி என்பதை நான் நன்கு அறிவேன். இந்த மகிழ்ச்சி எனக்கு மட்டுமில்லை, நம் அனைவருக்கும் கடவுள் அருளால் கிடைக்கவேண்டும் என்பதே என் பிரார்த்தனை. ஆகவே இளைஞர்களே... உதாசீனப்படுத்தாது உங்கள் பெற்றோரைக் கடைசிவரை பராமரியுங்கள்.

உங்கள் பெற்றோர் உங்களை மனம் கனிந்து வாழ்த்தினால், இந்த உலகில் நீங்கள் விரும்பும் எதுவும் தானாக உங்களைத் தேடிவரும். அதற்கு நாம், நம்மைத் தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை, என் மகனுக்கும் நான் சொல்லிவைத்திருக்கிறேன். இது நாம் அனைவரும் நம் வாழ்வில் தவறாமல் பின்பற்றவேண்டிய உயர்ந்ததோர் ஒழுக்கமாகும்.

வயதான நமது பெற்றோரைப் பராமரிக்காமல் கைவிடுவதுதான், ‘பாவங்களிலேயே பெரும்பாவம்’. இந்தப் பாவத்தை நான் செய்யவில்லை. இதற்கு என் சகோதரியும், மனைவியுமே காரணமாவர். அவர்களின் நல்ல ஒத்துழைப்பு இல்லாமல், என் 88 வயது தாயாரைக் கடந்த 20 வருடங்களாக நான் பராமரித்திருக்க முடியாது. முதியோர் இல்லங்கள் என்பவை, முதியோருக்கு இளையோர் உருவாக்கிய சிறைச்சாலைகள் என்பது என் கருத்து.

இந்த உலகில் உள்ள எல்லாச் சிறைச்சாலைகளும் என்றைக்கு மூடப்படுகின்றனவோ, அன்றைக்குத்தான் நாகரிகச் சமூகம் உருவாகும் என்று எத்தனையோ மேதைகள் சொல்லியிருக்கிறார்கள். குறைந்தபட்சம், இந்த முதியோர் சிறைச்சாலைகளையாவது மூட நாம் பாடுபட வேண்டும். இந்த உலகில் பிறந்தவர் அனைவரும் வேறு என்ன சாதித்திருக்கிறோமோ இல்லையோ, பெற்றோரை அவர்தம் கடைசிகாலத்தில் நிம்மதியாகவும், மனநிறைவோடும் வாழச் செய்வோம் என்றால், அதைக்காட்டிலும் பெரிய ஒரு சாதனை நம் வாழ்வில் வேறு இருக்க முடியாது என, மனப்பூர்வமாக நான் நம்புகிறேன்.

நம் வாசகர்களிடம், நான் வேண்டிக்கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். இளைஞர்களே, உங்கள் பெற்றோரை ஒருபோதும் நீங்கள் சுமையாக நினைக்காதீர்கள். அவர்களே உங்கள் தெய்வங்கள். அவர்கள் தம் இறுதிக் காலத்தை எவ்வளவு மகிழ்ச்சியோடு கழிக்கிறார்களோ, அவ்வளவு நல்ல மகிழ்ச்சியை நீங்களும் உங்கள் பிள்ளைகளும் எதிர்காலத்தில் அடைய முடியும் என்பதைக் கனவிலும் நினைவிலும் மறந்துவிடாதீர்கள் என்பார் எமர்சன். தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும் என்பார் வள்ளுவர். இந்த இரு பெரும் அறிஞர்களின் நிறைமொழிகளை நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன். இளைஞர்களே. நான் உங்களுக்கு விடுக்கும் செய்தி இதுதான். ஒவ்வொருவரும் அவரவர் பெற்றோரைக் காப்பாற்றுங்கள். ஒருபோதும் உங்கள் பெற்றோரைக் கைவிட்டுவிடாதீர்கள்.

நீதிபதி எஸ்.வைத்தியநாதன்
Tags:    

Similar News