லைஃப்ஸ்டைல்
மலர்களை கருகவிடுவது சரியா? முறையா?

மலர்களை கருகவிடுவது சரியா? முறையா?

Published On 2019-08-06 03:08 GMT   |   Update On 2019-08-06 03:08 GMT
குழந்தைகளுக்கு நிகழும் பாலியல் வன்முறைகளுக்காக பதிவு செய்யப்படும் அத்தனை வழக்குகளுமே துயரம் தோய்ந்த உண்மைக் கதைகள். நம்மைப் பதறச்செய்யும் கதைகள்.
‘கடவுள் மட்டும்தான் உயிரைப் பறிக்க முடியும். ஏனென்றால், அவரால் மட்டும்தான் உயிரைக் கொடுக்க முடியும்’. இது, மகாத்மா காந்தியடிகள் சொன்ன வாசகம். இப்படி வன்முறைக்கு, கொலைகளுக்கு, மரண தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுத்தவர்கள், கொடுத்துக்கொண்டிருப்பவர்கள் ஏராளமானோர். ‘ஓர் உயிரைப் பறிக்கும் உரிமை யாருக்கும் இல்லை’ என்பதைத் தீவிரமாக நம்புகிறவள் நான்.

ஆனால், விதிவிலக்காக சில நேரங்களில், சில தண்டனைச் சட்டங்களை ஏற்றுக்கொள்ளவும் வேண்டியிருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு சட்டம்தான், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைக்கு மரண தண்டனைவரை விதிக்கச் செய்யும் ‘போக்சோ’ மசோதா. இந்த மசோதா அண்மையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒப்புதல் பெறப்பட்டு, சட்டமாக்கப்பட இருக்கிறது. அன்றாடம் பத்திரிகைகளில் வரும் செய்திகளையும் புள்ளிவிவரங்களையும் கண்டால் இந்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

2010-ம் ஆண்டு, கோவையில் ஒரு 10 வயது சிறுமியும், 7 வயது சிறுவனும் பள்ளிக்குச் சென்றபோது, கார் டிரைவர் மோகன்ராஜும், அவருடைய கூட்டாளி மனோகரனும் சேர்ந்து இருவரையும் கடத்துகிறார்கள். குழந்தைகள் கொல்லப்படுகிறார்கள். அவர்களில் அந்தச் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறாள். போலீசார் பிடியிலிருந்து தப்பிச்செல்ல முயன்ற மோகன்ராஜ் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டார். மனோகரனுக்கு இரட்டைத் தூக்கு தண்டனை. ஆனால் அவர், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அண்மையில்தான் அவருக்கு மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

இத்தகைய வழக்குகளில் தண்டனை கிடைப்பது அரிதாகவே இருக்கிறது. சென்னையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் பதிவான 320 வழக்குகளில் 5 வழக்குகளில் மட்டுமே தண்டனை கிடைத்துள்ளதாக ஒரு புள்ளி விவரம் வெளியாகி உள்ளது. எனவே, சிறப்பாக இவ்வழக்கைக் கையாண்ட தமிழக காவல்துறை பாராட்டுக்குரியது.

2017, ஜூன் 4-ந் தேதி உத்தரப்பிரதேசத்தில், வேலை கேட்டு ஒரு எம்.எல்.ஏ. வீட்டுக்குச் சென்றார் 17 வயது பெண் ஒருவர். அவர் உன்னாவ் பகுதியிலிருக்கும் மாகி கிராமத்தைச் சேர்ந்தவர். சென்றவர், வீடு திரும்பவில்லை. ஒரு வாரம் கழித்து வேறோரு இடத்தில் மீட்கப்பட்டார். தன்னை அந்த எம்.எல்.ஏ.வும், அவர் உறவினர்களும் பாலியல் வன்புணர்வு செய்ததாக அந்தப் பெண் கதறியழுது சொல்ல, அவரும் அவர் உறவினர்களும் காவல் நிலையத்துக்கு புகார் கொடுக்கப்போனார்கள். புகார் பதிவாகவில்லை.

அடுத்த வாரம், மீண்டும் அவர் ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்தப் பெண் நீதிமன்றத்தை நாட, தொடர்ந்தன துன்பங்கள். அவருடைய தந்தை சிறையில் அடைக்கப்பட்டார். இறந்தும் போனார். அந்தப் பெண்ணுக்கு ஆதரவாகப் போராட்டங்கள் நடந்தன. ஆனாலும், பெண்ணின் மாமா வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரைச் சந்திக்கச் சென்ற உன்னாவ் பெண்ணின் கார் மீது அடையாளம் தெரியாத லாரி ஒன்று மோதி, விபத்துக்குள்ளானது. அவரின் அத்தை இறந்துபோனார். அந்தப் பெண் படுகாயத்துடன் மருத்துவமனையில்...

தேசிய குற்றப்பிரிவு ஆணையத்தின் புள்ளிவிவரப்படி (2016), இந்தியாவில் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறது. 2016-ம் ஆண்டு இறுதிவரை, இந்தியா முழுக்க போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு விசாரணைக்குக் காத்திருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை 90 ஆயிரம்.

இவையெல்லாம் மிக மிகச் சில துளி உதாரணங்கள். உண்மையில், குழந்தைகளுக்கு நிகழும் பாலியல் வன்முறைகளுக்காக பதிவு செய்யப்படும் அத்தனை வழக்குகளுமே துயரம் தோய்ந்த உண்மைக் கதைகள். நம்மைப் பதறச்செய்யும் கதைகள். 16 வயதுக்கு உட்பட்டவர்களை, ‘குழந்தைகள்’ என வரையறுத்திருக்கிறது நம் சட்டம். சரி... குழந்தைகளுக்கு என்ன தெரியும்? அவர்கள் உலகம் அலாதியானது. சட்டென்று யாரையும் நம்பிவிடுவார்கள். அந்த நம்பிக்கைக்கு உரியவர்கள் சொல்வதைச் செய்வார்கள். இதுதான் குற்றவாளிகளுக்கு வசதியாகிப் போய்விடுகிறது. இதில் கொடுமை என்னவென்றால், பெரும்பாலும் பாலியல் வன்முறைக்கு ஆளாகும் குழந்தைகள் தங்களுக்கு மிக நெருக்கமான உறவினர்கள் அல்லது அக்கம்பக்கத்தினரால்தான் பாதிக்கப்படுகிறார்கள் என்பது.

‘குழந்தையும் தெய்வமும் ஒன்று’ என்கிறது நம் பாரம்பரியம். அந்த தெய்வத்தை, 7 வயது, 5 வயது, 3 வயதுடைய குழந்தையை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தும் கயவர்களை என்ன செய்யலாம்? அவர்களுக்கு என்ன தண்டனை பொருத்தமாக இருக்கும்? ‘போக்சோ’ சட்டத்தில் பதிவு செய்யப்பட்ட சில வழக்குகளின் விவரங்களைக் கேட்டாலே நெஞ்சம் பதறுகிறது. உயிரைவிட்ட குழந்தைகள், உயிரிருந்தும் நடைபிணமாக வாழ்ந்துகொண்டிருக்கும் குழந்தைகள், இந்தப் பிரச்சினையாலேயே அனாதைகளாக்கப்பட்டு தெருவில் விடப்பட்ட குழந்தைகள், மான, அவமானத்துக்கு அஞ்சி பதிவே செய்யப்படாமலிருக்கும் குழந்தைகளின் வழக்குகள்... நினைக்க நினைக்க பதற்றம்தான் அதிகரிக்கிறது.

அண்மையில் கேரளாவில், பாலியல் வன்முறைக்கு ஆளானாள் ஒரு சிறுமி. அதற்குக் காரணமான கயவனை, மெரின் ஜோசப் என்ற பெண் போலீஸ் அதிகாரி சவுதி அரேபியாவரை சென்று பிடித்து, நீதி விசாரணைக்கு நிறுத்தியிருக்கிறார். இன்றைய சூழலில் இவையெல்லாம் மிகப் பெரிய மாற்றங்கள். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. தங்கள் குழந்தைகளை எப்படி பாதுகாக்க வேண்டும் என்கிற பாதுகாப்புணர்வு உண்டாகியிருக்கிறது. இவை இன்னும் அதிகமாக வேண்டும். நெருங்கிய உறவினர்களாகவே இருந்தாலும், தொடுதல் விஷயத்தில் கறாராக இருக்க, குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். எது ‘குட் டச்’, எது ‘பேட் டச்’ என்ற புரிந்துணர்வை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்... குழந்தைகளின் பாதுகாப்புக்கு எதிரான கடினமான சூழலில், போக்சோ சட்டத்தின் ‘மரண தண்டனை’ உட்பட்ட அச்சுறுத்தல்கள் ஒரு புதிய தீர்வைத் தரலாம். ஓரிரு தண்டனைகள் நிறைவேற்றப்படும்போது, குற்றவாளிகள் பயம்கொள்ளலாம். குற்றம் செய்யத் தயங்கலாம். உண்மையில், எதிர்காலத்தில் இந்தச் சட்டம் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அரணாகவே திகழலாம். அதற்காகவே ‘போக்சோ’ சட்டத்தை வரவேற்கலாம்.

திலகவதி, ஐ.பி.எஸ். முன்னாள் காவல்துறை தலைவர்.
Tags:    

Similar News