லைஃப்ஸ்டைல்
செல்ஃபி மோகம்

செல்ஃபி மோகத்தால் மனநோய்க்கு ஆளாகும் செல்போன் பிரியர்கள்

Published On 2019-07-31 03:08 GMT   |   Update On 2019-07-31 03:08 GMT
மனநடத்தை சிகிச்சையோடு பாதிக்கப்பட்டோருக்கு மகிழ்ச்சியளிக்கும் வேறு வழியை அறிந்து அதை பரிந்துரைப்பதும், மாற்று வழியில் ஊக்குவிப்பதுமே செல்ஃபி நோயை குணமாக்கும் என்றார்.
செல்ஃபி மோகம் இன்றைக்கு இளைய தலைமுறையினர் குறிப்பாக பள்ளி மாணவ -மாணவிகள், கல்லூரி மாணவர்களையும் ஆட்டிபடைக்கிறது. இதனால் படிப்பில் கவனத்தை செலுத்தாமல் செல்போனுக்கு அடிமையாகி விடுகின்றனர். கெட்ட செயல்களுக்கு ஆளாகி எதிர்காலத்தை சீரழித்து கொள்கிறார்கள். மேலும் வேலை வாய்ப்பை பெறுகிற போது திறமையின்மையும், தகுதியின்மையாலும் வேலை வாய்ப்பை இழக்கின்றனர்.

தொழில் புரிவோர்கள் செல்ஃபி மோகத்தால் தொழிலில் கவனம் செலுத்தாமல் செல்போனில் கவனத்தை செலுத்தி தொழிலில் தோல்வியடைந்து பெருத்த நஷ்டத்திற்கு ஆளாகின்றனர். அது மட்டுமல்லாமல் அவர்கள் மனநோய்க்கும் ஆளாகி விடுகின்றனர். செல்ஃபி மோகத்தை உலக சுகாதார அமைப்பு மனநோய் என குறிப்பிடுகிறது.

இதை 3 வகைகளாக வகைப்படுத்தி உள்ளனர். ஒரு நாளைக்கு 3 முறை செல்ஃபி எடுத்து பதிவு செய்தால் அது அக்யூட் அல்லது மிதமான மனப்பாதிப்பு. 3 முறை செல்ஃபி எடுத்து அதை போடாமலே விட்டுவிடுவது மாடரேட் அல்லது மத்திம மனப்பாதிப்பு. 6, 7 முறை எடுத்து பதிவிடுவது கிரானிக் என்ற தீவிர மனப்பாதிப்பு.

பதினெட்டு வயது முதல் 25 வரையுள்ள வயதினர் இதற்கு அதிகம் அடிமையாகி உள்ளனர். ஆண்களை விட பெண்களுக்கு இந்த ஆர்வம் அதிகம். ஏனெனில் அவர்களுக்கு தங்களை வெளிப்படுத்தும் ஆவல் மிகுதி.

அவர்கள் தாங்கள் தோற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து செல்ஃபி எடுக்கின்றனர். ஆண்களோ, சுற்றுப்புறத்தை முன்னிறுத்தி எடுக்கின்றனர். இதனால் தான் அபாய விகிதம் அதிகரிக்கிறது.

தம்மை பிறர் அங்கீகரிக்க வேண்டும் அல்லது பாராட்ட வேண்டும் என்ற மனோபாவம் (நார்சிசிஸ்டிக் பெர்சனா லிட்டி) இதற்கு முக்கிய காரணம், லோ செல்ஃபெஸ்டீம் எனப்படும் ஒருவித தாழ்வு மனப்பான்மையும், சமூக, குடும்ப ஆதரவு குறைபாடும் பிற காரணங்கள். பெற்றோர் பிள்ளைகளிடம்அதிக நேரம் செலவழிக்கா விட்டாலும் இவ்வாறு செல்போன் அல்லது செல்ஃபிக்கு அடிமை ஆகிவிடுகின்றனர்.

இதனால் ஓடும் ரயிலுக்கு முன் நின்று, உச்சிப்பாறையின் மேல் நின்று, வாரிச்சுருட்டும் வேகத்தில் வரும் அலை முன்பு நின்று என்று சாகச வேலை செய்கின்றனர். எல்லாம் தனது அங்கீகாரத்துக்காகத்தான்.

இதனால், பிள்ளைகளின் படிப்பு குறையும், பிறரிடம் தொடர்பு குறையும் என்பதால் பெற்றோர் பதறுகின்றனர். என்னிடம் அரசுத்துறையில் உயர் பதவியில் உள்ள ஒருவர் தன் மகனை அழைத்து வந்தார். அவன் செல்ஃபி பாதிப்பில் இருக்கிறானே என்று செல்போனை பிடுங்கினால், டிவியை அடித்து நொறுக்குவது, தந்தையின் அலுவலக கோப்புகளை பிடுங்கி கிழிப்பது என்று மூர்க்கமாகியிருக்கிறான்.

நான் அவனுக்கு அவனது பெற்றோருக்கும் தனித்தனியாக கவுன்சிலிங் அளித்தேன். சி.பி.டி. எனப்படும் மன நடத்தை சிகிச்சை மேற்கொண்டேன். அச்செயலை நிறுத்த ஊக்கப்படுத்தும் ஸ்டாப்மோட்டிவேசன் செய்தேன். படிப்பு பாதிப்பு, நட்பு இழப்பு, விளையாட்டு திறன் குறைவு போன்ற பாதிப்புகளை படிப்படியாக எடுத்துரைத்தேன். இதில் அவன் குணமாகிவிட்டான்.

கடந்த பத்தாண்டுக்கு முன்பு கணினி அடிமைத்தனம் பின்பு இணைய அடிமைதனம் என நீண்டு இப்போது கைபேசி, தன்பட அடிமைத் தனம் வந்து சேர்ந்துள்ளது. இதற்கு தீர்வு காண இன்னும் பல மருத்துவ ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. உலக சுகாதார நிறுவனம் பள்ளி, கல்லூரி மாணவர் களிடையே விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துகிறது.

மனநடத்தை சிகிச்சையோடு பாதிக்கப்பட்டோருக்கு மகிழ்ச்சியளிக்கும் வேறு வழியை அறிந்து அதை பரிந்துரைப்பதும், மாற்று வழியில் ஊக்குவிப்பதுமே செல்ஃபி நோயை குணமாக்கும் என்றார்.

Dr. C.பன்னீர்செல்வன்MBBS., MD, சினேகா மனநல மையம், திருநெல்வேலி
Tags:    

Similar News