லைஃப்ஸ்டைல்
உயிர் காக்கும் முதல் உதவி

உயிர் காக்கும் முதல் உதவி

Published On 2019-07-23 06:39 GMT   |   Update On 2019-07-23 06:39 GMT
திடீர் இதய நிறுத்தம் ஏற்பட்டு சரிந்து விழும் நபருக்கு நாம் உடனே முன்வந்து இந்த உயிர்காக்கும் முதலுதவியை அளித்தால் அவர் உயிர் பிழைக்கும் சாத்தியம் இரண்டு, மூன்று மடங்கு வாய்ப்பு அதிகரிக்கும் என்பதில் சற்றும் சந்தேகம் இல்லை.
திடீர் இதய நிறுத்தம் என்பது உலக அளவில் குறிப்பிடும் அளவுக்கு நடந்து வருகிறது. வளர்ந்த நாடான அமெரிக்காவில் மட்டும் ஆண்டுதோறும் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் திடீர் இதய நிறுத்தம் காரணமாக மரணமடைந்து வருகின்றனர். இங்கிலாந்தில் மருத்துவமனைக்கு வெளியே நடக்கும் ‘இதய நிறுத்தம்’ அடைந்த நபர்களில் பத்தில் ஒருவரே மருத்துவமனையில் உயிர் பிழைக்கும் வாய்ப்பு உள்ளது. நமது இந்தியாவில் இதுபோன்ற புள்ளி விவரங்கள் இல்லாத போதும் இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

மாரடைப்பு என்பதும் இதய நிறுத்தம் என்பதும் வேறுவேறு. இரண்டும் ஒன்றல்ல. மாரடைப்பு என்பது இதயத்திற்கான ரத்த ஓட்டம் அதன் ரத்த நாளங்களில் தடைபடுவதால் ஏற்படுவதாகும். மாரடைப்பில் நெஞ்சு வலி, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறி தோன்றி பாதிக்கப்பட்ட நபரே மற்றவர்களிடம் கூறுவர். அவர்கள் ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்படாவிட்டால் மரணம் நிகழக் கூடும்.

ஆனால் இதய நிறுத்தம் என்பது இதய மின் ஓட்டம் திடீர் என்று தடைபடுவதாகும் அப்போது சரிந்து விழுவர். உடன் முதலுதவியை தொடங்காவிட்டால் ஒவ்வொரு நிமிடமும் 7முதல்10 சதவீதம் வரை மரணம் நிகழ வாய்ப்புண்டு. 10 நிமிடங்களுக்கு மேற்பட்டு மருத்துவ உபகரணங்களை கொண்டு மருத்துவ உதவியை தொடங்கி, இதய துடிப்பை மீண்டும் கொண்டு வந்தாலும் மூளைசாவு ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகம்.எனவே வீட்டிற்கு ஒருவர் உயிர்காக்கும் முதலுதவியைப் பற்றி கட்டாயம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியமாகும்.

இந்த உயிர்காக்கும் முதலுதவிக்கு சி.பி.ஆர். என்று அழைக்கப்படும் “இதய நுரையீரல் இயக்க மீட்பு” என்று பெயர். இதற்கு எந்த மருத்துவ உபகரணமும் தேவையில்லை. இரண்டு கைகளும் உடனே செயல்படுத்த மனம் மட்டுமே போதும். நமது வீட்டிலோ அல்லது வெளியிலோ ஒருவர் திடீரென்று மயக்கமடைந்து சரிந்து தரையில் விழுந்தால், அந்த நபரை மல்லாக்கப்படுக்க வைத்து அவரது இரண்டு தோள்களை பலமாக தட்டி “நீங்கள் ஓகே வா” என்று சத்தமாக கேட்க வேண்டும்.

அந்த நபர் எந்தவித செய்கையும் இல்லாமல் இருந்தால் அருகில் இருப்பவர்களை உடனே உதவிக்கு கூவி அழைக்க வேண்டும். உதவிக்கு வரும் நபரை உடனே கைப்பேசியில் 108-ஐ அழைத்து ஆம்புலன்சை வரச்சொல்ல வேண்டும். பயிற்சி எடுத்திருந்தால் கழுத்தில் நாடி துடிப்பு உள்ளதா என்பதையும், மார்பு சுவாசத்தால் விரிவடைகிறதா என்பதைப் பார்க்க வேண்டும். இதற்கு 5 முதல் 10 வினாடிகளுக்கு மேல் எடுத்துக்கொள்ளக்கூடாது.

அந்த நபர் பேச்சு மூச்சு இன்றி தொடர்ந்து இருந்தால் அவரின் அருகில் மண்டியிட்டு இதய இயக்க மீட்பை தொடங்க வேண்டும். இதற்கு அவரது நெஞ்சு குழியில் நமது வலது கை இரண்டு விரல்களை செங்குத்தாக வைத்து இடது கையை அதற்கு மேல் விரல்களை அகட்டி வைக்க வேண்டும். கையின் அடிபாகம் மயக்கமடைந்தவரின் நெஞ்சு தட்டை எலும்பில் இருப்பதை உணர முடியும். நமது வலது கையை எடுத்து இடது கையின் மேல் வைத்து விரல்களை கீழ் உள்ள விரல்களின் உள்ளே நுழைத்து இறுக்கிப் பிடிக்க வேண்டும். முழங்கையை மடிக்காமல், நமது தோள்பட்டையிலிருந்து அழுத்தத்தை கொடுக்க வேண்டும். அவரது நெஞ்சு 2 அங்குலம் வரை சுருங்குமாறு அழுத்த வேண்டும். இவ்வாறு 30 தடவை செய்ய வேண்டும்.



அமெரிக்க இதய சங்கத்தின் வழிகாட்டுதல் படி, 30 நெஞ்சு அழுத்ததிற்கு பிறகு இரண்டு “மீட்பு மூச்சு காற்று” வழங்க வேண்டும். இதற்கு அந்த நபரின் தாடையை உயர்த்தி, முன் தலையை பின்புறம் நகர்த்தி நமது வாயை அவரது வாயில் பொருத்தி நமது உள் இழுத்த மூச்சை இரண்டு முறை செலுத்த வேண்டும். இந்த செயலானது பயிற்சி பெற்றவர்களுக்கே பெரும்பாலும் கடினம் என்பதாலும், நமது இந்திய கலாசாரத்திற்கு பொருந்தி வராது என்பதாலும் மீட்பு மூச்சு கொடுப்பது கைவிடப்பட்டு, நெஞ்சு அழுத்தம் மட்டுமே 30, 30 ஆக ஆம்புலன்ஸ் வரும் வரை கொடுத்து வர வேண்டும் கொடுப்பவருக்கு கஷ்டமேற்பட்டு ஓய்வு தேவைப்பட்டால், அருகில் உள்ள மற்றவர் ஒருவர் நெஞ்சு அழுத்தத்தை தொடர வேண்டும்.

நெஞ்சு அழுத்தம் தொடர்ந்து கொடுப்பதால் ஒவ்வொரு அழுத்தத்தின் போதும் இதயம் அழுத்தப்பட்டு ரத்தம்மூளை மற்றும் மற்ற உறுப்புகளுக்கு செலுத்தப்படும். ஒரு அழுத்தத்திற்கும் அடுத்த அழுத்தத்திற்கும் உள்ள இடைவெளியில் இதயம் விரிவடைந்து கை, கால், மார்பு, வயிறு ஆகிய பாகங்களில் இருந்து ரத்தம் இதயத்திற்கு வந்து சேரும். மேலே விவரிக்கப்பட்ட இதய செயல் மீட்பு முறை புரிந்துகொள்வதற்கு சற்று சிரமாக தோன்றினால் இந்திய மருத்துவ சங்கத்தின் சஞ்சீவன் கமிட்டியின் “உயிர்காக்கும் முதலுதவி” என்ற 4 நிமிட விழிப்புணர்வு குறும் படத்தை யூ டியூப்பில் பார்த்து நன்கு புரிந்து கொள்ளலாம்.

இதில் திரைபட நடிகர்கள் விஜய் சேதுபதி, சத்யராஜ் ஆகிய இருவரும் இலவசமாக தோன்றி இதன் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளார்கள். இது தமிழில் எடுக்கப்பட்டு இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. திடீர் இதய நிறுத்தம் ஏற்பட்டு சரிந்து விழும் நபருக்கு நாம் உடனே முன்வந்து இந்த உயிர்காக்கும் முதலுதவியை அளித்தால் அவர் உயிர் பிழைக்கும் சாத்தியம் இரண்டு, மூன்று மடங்கு வாய்ப்பு அதிகரிக்கும் என்பதில் சற்றும் சந்தேகம் இல்லை. நின்ற இதயத்தை மீண்டும் துடிக்க வைப்போம். நன்மை பயக்கும் விலை மதிப்பற்ற ஆயுளை நீடிக்க செய்வோம். ஒவ்வொரு உயிரும் வீட்டிற்கும், நாட்டிற்கும் அவசியம். முதலுதவி அளிக்கும் நமக்கும் ஆத்ம திருப்தி ஏற்படும்.

மரு. எம்.பாலசுப்பிரமணியன் தலைவர், சஞ்சீவன் கமிட்டி, இந்திய மருத்துவ சங்கம்,புதுடெல்லி
Tags:    

Similar News