லைஃப்ஸ்டைல்
ஊமைக்காயங்களே உயர்வுக்கு தூண்டுதல்கள்...

ஊமைக்காயங்களே உயர்வுக்கு தூண்டுதல்கள்..

Published On 2019-07-09 03:05 GMT   |   Update On 2019-07-09 03:05 GMT
பிறர் உங்களுக்குள் ஏற்படுத்திய காயங்களை எண்ணிக் கவலைப்படாதீர்கள். அவை யாவும் காலம் உங்களுக்கருளிய பாடங்கள். எனவே உங்களை பக்குவப்படுத்திய காயங்களுக்கு நன்றி சொல்லுங்கள்.
இதயத்தோலை உரித்தெடுப்பதுபோல் சிலர் நம்மை காயப்படுத்திவிடுவார்கள். குத்தீட்டி போன்ற வார்த்தைகளால் அல்லது கீழ்த்தரமான செயல்களால் பிறரை ரணப்படுத்தி வேடிக்கை பார்ப்பதில் சிலருக்கு அலாதி பிரியம்.

தெருவில் சும்மா ஓடிக் கொண்டிருக்கின்ற நாய் மீது கல்லெடுத்து எறிகின்றவனுக்குப் பிற உயிர்களின் வாதை புரியாது. கையில் ஒரு குச்சி கிடைத்துவிட்டால் அதைக் கொண்டு சிற்றெறும்புகளைக் குத்தி மகிழ்கின்றவனுக்கு ‘ஜீவ காருண்யம்’ என்றால் என்னவென்றே தெரியாது.

காரணமே இல்லாமல் உங்களைக் காயப்படுத்துகிறார்களா? அவர்களுக்கு உங்கள் மீது காழ்ப்புணர்ச்சி என்று அர்த்தம். உங்கள் வளர்ச்சி மற்றும் மகிழ்ச்சியின் மீது அவர்களுக்கு வயிற்றெரிச்சல் என்று பொருள்.

உங்கள் மீது பொறாமை கொள்வதற்கு ஒருவர் கூட இல்லையென்றால் நீங்கள் வாழ்வதே வீண் அல்லவா! எனவே பொறாமையினால் உங்களை காயப்படுத்துகின்றவர்களுக்கு நீங்கள் நன்றி சொல்லுங்கள். ஏனெனில் அவர்கள் ஏற்படுத்தும் காயங்கள் உங்களை மென்மேலும் வலுப்படுத்தும்; வேகப்படுத்தும். உங்கள் வளர்ச்சியை அவர்கள் கண்முன்னே பலமடங்கு பெருகப் பண்ணும்.

அற்ப சிந்தை கொண்டவர்கள் அற்பமாகத்தான் நடந்து கொள்வார்கள். அவர்களின் வாக்கும் போக்கும் அப்படித்தான் இருக்கும். தரக்குறைவாகப் பேசுவார்கள். விஷமத்தனமாக விமர்சிப்பதில் மனநிறைவு கொள்வார்கள்.

நேர்மையற்று விமர்சிக்கின்ற வாய்களுக்கு நாம் பூட்டுப்போட முடியாது. நீதியற்ற நெஞ்சங்களில் வஞ்சம் நிறைந்திருக்குமே அன்றி, துளியளவும் நன்றியுணர்வு இருக்காது. அவர்களைப் பற்றியெல்லாம் நாம் கவலைப்பட்டுக்கொண்டிருந்தால் நம் மனம்தான் பலவீனப்பட்டுப் போகும் வாழ்வின் வளர்ச்சிக் குன்றிவிடும்.

எனவே பொல்லாதாரின் வார்த்தைகளைத் தூசியைத் தட்டிவிடுவதுபோல் தட்டிவிட்டுச் சென்றால்தான், அவை நம் மனதில் ஒட்டிக் கொள்ளாமல் வாழ்வின் வளர்ச்சியில் நாம் கவனம் செலுத்த முடியும்; நிம்மதியாகவும் வாழ முடியும்.

உங்களை வீழ்ச்சியடையச் செய்வதற்காகவே சிலர் உங்களை வேதனைப்படுத்த முயற்சிப்பார்கள். உங்கள் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே பாதைகளில் முட்களைப் பரப்புவார்கள். அலட்டிக் கொள்ளாமல் அவற்றைத் தாண்டிச் செல்லுங்கள். உங்கள் வளர்ச்சியின்பால் நீங்கள் பெறுகின்ற மகிழ்ச்சியும், தொடர் வெற்றிகளுமே அவர்களுக்கு நீங்கள் கொடுக்கின்ற மாபெரும் தண்டனையாக இருக்கும்.

அதே சமயம் நம்முடைய செயற்பாடுகளோ, வார்த்தைகளோ யாரையும் சிறிதளவுகூட புண்படுத்திவிடக்கூடாது என்பதில் நாம் மிகமிக கவனமாக இருக்கவேண்டும். நமது சுயமரியாதை நமக்கு எவ்வளவு முக்கியமோ அதேபோல் மற்றவர்களின் தன்மானம் அவர்களுக்கு முக்கியம் என்பதை கருத்தில் வைத்துக் கொண்டால் பிறரை அவமதிக்கும் எண்ணம் வராது.

அதியமான் நெடுமான் அஞ்சியை நேரில் கண்டு பரிசில் பெற பெருஞ்சித்திரனார் சென்றார். காடு, மலைகளைக் கடந்து தன்னிடம் வந்த பெருஞ்சித்திரனாரை பார்க்காமலேயே அவருக்கு வேறு ஒருவர் மூலம் பரிசு கொடுத்தனுப்பினான் அதியமான். அச்செயலை அவமானமாகக் கருதி தன்மானம் காக்க அப்பரிசை ஏற்க மறுத்துவிட்டார் பெருஞ்சித்திரனார்.

யாங்கு அறிந்தனனோ தங்குருங் காவலன்

காணாது ஈத்த இப்பொருட்கு யானோர்

வாணிகப் பரிசிலன் அல்லன் என்று அவர் பாடிய பாடல் புறநானூறில் இடம் பெற்றுள்ளது.

நாம் ஒருவருக்கு ஓர் உதவியைச் செய்கின்ற போது, பெறுகின்ற நபரை அலட்சியமாகப் பார்ப்பதும், ஏனோதானோவென்று மரியாதையின்றிக் கொடுப்பதும் தர்மம் ஆகாது. அப்படிச் செய்வதைவிட செய்யாமலிருப்பது உத்தமம். எதையும் மகிழ்ச்சியுடன் செய்ய வேண்டும். யாரையும் மரியாதையுடன் நடத்த வேண்டும். நம்மிடம் உதவி கேட்டு ஒருவன் வந்துவிட்டான் என்பதற்காக, நமக்கு ஓர் அடிமை சிக்கிக்கொண்டான் என்று எண்ணிவிடக்கூடாது. அவமானப்படுத்துதல் என்பது படுகொலைக்குச் சமம்.

நாம் எவ்விதம் நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறோமோ அப்படியேதான் மற்றவர்களும் விரும்புவார்கள் என்ற உணர்வு நமக்கு வேண்டும். மனம் செம்மையாக இருந்தால் அதில் பிறக்கின்ற எண்ணங்களும் செம்மையானவையாக இருக்கும். அவற்றிலிருந்து தீமைகள் ஒருபோதும் பிறப்பதில்லை.



வசைபாடும் வாய்களுக்கு வாழ்த்திப் பாடத் தெரியாது. வாழ்த்துகின்ற நெஞ்சங்களுக்கு வசைபாடத் தெரியாது. கலீல் ஜிப்ரானைவிட பத்து வயது மூத்தவள் மேரி எலிசபெத். இருவரும் நெருங்கிப் பழகியவர்கள். ஒருவரை ஒருவர் தீவிரமாகக் காதலித்தவர்கள். மனரீதியாக மட்டுமல்ல, உடல் ரீதியாகவும் ஒருவரை ஒருவர் ரசித்துக் களித்தவர்கள்.

ஜிப்ரானின் படைப்புகளை உலகளாவிய தரத்துக்கு உயர்த்த வேண்டும் என்பதில் ஆர்வமும், அக்கறையும் காட்டியவள் மேரி. உலக இலக்கியங்கள், மதம் தொடர்பான விஷயங்கள், ஆழமான தத்துவங்கள் ஆகியவற்றைப் பற்றியெல்லாம் மணிக்கணக்காக அவர்கள் விவாதிப்பார்கள். நீட்ஷேவையும், வில்லியம் பிளேக்கையும் அவருக்கு புரியும்படிச் சொன்னவளும் அவள்தான். ஜிப்ரானின் கையெழுத்துப் பிரதிகள் அனைத்தையும் முறைப்படிச் செப்பனிட்டுச் சீர்படுத்தி, அவற்றை உயர்த்தி நிறுத்தியவளும் அவள்தான்.

எத்தனை அற்புதமான அன்புறவு!

ஆனால் திடீரென மேரிக்கு அவளது உறவினர் ஒருவருடன் திருமணம் ஏற்பாடானது. அவள் என்ன செய்தாள்? ‘உன்னைவிட நான் பத்து வயது மூத்தவள். உன்னோடு குடும்பம் நடத்த இயலாது’ என்று ஜிப்ரானுக்குக் கடிதம் எழுதினாள். அதற்கு ஜிப்ரான் ‘உன் உடலைப் பார்க்குமுன்னே உன் மனதைப் பார்த்தவன் நான். உன்னைவிட நெருக்கமானவர் எனக்கு யாருமில்லை இருக்கவும் முடியாது. நீ ஏழுமுறை வெவ்வேறு ஆடவரை திருமணம் செய்துகொண்டாலும் சரி நம் அன்புறவு அறுபடாமல் அர்த்தமுள்ளதாகவே இருக்கும்’ என்று பதில் எழுதினார்.

அதன் பிறகு ஐந்து ஆண்டுகள் மட்டுமே ஜிப்ரான் உயிர் வாழ்ந்தார். எனினும் தனது மனதைவிட்டு அவர் மேரியை இறக்கி வைக்கவே இல்லை.

இறுதியாக மேரிக்கு ஜிப்ரான் எழுதிய கடிதத்தின் கடைசி வரி, ‘கடவுள் உன்னை நேசிப்பாராக’ என்பதுதான்.

வாழ்த்துகின்ற உள்ளம் எப்போதும் வாழ்த்திக்கொண்டுதான் இருக்கும். காயப்பட்டுத் துடிக்கின்ற தருணங்களிலும் அது தன்னிலை இழந்துவிடாது; யாரையும் திட்டித் தீர்க்காது.

போர்க்களத்தில் ஏற்படுகின்ற காயங்கள் வீரனுக்கு அழகானவை. உள்ளத்தில் ஏற்படுகின்ற காயங்கள் வாழ்க்கைக்குப் பாடமானவை.

காயங்களை வெறும் காயங்களாக நாம் எண்ணிவிடக்கூடாது. ஏனெனில், அவை நமக்கு ஞானத்தைப் போதிக்கின்றன. மனிதர்களின் சுயரூபங்களை நமக்கு அடையாளம் காட்டுகின்றன. வாழ்வின் யதார்த்தங்களை நமக்கு விளக்குகின்றன.

நம்முடைய அலட்சியப் பார்வைகள், மிதமிஞ்சிய பெருமைப் பேச்சுகள் மற்றவர்களை எரிச்சலூட்டி பொல்லாத பகையை உருவாக்கிவிடக்கூடும். எனவே எச்சரிக்கை அவசியம்.

யார் மனதையும் புண்படுத்தாமல் பேசுவோம். யார் உணர்வுகளையும் காயப்படுத்தாமல் பழகுவோம். மனித நேயத்துடன் உறவு பாராட்டுவோம்.

பிறர் உங்களுக்குள் ஏற்படுத்திய காயங்களை எண்ணிக் கவலைப்படாதீர்கள். அவை யாவும் காலம் உங்களுக்கருளிய பாடங்கள். எனவே உங்களை பக்குவப்படுத்திய காயங்களுக்கு நன்றி சொல்லுங்கள். தெளிந்த சிந்தனையுடன் எழுந்து நில்லுங்கள். அப்படியெனில், உங்கள் வாழ்வில் எந்நாளும் சுகநாளே.

-கவிஞர் தியாரூ. (தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்றவர்)
Tags:    

Similar News