லைஃப்ஸ்டைல்
பாலியல் தொல்லைகளை விசாரிக்கும் குழுக்கள்

பாலியல் தொல்லைகளை விசாரிக்கும் குழுக்கள்

Published On 2019-07-05 03:41 GMT   |   Update On 2019-07-05 03:41 GMT
பணிபுரியும் அலுவலகங்களில் பாலியல் தொல்லைகள் இருந்தால் இன்டர்னல் கம்ப்ளெயின்ட் கமிட்டிகளை பயன்படுத்திக் கொண்டு உரியவர்களுக்கு பெண்கள் தண்டனை வாங்கித் தரலாம்.
பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் தொல்லைகள் அதிகம் இருப்பதாக பல ஆய்வுகள் சொல்கின்றன. அதற்காக ஒவ்வொரு அலுவலகத்திலும் ‘இன்டர்னல் கம்ப்ளெயின்ட் கமிட்டிகி’ என்ற ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் உடன் பணிபுரிபவர்களால் ஏற்படும் பாலியல் தொல்லை பற்றி புகார் அளிக்கலாம்.

கமிட்டியின் விதிமுறைப்படி காவலர்கள், வழக்கறிஞர்கள், குற்றம் சுமத்தப்பட்டவர் இவர்கள் முன்னிலையில் புகார் கொடுத்த பெண் விசாரிக்கப்பட மாட்டார். இன்டர்னல் கம்ப்ளெயின்ட் கமிட்டிக்கு அடுத்த நிலை, ‘லோக்கல் கம்ப்ளெயின்ட் கமிட்டி‘ என்ற ‘உள்ளூர் புகார் குழு‘. இந்த குழு, அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுகிறது. இதற்கென பிரத்யேக அலுவலர்கள் உள்ளனர்.

பெரும்பாலான லோக்கல் கம்ப்ளெயின்ட் கமிட்டிகள் மாவட்ட கலெக்டர் தலைமையில் இயங்குகின்றன. 10-க்கும் குறைவான பெண் பணியாளர்கள் வேலை செய்யும் இடங்களில், சட்டப்படி கமிட்டி அமைக்க தேவையில்லை. எனவே, அவர்கள் மற்றும் கட்டுமான தொழிலில் சித்தாளாக பணிபுரியும் பெண்கள், துணிக்கடைகளில் விற்பனையாளர் வேலை பார்க்கும் பெண்கள், வீட்டு வேலை செய்பவர்கள் என இவர்களெல்லாம் பாலியல் தொல்லைக்கு ஆளானால் மாவட்டம் தோறும் இயங்கும் லோக்கல் கம்ப்ளெயின்ட் கமிட்டியில் நேரடியாக புகார் அளிக்கலாம்.

அல்லது, கிராம நிர்வாக அலுவலர், தாசில்தார் மூலமாகவும் புகார் மனு கொடுக்கலாம். அது 7 நாட்களுக்குள் லோக்கல் கம்ப்ளெயின்ட் கமிட்டிக்கு சென்றடையும். புகார்கள் நிரூபிக்கப்பட்டால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு தற்காலிகமாக பணி நீக்கம், பதவி உயர்வு ஒத்திவைப்பு, பணியிட மாற்றம் போன்ற தண்டனைகள் வழங்கப்படும்.

காழ்ப்புணர்ச்சியால் பெண் ஊழியர் பொய் புகார்கள் கொடுத்தது உண்மையென்று நிரூபணமானால் மேற்குறிப்பிட்ட தண்டனைகள் அந்தப் பெண்ணுக்கு வழங்கப்படும். எனவே பணிபுரியும் அலுவலகங்களில் பாலியல் தொல்லைகள் இருந்தால் மேற்கண்ட கமிட்டிகளை பயன்படுத்திக் கொண்டு உரியவர்களுக்கு பெண்கள் தண்டனை வாங்கித் தரலாம்.
Tags:    

Similar News