லைஃப்ஸ்டைல்
கோப்பு படம்

சமுதாயத்தில் கரும்புள்ளியாக இருக்கும் வரதட்சணை கொடுமை

Published On 2019-04-30 03:13 GMT   |   Update On 2019-04-30 03:13 GMT
முன்னேறி வரும் பெண்கள் சமுதாயத்தில் ஒரு கரும்புள்ளியாக இருப்பது வரதட்சணை கொடுமையாகும். எவ்வளவு தீவிரமான நடவடிக்கையை மேற்கொண்டாலும் வரதட்சணையை ஒழிக்க முடியவில்லை.
முன்னேறி வரும் பெண்கள் சமுதாயத்தில் ஒரு கரும்புள்ளியாக இருப்பது வரதட்சணை கொடுமையாகும். எவ்வளவு தீவிரமான நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டாலும் வரதட்சணையை ஒழிக்க முடியவில்லை. சட்டங்களும், திட்டங்களும் கண் துடைப்பாகத்தான் இருக்கின்றனவே ஒழிய, பெண்களுக்கு முழு உரிமையும், பாதுகாப்பும் இல்லாமல் இருப்பது மிகவும் வருந்தத்தக்கது.

பண்டைய காலத்தில் ‘கொடை‘ என்ற பெயரால் பண பலத்தை காட்டி பெருமையை நிலைநாட்டினர். இவை நாளடைவில் சமுதாயத்தில் தானமாகவும், சீதனமாகவும், வரதட்சணையாகவும் உருவெடுத்தன. மேலும் பெண் வீட்டாரின் பெருமையை காட்ட சீதனங்கள் வழங்கப்பட்டன. மணமகனின் கல்வி நிலை உயர்ந்திருந்தால், செல்வ வீட்டு மணமகளின் பெற்றோர் அதற்கேற்ற வகையில் சீர் தந்து தன் பெருமையை காட்டிக் கொள்வது இன்றும் நடந்து வருகின்ற உண்மையாகும்.

‘ஏன் என்ற கேள்வி‘ எழாதவரை எதற்கும் விடிவில்லை. பெண் சமுதாயமும் அவ்வாறே ஏனென்ற கேள்வி எழுப்பாமல் எதற்கும் தலையாட்டி வீட்டுக்குள்ளே சிறைப்பட்டு அச்சம், நாணம், மடம் என்ற கடிவாளமிட்ட வாழ்க்கையால் வரன்முறையில் வாழ்ந்து வந்ததினால் தான் பெண் சமுதாயம் முன்னேறாமைக்கும், வரதட்சணை கொடுமைக்கும் காரணமாக இருந்தது.

இன்று முதல்வர், கலெக்டர், விமானி, விண்வெளி உள்ளிட்ட பல துறைகளில் பெண்கள் இருந்தாலும் கூட பெண்ணிற்கு இழைக்கப்படும் தீமைகள் எங்கோ ஒரு சில இடங்களில் மட்டும் தட்டிக் கேட்கப்படுகின்றன. பெண்ணே, பெண்ணிற்கு எதிரியாகவும் உள்ளார். மாமியார் கொடுமை இதற்கு எடுத்துக்காட்டாய் அமைகின்றது. மணமான பெண் பிறந்த வீடே கதியாக திருப்பி அனுப்பப்படுவதற்கும் புகுந்த வீட்டில் பெண்களுக்கு இன்னல்கள் இழைக்கப்படுவதற்கும் அரசு கடுமையான தண்டனைகள் வழங்கி வருகின்றன. இருந்த போதிலும் ஆங்காங்கே கொடுமைகள் தலைவிரித்தாடுகின்றன.

பெண்களின் நலன்களுக்கும், பாதுகாப்பிற்கும் பெண்கள் நல உரிமை கழகம், மகளிர் முன்னேற்றக் கழகம் முதலியன அமைந்துள்ளன. இத்தகைய அமைப்புகள் இந்த சிக்கலுக்கு ஓரளவு தீர்வு காண்கிறது. வரதட்சணைக்கு பணம் கொடுக்க வேண்டும் என்பதால் பெண்களுக்கு கல்விக்கென பெற்றோர் பணம் செலவழித்திட தயங்குகின்றனர். பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினாலும், வரதட்சணை குறித்து எந்த மாறுபாடும் ஏற்படவில்லை.

ஒவ்வொரு ஆண்மகனும் தன்னளவில் சமுதாய பொறுப்புணர்ச்சியுடன் செயல்பட்டு, வரதட்சணை கொடுமையை எதிர்க்கலாம். வறுமையின் நிலையில் வாழும் குடும்பங்களில் ‘வரதட்சணை கொடுமை‘ கோரமாக தாண்டவமாடுகிறது. பெண்ணை பெற்றவர் கடன் வாங்கியாவது திருமணம் நடத்தி வைத்து, திருமணம் முடிந்த சில நாட்களுக்குள்ளாகவே மணமகன் கேட்டது கிடைக்காததால் மணமகளை வீட்டிற்கு விரட்டியடிப்பதும், அதனால் அங்கு தந்தை மாரடைப்பால் இறப்பதும் சில குடும்பங்களில் நிகழாமல் இல்லை. அதைபோல் வல்லமை பெற்ற மாமியார்களால் எரிவாயு அடுப்பில் எரிந்து பெண் சாம்பல் ஆவாள். வரதட்சணை கொடுமையின் உச்சக்கட்டம் இதுவே ஆகும்.

சமுதாயத்தில் வரதட்சணை என்னும் வளர்ந்து வரும் தீயை அணைக்க முன்வர வேண்டும். வருங்கால சமுதாயம் இளைஞர்கள் கையில் உள்ளது என்பதை அனைவரும் அறிவோம். இளைஞர்கள் நினைத்தால் சாதித்துக் காட்ட முடியும். எனவே இளைஞர்களே, இதோ நீங்கள் விழித்திட வேண்டிய காலம். வருங்கால இந்தியாவை காப்போம், முயற்சி எடுத்து முன்னேற்றம் அடைவோம், வரதட்சணை கொடுமையில் இருந்து விடுபட்டு புதிய உலகை படைப்போம். 
Tags:    

Similar News