லைஃப்ஸ்டைல்

மன்னிப்பின் மாண்பு...

Published On 2019-04-08 02:47 GMT   |   Update On 2019-04-08 02:47 GMT
வாழ்வில் இன்பமும், அமைதியும் மலரவும் என்ன செய்யவேண்டும்? தவறிழைத்தவரை மன்னிக்கும் மன நிலையை ஒவ்வொருவரும் வளர்த்துக்கொள்ள வேண்டும்; சமூக அமைதிக்கு மன்னிப்பு ஒன்று தான் மருந்து.
இன்றைய தனிமனித உறவு நிலைகள், குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை போன்றவற்றில் ஏற்படும் பல சிக்கல்கள், வன்முறைகள், கலவரங்கள், உயிர்ப்பலிகள் போன்றவற்றிற்கான மூல காரணம் பழிவாங்கும் உணர்ச்சியாகும். தனக்கு தீமை செய்த ஒருவனை, தனக்கு அவமரியாதை ஏற்பட காரணமான ஒரு மனிதனை, பாதிக்கப்பட்டவன் எவ்வாறேனும் பழிவாங்க துடிக்கிறான். இதன் விளைவு தான் சமூகத் தீமைகள் மற்றும் வன்முறைகளின் பெருக்கம். இவற்றை தவிர்க்கவும் வாழ்வில் இன்பமும், அமைதியும் மலரவும் என்ன செய்யவேண்டும்? தவறிழைத்தவரை மன்னிக்கும் மன நிலையை ஒவ்வொருவரும் வளர்த்துக்கொள்ள வேண்டும்; சமூக அமைதிக்கு மன்னிப்பு ஒன்று தான் மருந்து.

அமெரிக்காவில் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் ஆய்வு நடத்தியதில், நரம்புக் கோளாறு, கோபம் முதலிய குறைபாடுடையவர்கள் தாம் பழிவாங்கும் பண்புடையவர்களாக இருக்கின்றனர். மன்னிக்கும் பண்புடையவர்கள் மகிழ்ச்சியும், உடல் நலமும் உடையவர்களாக வாழ்கின்றனர் என்ற முடிவு வெளிப்பட்டுள்ளது. மன்னிக்கும் மாண்புடைய மனிதர்களின் இதயம், மூளை, நரம்பு மண்டலம் முதலியன சிறந்த முறையில் இயங்குகின்றன என்ற உண்மையும் வெளிப்பட்டது.

ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பிரட் லஸ்கின் பல்லாண்டுகள் செய்த ஆய்வின் முடிவில், மன்னிக்கும் பண்பு ஒருவரின் உடல் நலத்தில் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தியது என்று கண்டறிந்தார். அரசியல், சமய ரீதியான முரண்பாடுகளினால் கொல்லப்பட்டவர்களின் வாரிசுகளிடையே பேராசிரியர் பிரட் லஸ்கின் நடத்திய ஆய்வில் வியத்தகு முடிவுகளைக் கண்டறிந்தார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு மன்னிக்கும் பண்பின் தேவையை நன்கு உணர்த்திய பின்னர், காலப்போக்கில் அவர்கள் மனநிலைகளில் கோபம், பதற்றம் ஆகியவை குறைந்து, அவர்களிடம் நம்பிக்கை பண்பு துளிர்த்ததையும் மன அழுத்தம், அதன் விளைவான நோய்களின்றி அவர்கள் வாழ்ந்ததையும் பிரட் லஸ்கின் சான்றுகளுடன் வெளியுலகிற்கு உணர்த்தினார். எனவே மன்னிக்கும் மாண்பு எவரிடம் இருக்கிறதோ அவர் நோயின்றி, மகிழ்ச்சியுடன் நீண்ட காலம் வாழ முடியும் என்பதை இந்நூற்றாண்டின் ஆய்வுகள் விளக்குகின்றன.

வாழ்வியல் அறங்களைச் சிறப்பாக எடுத்துரைத்த வள்ளுவர் மன்னிப்பின் மாண்பினைப் பல குறட்பாக்களில் விளக்குகிறார். தீமை செய்த ஒருவனை தண்டிப்பதால் மனத்தில் ஒரு வகை நிறைவு, மகிழ்ச்சி ஏற்படும் என்பது உண்மைதான்; ஆனால் அந்த மகிழ்ச்சி ஒரே நாளில் முடிந்து விடும். தண்டிக்கப்பட்டவன் மீண்டும் ஏதாவது தீமை செய்து விடுவானோ என்ற அச்சம் அதன் பின்னர் மனத்தை உறுத்திக்கொண்டே இருக்கும்; அதற்கு மாறாக, தீமை செய்தவனை மன்னித்து விட்டால், வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியும் புகழும், நிலைத்திருக்கும் என்ற கருத்து தோன்றும்படி,

“ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் பொறுத்தார்க்கு
பொன்றும் துணையும் புகழ்”

என்ற குறட்பாவினைத் தந்திருக்கிறார் வள்ளுவர். ஒருவரை மன்னிப்பது இயலாமையின் குறியீடு அல்ல; அது வீரம், தகுதியின் குறியீடாகும். உலகம் சீராக தடையின்றி இயங்குவதற்கு தேவையான அறக்கருத்துகளைக் கூறும் ஒரு கலித்தொகைப் பாடலில், “பொறையெனப் படுவது போற்றாரைப் பொறுத்தல்” என்று கூறப்படுகிறது. பொறுமை, மன்னித்தல் போன்ற பண்புகள் வலிமையுடையவரிடம் காணப்பட்டால், அது பண்புகளிலெல்லாம் மேம்பட்ட சிறந்த பண்பாகிறது என்று நாலடியார் கூறுகிறது.

“ஒறுக்கும் மதுகை உரணுடை யாளன்
பொறுக்கும் பொறையே பொறை”

என்பது நாலடியார் கூறும் கருத்து.

மன்னிப்பின் மாண்பினைச் சிலப்பதிகாரம் நன்கு உணர்த்துகிறது. தன்னைப் பிரிந்து மாதவியின் இல்லம் சென்று தங்கியிருந்து திரும்பிய கணவன் கோவலன் தன் செயல் பற்றிய குற்றவுணர்வினால் வருந்தும் போது, கண்ணகி எந்த விதமான கோபத்தையும் முகத்தில் காட்டாமல், தன் காற்சிலம்புகளை எடுத்துச் “சிலம்புள கொண்ம்” என்று கூறுகிறாள். இந்த மன்னிப்பினால் கோவலன் மனம் மேலும் துன்புற்று, பண்பட்டு இழந்த பொருள்களை மீட்க வேண்டும் என்ற உந்துதல் பெறுகிறான். மன்னிப்பினால் கண்ணகியின் மாண்பும் உணர்கிறது; கோவலனும் தன் மனத்தை நல்வழியை நோக்கித் திருப்புகிறான்.

கம்பராமாயணத்தின் இறுதிப்பகுதியில் மன்னிப்பின் சிறப்பு கூறப்படுகிறது. போர்கள் முடிந்த பின் சீதை அக்கினிப்பிரவேசம் செய்து மீண்ட பின் தசரதன் விண்ணுலகினின்று தோன்றி, சீதையிடம், ராமன் மீது சீற்றம் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறான். சீதையின் தூய்மையையும், சிறப்பினையும் உலகிற்கு காட்டவே ராமன், சீதையை அக்கினிப் பிரவேசம் செய்யத் தூண்டினான் என்று கூறி, “கங்கை நாடுடைக் கணவனை முனிவுறக் கருதேல்” என்று தசரதன் சீதையிடம் வேண்டுகிறான். தான் நாடும் மணிமுடியும் துறக்க காரணமாக இருந்த கைகேயியை மன்னித்து அருளும்படி தசரதனிடம் ராமன் கேட்கிறான். இது ராமனின் மன்னிக்கும் பண்பு; இதைக் கேட்டு உலகிலுள்ள உயிரினங்கள் அனைத்தும் “வாய்திறந்து அழுது ஆர்த்தன” என்று கம்பர் குறிப்பிடுகிறார். மன்னிக்கும் பண்பின் உயர்வினை குறிக்கும் குறியீடாக ராமன் திகழ்கின்றான்.

சிலப்பதிகாரத்தின் இறுதிப்பகுதியில், கண்ணகி தெய்வ வடிவில் தோன்றி, ‘தன் கணவன் பாண்டிய மன்னனால் கொலையுண்டது விதி வசம்; மன்னன் மீது ஏதும் குற்றமில்லை’ என்று மன்னித்து விடுகிறாள். “தென்னவன் தீதிலன் தேவர் கோன் தன் கோயில் நல்விருந்தாயினான்; நான் அவன்றன் மகள்” என்று கூறுகிறாள். மன்னிக்கும் பண்பின் மாண்பு இது. தவறுகள் நடப்பது உலகத்தின் இயல்பு; எனினும் தவறுகளையும், அவற்றின் விளைவுகளையும் மனத்தில் பூட்டிப் பாதுகாத்து வைத்துக் கொள்ளக் கூடாது. அது சமூக இயக்கத்திற்கு நல்லதல்ல என்ற கருத்தினைத் தமிழ்ச் சமூகம் போற்றிப் பாதுகாத்து வளர்த்து வந்திருக்கிறது.

டாக்டர் ம.திருமலை, முன்னாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்.
Tags:    

Similar News