லைஃப்ஸ்டைல்

தனிமையில் இருக்கும் பெண்களுக்கு வலைவிரிப்பவர்கள்..

Published On 2018-12-14 08:51 GMT   |   Update On 2018-12-14 08:51 GMT
பெண்கள் பழகும்போதே பக்கத்தில் இருப்பவர் பெண் பித்தரா? என்பதை புரிந்து கொண்டால் நீங்கள் எளிதாக பாலியல் தொந்தரவில் இருந்து தப்பிக்கலாம்.
‘மீ டூ’ விவகாரம் விஸ்பரூபம் எடுத்ததில், ஆண்கள் மட்டுமல்ல பெண்களுமே கலங்கித்தான் போயிருக்கிறார்கள். அனைவரும், ஜென்டில்மேனாக நினைத்த பல பிரபலங்கள், பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருப்பது எல்லோருக்கும் அதிர்ச்சியையும், கவலையையும் தந்திருக்கிறது. நல்லவர்போல பழகிக் கொண்டிருக்கும் ஒருவர், பாலியல் தொந்தரவில் ஈடுபடும்போது அந்த இடமே நரகம்போலத் தோன்றும்.

அது அலுவலகமாக இருந்தால், வாழ்வுக்கு அடிப்படையான வேலையைவிடாமல் இந்தத் தொந்தரவில் இருந்து தப்பிப்பது எப்படி என்று பெண்கள் சிந்திப்பார்கள். உறவினரோ, நம்பிக்கையுடன் பேசிய நண்பரோ அப்படி தொந்தரவு செய்தால் அவர்களிடம் இருந்து எப்படித் தப்பிப்பது என்று மனம் குழம்புவார்கள். பழகும்போதே பக்கத்தில் இருப்பவர் பெண் பித்தரா? என்பதை புரிந்து கொண்டால் நீங்கள் எளிதாக பாலியல் தொந்தரவில் இருந்து தப்பிக்கலாம்.

பேஸ்புக்கில் நட்பு பாராட்டுபவர் உரையாடலை வைத்து அவர் எப்படிப்பட்டவர் என்பதை கண்டுபிடிக்கலாம். ‘எப்போது உங்களைப் பார்ப்பேன்’, ‘ஐ மிஸ் யூ’, ‘ஐ லைக் யூ ’ என்பது போன்ற உரையாடல்களை அடிக்கடி போடுபவர், எப்போதும் உரையாடலுக்கு அழைப்பவர், போன் எண்ணைக் கேட்பவர், உங்களுக்குப் பிடித்தமான விஷயங்களை அறிந்து கொண்டு அதைச் செய்து உங்களை கவர நினைப்பவர்கள்.. போன்றவர்களிடம் மிக கவனமாக இருக்கவேண்டும். அவர் உங்களிடம் மட்டுமல்லாமல் உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் அப்படி பேசுகிறாரா? என்பதை அறிந்து கொண்டு அவரிடம் எச்சரிக்கையாக இருங்கள்.

“உங்கள் உடை அழகு, உங்கள் கண்கள் அழகோ அழகு, நன்றாகப் பேசுகிறீர்கள்? அழகாக எழுதுகிறீர்கள், உங்களைப் போன்ற பெண்ணை நான் பார்த்ததே இல்லை” என்று எதற்கெடுத்தாலும் உங்களை பாராட்டிக் கொண்டிருப்பவர்களிடம் தேவை கவனம்.

உங்களை மற்றொரு பெண்ணின் பெயரைச் சொல்லி அழைப்பவர், அவருக்கு போன் செய்வதற்காக உங்கள் எண்ணை டயல் செய்துவிட்டேன் என்று பேச்சை ஆரம்பிப்பவர், உங்களிடம் எதையோ எதிர்பார்க்கிறார் என்று உஷாராகிவிடுங்கள்.



நீங்கள் தனிமையிலும், கவலையிலும் இருப்பதை சிலர் சரியாக மோப்பம் பிடித்து பின் தொடருவார்கள். அவர்கள் அந்த சமயத்திற்காகத்தான் காத்திருப்பார்கள். அதுபோன்ற நேரங்களில் உங்களை நெருங்கும் அவர்கள், தன்னம்பிக்கை ஊட்டுவதுபோல, “உங்களால் முடியும்” என்றும், “நான் உங்களுக்கு உதவுகிறேன்” என்றும், “நாம் ஒன்று சேர்ந்தால் சாதித்துவிடுவோம்” என்றும் நம்பிக்கை வலைவிரிப்பார்கள். அதில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.

தொடர்ந்து மெசேஜ் வருகிறதா?

தவறாமல் தொடர்ந்து மெசேஜ் அனுப்புபவர்கள் எதிர்காலத்தில் பாலியல் தொந்தரவு தருவதற்கு வாய்ப்பு உண்டு. நீங்கள் ஒரு வாட்ஸ் அப் குழுவில் இருந்து விடைபெற்றாலும், தொடர்ந்து உங்கள் எண்ணை தேடிப்பிடித்து மெசேஜ் பறக்கவிடுவார்கள் அவர்கள். யாராவது ஒருவர் சிக்குவார் என்று நினைத்து, பலரிடம் இப்படி வாலை ஆட்டிக்கொண்டிருப்பார்கள்.

செல்லப்பெயர் சூட்டுகிறார்களா?


இந்த ஆசாமிகளில் சிலர், கொஞ்சிப் பேசி கவிழ்ப்பதில் கில்லாடிகளாக இருப்பார்கள். சுவீட்டி, பேபி, ஹனி, டார்லிங் என்று செல்லமாக அழைப்பதுடன் உங்களுக்குப் பிடித்தமானதையெல்லாம் செய்யத் தவறமாட்டார்கள். அவர்களிடம் தேவை எச்சரிக்கை.

போனை மறைப்பவர்களா?

இந்த ஆசாமிகள் பெரும்பாலும் மற்றவர்கள் அவர்களை கவனிக்கிறார்களா? என்பதை தீவிரமாக கவனிப்பார்கள். நீங்கள் அவர் மீது சந்தேகத்துடன் திரும்பினால் அவர் வேறு எங்கோ பார்ப்பதுபோல திரும்பிக் கொள்வார்கள். போனைப் பார்க்க முயன்றால் மறைத்துக் கொள்வார்கள். அதுபோல பல்வேறு விஷயங்களை ஒளிவுமறைவாக செய்வார்கள், எதிலும் தங்களை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்கள்.

உண்மையை மறைக்கிறார்களா?

அவர்களது உண்மையான பெயரை மறைத்து வேறு பெயரை சொல்பவர்கள், பெயரை மாற்றிச் சொல்லிப் பழகுவார்கள் அல்லது உங்கள் பெயரை மாற்றி செல் போனில் சேமிப்பது, தெரிந்தவர்களிடம் வேறுபெயரை சொல்லிவைப்பது என ஆங்காங்கே உண்மைகளை மறைப்பவர்களிடம் கவனமாக இருங்கள். முடிந்தால் உங்களையும் அப்படியே பின்பற்றச் சொல்வார்கள். அவர்களின் தவறுகளுக்கு அடிபணிந்தால் நீங்கள் சிக்கலில் மாட்டிக்கொள்வீர்கள். கவனம் தேவை.
Tags:    

Similar News