பெண்கள் உலகம்
பெண்கள் மார்பகங்களை முறையாக பராமரிக்க வேண்டும்

பெண்கள் மார்பகங்களை முறையாக பராமரிக்க வேண்டும்

Published On 2021-11-25 12:51 IST   |   Update On 2021-11-25 12:51:00 IST
மார்பகங்கள் பெரியதாக இருக்கும் பெண்களுக்கு தாய்ப்பால் அதிகமாக சுரக்கும் என்பதும், சிறியதாக இருந்தால் குறைவாக சுரக்கும் என்பதும் தவறான கருத்தாகும்.
பெண்களின் உடல் உறுப்புகளில் முக்கியமானவை மார்பகங்கள். வயது மற்றும் ஹார்மோன்களின் செயல்பாட்டால் இவற்றில் ஏற்படும் மாற்றங்களை பெண்கள் புரிந்துகொள்ள வேண்டும். மார்பகங்களை முறையாக பராமரிக்க வேண்டும்.

பூப்பெய்தும் காலத்தில் மார்பகங்கள் வளரத் தொடங்குகின்றன. இவை கொழுப்புத் திசுக்கள், பால் சுரப்பு நாளங்கள் கொண்டவை. உடல் எடை கூடும்போது மார்பகங்களின் அளவும் அதிகரிக்கும். இதன் காரணமாக அவை சீக்கிரமே தளர்ச்சி அடைய நேரிடலாம். உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, சரியான அளவுடைய உள்ளாடைகளை அணிதல் போன்ற வழிமுறைகளைக் கையாள்வதன் மூலம் இதனைத் தவிர்க்க முடியும்.

கர்ப்ப காலத்தில் ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாற்றங்களால் மார்பகங்கள் மற்றும் மார்புக் காம்புகள் பெரிதாகுதல், தசைகள் விரிவடைதல், மென்மை
யாகுதல், மார்புக் காம்புகளைச் சுற்றியுள்ள பகுதி கருமை அடைதல் போன்ற மாறுதல்கள் உண்டாகக்கூடும். இதன் காரணமாக மார்பகங்களில் வலி, அரிப்பு ஆகிய பிரச்சினைகள் ஏற்படலாம்.

மார்பகங்கள் பெரியதாக இருக்கும் பெண்களுக்கு தாய்ப்பால் அதிகமாக சுரக்கும் என்பதும், சிறியதாக இருந்தால் குறைவாக சுரக்கும் என்பதும் தவறான கருத்தாகும். பிறந்த குழந்தைகளுக்குத் தாய்ப்பால்தான் சிறந்த உணவு. அதில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. தாய்ப்பால் புகட்டுவது தாயின் உடல் நலத்துக்கும் நல்லது. அதன் மூலம் கர்ப்ப காலத்தின் போது அதிகரித்த எடையை எளிதாகக் குறைக்க முடியும்.

தாய்ப்பால் புகட்டுவதற்கு முன்பும், புகட்டிய பின்பும் மார்பகங்களை மிதமான சூடுள்ள நீரால் சுத்தப்படுத்த வேண்டும். பின்பு பருத்தித் துணியால் மென்மையாகத் துடைக்க வேண்டும். இதன் மூலம் மார்புக் காம்புகளில் புண், வெடிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதைத் தடுக்கலாம். தாய்ப்பால் கொடுப்பதை தவிர்க்கும் பெண்களுக்கு பால் கட்டுதல், வலி ஏற்படுதல், பால் சுரப்பதில் சிக்கல்கள் போன்றவை ஏற்படும். அவர்களை மார்பகப் புற்றுநோய் தாக்கும் வாய்ப்பும் உள்ளது.

மேலும் பெண்களுக்கு உடல் பருமன், மரபியல், உணவு மற்றும் வாழ்க்கை முறை போன்ற காரணங்களாலும் மார்பகப் புற்றுநோய் ஏற்படலாம். இந்தியாவில் கருப்பை மற்றும் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், மார்பகப் புற்றுநோயைக் கண்டறியும் ‘மேமோகிராம்’ எனும் பரிசோதனையை வருடத்துக்கு ஒரு முறை செய்து கொள்வது நல்லது. இதைத்தவிர சுய பரிசோதனை மூலமும் மார்பகங்களில் கட்டிகள் மற்றும் ஆபத்தை ஏற்படுத்தும் மாற்றங்கள் உள்ளதா? என்பதை பெண்கள் தெரிந்து கொள்ளலாம்.

பல பெண்கள் மார்பகங்கள் தளர்ச்சி அடைதல், அவற்றின் அளவு, வடிவம் போன்றவற்றை எண்ணி குழப்பம் அடைந்து தன்னம்பிக்கையை இழக்கிறார்கள். அதைத் தவிர்த்து விழிப்புணர்வோடு செயல்படுவோம்.
Tags:    

Similar News