பெண்கள் உலகம்

உறவை மேம்படுத்தும் கருத்துப் பரிமாற்றம்

Published On 2022-06-16 04:48 GMT   |   Update On 2022-06-16 04:48 GMT
  • பேச வேண்டிய நேரத்தில், பேசாமல் அமைதியாக இருப்பதால் உறவுகளுக்குள் விரிசல் அதிகரிக்கும்.
  • எப்போதும் முக்கியமான அல்லது உணர்ச்சிகரமான பிரச்சினைகளை நேருக்கு நேர் பேசுவது நல்லது.

மனதில் உள்ளவற்றை வெளிப்படையாகவும், தெளிவாகவும் பேசாத காரணத்தால் பல உறவுகள் பிரிவுகளை சந்திக்கின்றன. மற்றவர்கள் தங்களை நிராகரித்து விடுவார்களோ என்ற பயத்தாலும், தயக்கத் தாலுமே பலர் தங்களின் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள தவறிவிடுகிறார்கள். பேச வேண்டிய நேரத்தில், பேசாமல் அமைதியாக இருப்பதால் உறவுகளுக்குள் விரிசல் அதிகரிக்கும்.

எந்த உறவிலும் கருத்து பரிமாற்றம் அவசியமான ஒன்று. இதன் மூலம் உணர்வுகள் மற்றும் எதிர்பார்ப்புகளை பகிர்ந்து கொள்ள முடியும். சரியான நேரத்தில் வார்த்தைகள் மூலம் கருத்துக்கள் மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்துவது ஆரோக்கியமான, மகிழ்ச்சியான உறவுகளுக்கு வழிவகுக்கும். உறவுகளுக்குள் கருத்து பரிமாற்றத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் சில காரணங்கள் இங்கே:

ஒருவருடன் மனம் திறந்து பேசுவது மற்றும் கருத்துகளைப் பரிமாறிக்கொள்வது மூலமாக அவருடைய ஒழுக்கம், மதிப்பு, விருப்பு வெறுப்புகள் போன்றவற்றை தெரிந்துகொள்ள முடியும். அதன் மூலம் அந்த நபருடனான உறவை மேலும் இணக்கமாக்கலாம். கருத்துக்களை வெளிப்படையாக பரிமாறிக்கொள்வதால், தவறான புரிதல்களைத் தவிர்க்க முடியும். எனவே உங்கள் மனதில் தோன்றும் நியாயமான எண்ணங்களை வெளிப்படையாக சொல்லுங்கள்.

ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் வெவ்வேறு எதிர்பார்ப்புகள் இருக்கும். அதை மற்றவர் உணராமல், வருத்தப்படும் படி நடந்து கொள்ளலாம். வெளிப்படையான கருத்து பரிமாற்றத்தால், இத்தகைய சூழ்நிலைகளை தவிர்க்க முடியும். ஆரோக்கியமான, நேர்மறையான மற்றும் திருப்திகரமான உறவை உருவாக்க முடியும். எப்போதும் முக்கியமான அல்லது உணர்ச்சிகரமான பிரச்சினைகளை நேருக்கு நேர் பேசுவது நல்லது. குறுஞ்செய்தி மூலம் விவாதிப்பதையும், உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இருக்கும் போது பேசுவதையும் தவிர்க்க வேண்டும்.

சரியான நேரத்தைக் கண்டறிந்து பேசுவது முக்கியமானது. அன்பு, பாராட்டு மற்றும் மகிழ்ச்சி போன்ற நேர்மறை உணர்வுகளை அனைவரும் விரும்புவார்கள். எந்த உறவிலும் இத்தகைய உணர்வுகளை வெளிப்படையாக பகிர்தல் முக்கியமானது. அவ்வாறு இல்லாமல் உங்கள் மனதில் இருப்பதை மற்றவர்கள் அவர்களாகவே புரிந்துகொள்வார்கள் என்று சொல்லாமல் இருப்பது கூடாது. குறிப்பாக கணவன்-மனைவி உறவில் இது போன்ற உணர்வுகளை துணையுடன் பகிர்ந்துகொள்வது உறவை மேலும் வலுப்படுத்தும்.

அன்பையும், விசுவாசத்தையும் அதிகரிக்கும். இந்த வகையான உணர்வுகளை அடிக்கடி பகிர்ந்து கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். எதிர்மறை உணர்வுகளைப் பகிர்ந்துகொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். எதிர்மறையான உணர்வுகளை சரியான முறையில் வெளிப்படுத்துவது, உறவுகளுக்குள் விரிசல் ஏற்படாமல் பாதுகாக்கும். பிரச்சினைகளை சேர்ந்து எதிர்கொள்ளும் ஆற்றலைக் கொடுக்கும்.

Tags:    

Similar News