அழகுக் குறிப்புகள்

தங்க நகைகளுக்கு மாற்றாக டெரகோட்டா நகைகளை விரும்பும் பெண்கள்...

Published On 2023-03-18 04:32 GMT   |   Update On 2023-03-18 04:32 GMT
  • டெரகோட்டா நகைகளுக்கான வரவேற்பு சூப்பராக இருக்கிறது.
  • இளம் பெண்களின் தேவையை டெரகோட்டா நகைகள்தான் பூர்த்தி செய்கின்றன.

'சாதாரண களிமண்ணில் என்ன செய்து விட முடியும்..?' என்று கேள்வி கேட்பவர்களுக்கு, தான் உருவாக்கிய 'டெரகோட்டா நகைகள்' மூலமாக அசத்தலாக பதிலளிக்கிறார், ரம்யா நவீன். இவரிடம் சில நூறு ரூபாய்கள் மதிப்புள்ள களிமண்ணைக் கொடுத்தால், அதை பல நூறு லாபம் தரக்கூடிய டெரகோட்டா நகைகளாக மாற்றிவிடுகிறார். அதுதான் இவரது ஸ்பெஷலும்கூட.

''அணியும் உடையின் நிறத்திற்கு ஏற்ப, அணிகலன்களும் இருக்க வேண்டும் என்ற இளம் பெண்களின் தேவையை டெரகோட்டா நகைகள்தான் பூர்த்தி செய்கின்றன. ஒருசிலர், வாங்கும் புதிய ஆடைக்கு பொருத்தமான, நகைகளை மேட்சிங்கான கலரில் தயார் செய்ய சொல்கிறார்கள்'' என்று டெரகோட்டா நகை பற்றி பேச ஆரம்பிக்கிறார், ரம்யா நவீன். கோவை பகுதியை சேர்ந்தவரான இவர், முதுகலை (எம்.சி.ஏ.) பட்டம் பெற்றவர். இருப்பினும் இவரது ஆர்வம், டெரகோட்டா நகைகள் பக்கமாகவே திரும்பியிருக்கிறது.

''தோழியின் மூலம் அறிமுகமான டெரகோட்டா நகைகளை திருமணத்திற்கு பிறகுதான் முழு மூச்சோடு கையில் எடுத்தேன். ஏனெனில் திருமணத்திற்கு பிறகான வாழ்க்கையில் நிரம்பியிருந்த தனிமையை விரட்டவும், சமூகத்தில் எனக்கான அடையாளத்தை உருவாக்கவும் அப்படியொரு முயற்சி தேவைப்பட்டது'' என்றவர், 2014-ம் ஆண்டு கணவரின் துணையோடு டெரகோட்டா நகைகளை உருவாக்க தொடங்கினார். ஆரம்பத்தில் டெரகோட்டா நகை வடிவமைப்பு மற்றும் உருவாக்கத்திற்கான வகுப்புகளில் சேர்ந்து அதன் நுட்பங்களை தெரிந்துகொண்டதுடன், சிறுசிறு உருவங்களை முயற்சித்து, டெரகோட்டா (சுடுமண்) கலையின் அடிப்படைகளை உணர்ந்து, நகைகளை உருவாக்கினார்.

''நெத்திச்சுட்டி, ஜடை அலங்கார பொருட்கள், ஜிமிக்கி கம்மல், காது மாட்டல், லேயர் மாட்டல், சந்திரவாலி கம்மல், நெக்லஸ், கழுத்து அட்டிகை, சொக்கம், ஆரம், கை வங்கி, வளையல், இடுப்பு ஒட்டியாணம்... இப்படி பெண்கள் விரும்பும் நகைகளை, டெரகோட்டா நகைகளாக உருவாக்கினேன்'' என கடந்த 9 ஆண்டுகளில், தான் உருவாக்கிய படைப்புகளை பட்டியலிடும் ரம்யா, திருமணம்-வளைகாப்பு போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு தேவையான 'ஜூவல் செட்'களை, டிரெண்டியான டிசைனில் உருவாக்கி அசத்துகிறார். குறிப்பாக, அந்தந்த காலகட்டத்தில் டிரெண்டாக இருக்கும் தங்க நகை கலெக்ஷன்களை, அச்சு அசலான டெரகோட்டா நகைகளாக உருவாக்குவதுடன், அதில் பொன் நிற வண்ணங்களை இழைந்தோட செய்து பிரம்மிக்க வைக்கிறார். அதுவே இவரது தனித்துவமும் கூட.

''பெரும்பாலான பெண்கள், தங்க நகைகளுக்கு மாற்றாக, டெரகோட்டா நகைகளையே விரும்புகிறார்கள். உடுத்தும் புடவை டிசைன்களுக்கு மேட்சிங்காக, அதே வடிவங்கள், அதே வண்ணங்கள் நகை அலங்கார பொருட்களிலும் பிரதிபலிக்க வேண்டும் என விரும்புகிறார்கள். அதனால்தான் டெரகோட்டா நகைகளுக்கான வரவேற்பு சூப்பராக இருக்கிறது. மயில் வடிவ புடவைக்கு, மயில் வடிவத்திலேயே டெரகோட்டா நகைகளை செய்ய சொல்லி மேட்சிங்காக உடுத்துகிறார்கள். நகை அணிகிறார்கள்'' என்று டெரகோட்டா நகைகளின் தேவையை விளக்கியவர், அதன் உருவாக்க முறை பற்றி பேசினார்.

''சில நாள் பயிற்சிக்கு பிறகு, டெரகோட்டா நகைகளை யார் வேண்டுமானாலும் செய்யலாம். இந்த நகைகளை செய்வதற்கு பொறுமையும், கிரியேட்டிவிட்டியும் மிக அவசியம்.

இப்போது பெரும்பாலான டெரகோட்டா நகைக் கலைஞர்கள், மோல்டிங் முறையில் அச்சு வைத்து, கற்கள் பதித்து நகைகளை உருவாக்குகிறார்கள். ஆனால் எனக்கு எல்லா நகைகளையும், கற்கள் இன்றி கலை வேலைப்பாட்டுடன் உருவாக்க பிடிக்கும். ஏனெனில் கல் நகைகளில் இருந்து கற்கள் விழுந்துவிட்டால், அந்த நகையே வீணாகிவிடும். அதனால் நான் கற்களை பயன்படுத்துவதில்லை. அதேபோல, இதுவரை நான் மோல்டிங் முறையில் நகைகளை உருவாக்கியதே இல்லை. எதுவாக இருந்தாலும், அதை வெறும் கைகளாலே கலைநயமாக உருவாக்குகிறேன்.

அப்படி உருவானதை மூன்று நாட்கள் உலர்த்திய பிறகுதான், சுட முடியும். அதற்கு பிறகுதான், பெயிண்ட் வேலைகளும், செயின் கோர்ப்பு வேலைகளும் செய்ய முடியும். இதுவே திருமண நகைகள் என்றால், பெயிண்டிங் மற்றும் பினிஷிங் வேலைப்பாடுகளில் அதீத கவனம் செலுத்த வேண்டியிருக்கும்'' என்று பொறுப்பாக பேசுபவர், வேலைப்பாடுகள் நிறைந்த திருமண நகை செட்டுகளை, 500-க்கும் மேற்பட்ட தனித்துவ டிசைன்களில் உருவாக்கி இருக்கிறார். இதில் ஒருசில டிசைன்கள், ஏராளமான பெண்களால் அதிகம் ரசிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக வெள்ளித்திரை, சின்னத்திரை நடிகைகளும், இவரது கலைப்படைப்புகளின் ரசிகைகளாக மாறி, இவர் உருவாக்கும் சுடுமண் படைப்புகளை விரும்பி அணிகின்றனர்.

''என்னுடைய படைப்புகளை நிறைய பிரபலங்கள் பாராட்டி இருக்கிறார்கள். நிறைய அங்கீகாரமும் கிடைத்திருக்கிறது. பெங்களூருவில் இயங்கும் நிறுவனம் ஒன்று, சிறந்த டெரகோட்டா நகை வடிவமைப்பாளர் என்பதை மையப்படுத்தி இந்தியன் லீடர்ஷிப் விருது வழங்கி கவுரவப்படுத்தியது. இதைவிட, புதுமையான டெரகோட்டா படைப்புகளே என்னை அதிகமாக உற்சாகப்படுத்துகிறது'' என்று அகம் மகிழ்பவர், 'டெரகோட்டா' கலையில், நவீன நகைகள் படைக்கும் முயற்சியிலும் களமிறங்கி இருக்கிறார்.

''எல்லா பெண்களுக்குள்ளும், ஒரு தனித்திறமை ஒளிந்திருக்கும். பெரும்பாலானோர் அதை 'ஹாபி' என கடந்து விடுகின்றனர். ஆனால் அந்த 'ஹாபி'க்கு பெண்கள் உயிர் கொடுக்கும்போதுதான், 'தொழில்முனைவோர்' என்ற பதவி உயர்வு கிடைக்கும். அத்துடன், குடும்ப பொருளாதாரமும் மேம்படும். அதனால் உங்களோடு வளர்ந்த தனித்திறனை தொழில் ரீதியாக மேம்படுத்த முயலுங்கள்'' என்றவர், வெறும் இரண்டாயிரம் ரூபாய் செலவிலேயே, டெரகோட்டா நகைகளை வடிவமைக்க முடியும் என்று பலருக்கும் தன்னம்பிக்கை கொடுக்கிறார். அதோடு தன்னுடைய முயற்சிக்கு துணை நின்ற கணவருக்கும், இரு மகன்களுக்கும், உறவினர்களுக்கும் நன்றி தெரிவித்ததோடு விடைபெற்றார்.

டெரகோட்டா தோடுகள் 80 ரூபாயில் இருந்து தொடங்கி, கல்யாண செட் நகைகள் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப 20 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகிறது. குறிப்பாக, அமெரிக்கா, துபாய், ஆஸ்திரேலியா நாடுகளில் வாழும் தமிழர்கள் விரும்பி வாங்கி அணிகிறார்கள்.

களிமண்ணில் நகைகள் மட்டுமல்ல, பிரிட்ஜ் மேகனெட், பெயர் பலகை... போன்ற புதுமையான பொருட்களையும் செய்ய முடியும்.

நிறைய களிமண்கள் சந்தையில் இருக்கின்றன. அதில் நான் பெங்களூரு களிமண்ணைத்தான் பயன்படுத்துகிறேன். ஏனெனில் அதை பயன்படுத்துவதும், கையாள்வதும் சுலபம்.

Tags:    

Similar News