அழகுக் குறிப்புகள்

உடற்பயிற்சிக்கு பின் சரும ஆரோக்கியத்தை பராமரிப்பது எப்படி?

Published On 2023-06-05 04:59 GMT   |   Update On 2023-06-05 04:59 GMT
  • உடற்பயிற்சி செய்த பிறகு ஒரு சில விஷயங்களை கவனமாக பின்பற்றுவது சரும ஆரோக்கியத்திற்கு நல்லது.
  • சூரிய கதிர்வீச்சுகளிடம் இருந்து சருமத்தை பாதுகாப்பதற்கு சன்ஸ்கிரீன் முக்கியமானது.

உடல் எடையை குறைப்பதற்கும், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கும் நிறைய பேர் உடற்பயிற்சியை நாடுகிறார்கள். உடற்பயிற்சி உடலுக்கு மட்டும் நன்மை சேர்ப்பதில்லை. உள் உறுப்புகளுக்கும், சருமத்திற்கும் நலம் பயக்கும். உடற்பயிற்சி செய்வது ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும். அதன் மூலம் ஆக்சிஜனை பரப்பி சருமத்தையும் வளப்படுத்தும். அதாவது உடற்பயிற்சியின் மூலம் சருமத்தின் தரத்தையும் மேம்படுத்தமுடியும். அதேவேளையில் உடற்பயிற்சி செய்த பிறகு ஒரு சில விஷயங்களை கவனமாக பின்பற்றுவது சரும ஆரோக்கியத்திற்கு நல்லது.

உடற்பயிற்சி செய்யும்போதோ அல்லது செய்து முடித்த பிறகோ கைகளை கொண்டு முகத்தை தொடக்கூடாது. குறிப்பாக உடற்பயிற்சி கருவிகளை பயன்படுத்தி பயிற்சி செய்யும்போது கைகளில் அழுக்குகள் படிந்திருக்கும். அந்த கைகளால் முகத்தை தொடும்போது சருமத்தில் பாக்டீரியாக்கள் பரவுவதற்கு அடிகோலிடும். ஜிம் கருவிகளில் இருக்கும் பாக்டீரியாக்கள் முகத்தில் படர்ந்தால் முகப்பருக்கள் எளிதாக தோன்றிவிடும். அதனால் எப்போதும் டவல் வைத்துக்கொள்ளுங்கள். வியர்வை வழியும்போது கைகளால் துடைப்பதற்கு பதிலாக டவலை பயன்படுத்துங்கள்.

சரும பராமரிப்பில் முக்கியமான அம்சம், முகத்தை சுத்தப்படுத்துவதாகும். வியர்வை, அழுக்கு, தூசு, இறந்த சரும செல்கள், பாக்டீரியாக்கள் போன்றவை சருமத்திற்கு தொல்லை தருபவை. இத்தகைய பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு சருமத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அடிக்கடி முகத்தை கழுவி வரலாம். சருமத்தின் தன்மையை பொறுத்து ஆயில் மற்றும் ஜெல் அடிப்படையிலான கிளீனர்களை பயன்படுத்தலாம். வியர்வை, சூரிய ஒளிக்கதிர்களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு ஆயில் அடிப்படையிலான கிளீன்சர்களை பயன்படுத்தலாம். சாலிசிலிக் அமிலம் கொண்ட ஜெல் அடிப்படையிலான கிளீன்சர், பாக்டீரியாக்களை அகற்றவும், சரும துளைகளை சுத்தம் செய்யவும் உதவும்.

சருமத்தில் ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ள உதவும் சிறந்த நண்பனாக மாய்ஸ்சுரைசர் விளங்குகிறது. சருமத்தை அமைதியாக உணர வைப்பதற்கான திறவுகோலாகவும் அமைந்திருக்கிறது. உடற்பயிற்சி செய்த பிறகு சருமத்தில் உண்டாகும் அரிப்பு, சிவத்தல் போன்ற பிரச்சினைகளை குறைக்கவும் உதவுகிறது. மாய்ஸ்சுரைசர்கள் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது என்பதால் கடுமையான உடற்பயிற்சிக்கு பிறகு தாராளமாக உபயோகிக்கலாம். சருமத்தை ஈரப்பதமாக வைத்துக்கொள்வதும், உடற்பயிற்சியின்போது வெளியேறும் வியர் வையை ஈடு செய்ய நீர்ச்சத்தை பராமரிப்பதும் முக்கியம்.

சூரிய கதிர்வீச்சுகளிடம் இருந்து சருமத்தை பாதுகாப்பதற்கு சன்ஸ்கிரீன் முக்கியமானது. சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதால் தோல் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயத்தை குறைக்கலாம். சரும வீக்கம், சிவத்தல் போன்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். சுருக்கங்கள், வயதான தோற்ற அறிகுறிகளில் இருந்தும் சருமத்தை பாதுகாக்கலாம். கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்ட பிறகு சருமத்திற்கு கூடுதல் கவனிப்பு தேவைப்படும். கடுமையான புற ஊதாக்கதிர்வீச்சுகளிடம் இருந்து சருமத்தை பாதுகாக்க எஸ்.பி.எப். தன்மை கொண்ட பொருத்தமான சன்ஸ்கிரீனை தேர்வு செய்வது முக்கியம்.

தண்ணீர் பருகுவது தாகத்தை மட்டும் தணிக்க உதவுவதில்லை. உடலை சுத்தப்படுத்தும். மூளையின் செயல்பாட்டை துரிதப்படுத்தும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். தண்ணீர் குடிக்கும்போது உடல் மட்டுமல்ல சருமமும் பயனடைகிறது. போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும், உடலில் நீர்ச்சத்தை பேணுவதும் சருமத்தை மிருதுவாக வைத்திருக்க உதவும். உடற்பயிற்சியின்போது வியர்வை மூலம் வெளியேறும் நீர்ச்சத்தை ஈடு செய்வது அவசியம். அதனால் உடற்பயிற்சி செய்தபிறகு குறைந்தபட்சம் ஒரு டம்ளர் தண்ணீராவது பருகுவது அவசியமானது.

Tags:    

Similar News