இயற்கை அழகு

முடி உதிர்வு பிரச்சனையா? உடனடி தீர்வு தரும் வீட்டு வைத்தியம்....

Update: 2022-06-15 06:01 GMT
  • முடி உதிர்வு பிரச்சனைக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
  • முடி உதிர்வை கட்டுப்படுத்த சில வீட்டு வைத்தியங்களை கடைப்பிடித்தாலே போதுமானது.

நீண்ட கூந்தல் முடியை விரும்பும் பெண்களுக்கு முடி உதிர்வு பிரச்சினை முட்டுக்கட்டையாக அமையும். முடிகள் வலிமையை இழந்து, மெலிந்து பலவீனமடைவதுதான் முடி உதிர்வுக்கான ஆரம்பக்கட்ட அறிகுறிகளாகும். முடிக்கு வண்ணம் தீட்டுதல், முடியை நேராக்குதல், முடியை உலர வைப்பதற்கு ஹேர் டிரையர் பயன்படுத்துதல், நெருக்கமான பற்களை கொண்ட சீப்புகளை பயன்படுத்துதல் உள்ளிட்டவையும் முடி உதிர்வுக்கு வித்திடுகின்றன.

இத்தகைய பழக்கவழக்கங்களுடன் ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்ளுதல், மிகவும் குறைவான கலோரிகளை கொண்ட உணவு பொருட்களை உட்கொள்ளுதல், நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடுகளில் கோளாறு ஏற்படுதல் போன்றவையும் முடி உதிர்வுக்கு முக்கிய காரணங்களாக அமைந்திருக்கின்றன. பலவீனமான முடியை சரி செய்து முடி உதிர்வை கட்டுப்படுத்த சில வீட்டு வைத்தியங்களை கடைப்பிடித்தாலே போதுமானது.

1. ஆப்பிள் சிடேர் வினிகர்

ஒரு டீஸ்பூன் ஆப்பிள் சிடேர் வினிகர், இரண்டு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றுடன் மூன்று முட்டைகளின் வெள்ளைக்கரு கலந்து தலைமுடியில் தேய்க்கவும். பின்பு 'பிளாஸ்டிக் ராப்' அல்லது 'ஷவர் கேப்'பை கொண்டு தலையை மூடி அரை மணி நேரம் ஊறவிடவும். பின்பு ஷாம்பு போட்டு தலைமுடியை அலசி விடலாம். பலவீனமான முடியை சீர்படுத்த இது சிறந்த வீட்டு வைத்தியமாக கருதப்படுகிறது.

2. முட்டை

முட்டையில் கலந்திருக்கும் புரதம் முடியை வலுப்படுத்த உதவும். இரண்டு டேபிள்ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி கிளறவும். தலையில் எண்ணெய் தேய்ப்பது போல் தண்ணீரை லேசாக தடவவும். பின்பு முட்டை கலவையை கூந்தலில் தடவிவிட்டு, 20 நிமிடங்கள் கழித்து குளித்துவிடலாம். முட்டையில் இருக்கும் புரதம் தலைமுடியை கடினமாக்கும் தன்மை கொண்டது என்பதால் மாதம் ஒருமுறை மட்டும் பயன்படுத்துவது நல்லது.

3. அவகோடா

நன்கு பழுத்த அவகோடா பழத்துடன் முட்டையின் வெள்ளைக்கருவை கலந்து ஈரமான தலைமுடியில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து தலைமுடியை தண்ணீரில் அலசிவிடலாம். அவகோடா பழத்தில் வைட்டமின்கள், கொழுப்பு அமிலங்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. அவை தலைமுடிக்கு பொலிவு சேர்க்கக் கூடியவை. முடி உதிர்வு பிரச்சினையை எதிர்கொள்பவர்கள் இந்த கலவையை வாரம் ஒருமுறை பயன்படுத்தலாம். ஆரோக்கியமான கூந்தல் கொண்டவர்கள் மாதம் ஒரு முறை உபயோகிக்கலாம்.

4. ஆலிவ் எண்ணெய்

வறண்ட தலைமுடியில் மீண்டும் ஈரப்பதத்தை தக்கவைக்கும் தன்மை ஆலிவ் எண்ணெய்க்கு உண்டு. ஆலிவ் எண்ணெய்யை லேசாக சூடாக்கி தலையில் தடவி விடவும். பின்பு 'ஷவர் கேப்' கொண்டு தலையை மூடிவிடவும். முக்கால் மணி நேரம் கழித்து ஷாம்பு போட்டு தலைமுடியை அலசி விடலாம். வறண்ட கூந்தல் கொண்டவர்கள் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்துவது சிறப் பானது.

5. கற்றாழை சாறு:

75 ஊட்டச்சத்துக்கள், 20 தாதுக்கள், 12 வைட்டமின்கள் மற்றும் 18 அமினோ அமிலங்களை கொண்ட நம்பமுடியாத கண்டிஷனிங் ஏஜெண்டாக கற்றாழை செயல்படுகிறது. முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் தன்மையும் கொண்டது. கற்றாழையில் இருந்து ஜெல் எடுத்து அதனுடன் சிறிதளவு தேன் மற்றும் ஆலிவ் எண்ணெய் கலக்கவும். இந்த கலவையை கூந்தலில் தடவிவிட்டு 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் அலசி விடலாம்.

6. சந்தன எண்ணெய்:

ஆலிவ் எண்ணெய், சந்தன எண்ணெய் இரண்டையும் சிறிதளவு எடுத்து உள்ளங்கையில் நன்றாக தேய்க்கவும். பின்பு தலைமுடியின் நுனியில் லேசாக தடவவும். தலைமுடி சேதம் அடைவதை தடுப்பதற்கு சந்தன எண்ணெய் உதவும்.

7. வாழைப்பழம்:

2 வாழைப்பழங்கள், 2 டேபிள்ஸ்பூன் தேன் மற்றும் 4 டேபிள்ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து தலைமுடியில் தடவவும். அரை மணி நேரம் கழித்து கூந்தலை அலசி விடலாம். வாழைப்பழத்தில் உள்ளடங்கி இருக்கும் சிலிகா முடி வளர்ச்சியை தூண்டிவிடும்.

Tags:    

Similar News