சமையல்

சைவ இறைச்சி என்றால் என்ன? உடலுக்கு நல்லதா...!

Published On 2024-02-05 08:17 GMT   |   Update On 2024-02-05 08:17 GMT
  • தாவரங்களில் இருக்கும் புரதத்தை தனியாக பிரித்து எடுத்து தயாரிக்கப்படுகிறது.
  • சுவை விலங்குகளின் மாமிசத்தைப் போலவே இருக்கும்.

சைவ இறைச்சி என்பது தாவர இறைச்சி என்றும் அழைக்கப்படுகிறது. இது தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. தாவரங்களில் இருந்து, சில கூறுகள் எடுக்கப்பட்டு, இதன் மூலம் சிறப்பு தொழில்நுட்பம் மூலம் சைவ இறைச்சி தயாரிக்கப்படுகிறது

மீன், கோழி, ஆடு போன்றவற்றின் இறைச்சியைப் போலவே தாவரங்களில் இருக்கும் புரதத்தை தனியாக பிரித்து எடுத்து தயாரிக்கப்படுவதை 'தாவர இறைச்சி' அல்லது 'சைவ இறைச்சி' என்று அழைக்கிறோம். இதன் சுவை விலங்குகளின் மாமிசத்தைப் போலவே இருக்கும். தாவர இறைச்சி பெரும்பாலும் சோயா, காளான், பீன்ஸ், கோதுமை ஆகிய மூலப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

இறைச்சியின் சிவப்பு நிறத்தை பிரதிபலிக்க இதனுடன் மாதுளைப்பொடி, பீட்ரூட் சாறு, சோயா லெகிமோ குளோபின் போன்ற நிறமிகள் கலக்கப்படுகின்றன.

சமீபகாலமாகவே தாவர இறைச்சியை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். சர்வதேச சந்தையிலும் இதற்கு வரவேற்பு இருக்கிறது. இருப்பினும், தாவர இறைச்சி உடலுக்கு நல்லதா என்ற கேள்வியும் பலரிடம் இருக்கிறது. இதுகுறித்த தகவல்கள் இங்கே...

மாமிச உணவை தவிர்க்க நினைப்பவர்களுக்கும், உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கும் அசைவ பிரியர்களுக்கும் தாவர இறைச்சி ஒரு மாற்று உணவாகும். விலங்குகளின் மூலம் கிடைக்கும் இறைச்சியின் ருசியையும் இது ஈடுசெய்யும். தாவர இறைச்சியில் கொழுப்பு மற்றும் கலோரிகள் குறைவாக இருப்பதால் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

விலங்கு இறைச்சியுடன் ஒப்பிடும்போது தாவர இறைச்சியில் நார்ச்சத்து, வைட்டமின் சி. பிளேவனாய்டுகள் போன்ற சத்துகள் அதிகமாக இருக்கின்றன. அதேசமயம் விலங்கு இறைச்சியில் இருந்து பெறப்படும் இரும்பு, வைட்டமின் டி துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் தாவர இறைச்சியில் குறைந்த அளவே உள்ளன.

எனவே தாவர இறைச்சி சாப்பிடும் நாட்களில் பழங்கள், காய்கறிகள் மற்றும் பிற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளையும் சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு நல்லது. இவ்வாறு சாப்பிடும்போது தாவர இறைச்சியில் கிடைக்காத ஊட்டச்சத்துக்களை மற்ற உணவுகள் சமன் செய்யும்.

தாவர இறைச்சியில் இருக்கும் நார்ச்சத்து உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும். இதன் மூலம் இதயநோய், புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறையும்.

 சோயா, காளான், பீன்ஸ் போன்றவை மட்டுமல்லாமல் பருப்பு வகைகள், கொண்டைக்கடலை, உருளைக் கிழங்கு. சிலவகை தாவர எண்ணெய்கள், மூலிகைகள் மற்றும் மசாலாப் பொருட்களை கலந்தும் தாவர இறைச்சி தயாரிக்கப்படுகிறது. எனவே தாவர இறைச்சியை வாங்கும்போது குறைந்த உப்பு, அதிக நார்ச்சத்து நிறைந்த தயாரிப்புகளை தேர்ந்தெடுக்க வேண்டும்.

விலங்கு இறைச்சியுடன் ஒப்பிடும்போது தாவர இறைச்சியில் உள்ள புரதத்தை மனித உடலால் குறைவான அளவே உட்கிரகிக்க முடியும். தாவர இறைச்சி செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். இருப்பினும் அது செரிமானம் ஆகும் தன்மையானது.

சமைக்கும் முறை, சமைப்பதற்காக தாவர இறைச்சியில் சேர்க்கப்படும் பொருட்கள். சாப்பிடுபவரின் செரிமான சக்தி ஆகியவற்றை பொறுத்து மாறக்கூடும். விலங்குகளில் இருந்து கிடைக்கும் இறைச்சியுடன் ஒப்பிடும்போது. தாவர இறைச்சி சுற்றுச்சூழலில் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தும்.

Tags:    

Similar News