சமையல்

திருவாதிரை களி செய்வது எப்படி?

Published On 2023-01-05 09:20 GMT   |   Update On 2023-01-05 09:20 GMT
  • ஆருத்ரா தரிசனம் அன்று இறைவனுக்கு இந்த களி நைவேத்தியமாக படைக்கப்படும்.
  • இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்

பச்சரிசி - 1 கப்

வெல்லம் - 200 கிராம்

துருவிய தேங்காய் - கால் கப்

முந்திரி - தேவையான அளவு

திராட்சை - தேவையான அளவு

நெய் - ¼ கப்

ஏலக்காய் பொடி - கால் மேசைக்கரண்டி

செய்முறை

அடுப்பில் கடாய் வைத்து அதில் பச்சரிசியை போட்டு 10 நிமிடம் வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதனை ஆறவைத்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு, அரைத்த மாவை சல்லடையில் போட்டு நன்றாக சலித்துக் கொள்ள வேண்டும்.

* ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து மூன்றரை கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், ½ கப் தண்ணீரை எடுத்து தனியே வைத்து விடவும்.

* கொதிக்கும் தண்ணீரில் பொடித்த மாவை சிறிது சிறிதாக சேர்த்து, கை விடாமல், கட்டி விழாதவாறு நன்றாக கிளற வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைத்து விட வேண்டும். இவ்வாறு கிளறும் போது, களி சற்று கெட்டியாக இருந்தால், முன்பு எடுத்து வைத்த தண்ணீரை ஊற்றி நன்கு கிளறிக் கொள்ளவும்.

* தண்ணீர் கொதிக்கும் நேரத்தில், மற்றொரு பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு, ¼ கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து வெல்லம் கரைந்து பாகு பதம் வரும் வரை கிளற வேண்டும். பிறகு, அதை எடுத்து மாவுடன் ஊற்றி கிளற வேண்டும்.

மாவுடன் பாகு ஒன்றாக கலந்ததும், அதை 10 நிமிடம் வேக வைக்க வேண்டும். இதில் ஏலப்பொடியை சேர்த்துக் கொள்ளலாம்.

* மற்றொரு வாணலியில் ஒரு மேசைக்கரண்டி அளவு நெய் ஊற்றி, அதில் முந்திரி, திராட்சை, தேங்காய் துருவல் போன்றவற்றைச் சேர்த்து, 3 நிமிடம் வதக்கி களியுடன் சேர்த்து கிளற வேண்டும். இதில் மீதம் இருக்கும் நெய்யை ஊற்றி நன்கு கிளறி விட்டு இறக்கி விடலாம்.

* இப்போது சுவையான திருவாதிரை களி ரெடியானது.

திருவாதிரை நோன்பின் சிறப்பான இந்த திருவாதிரைக் களியை இதில் கொடுக்கப்பட்ட போல, எளிமையாக செய்யலாம்.

Tags:    

Similar News