பொது மருத்துவம்

கொரோனாவில் இருந்து தப்பிக்க வைட்டமின் சி மட்டும் போதாது...

Update: 2022-08-09 07:58 GMT
  • வைட்டமின் சி சத்து மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க போதுமானது அல்ல.
  • அன்றாடம் நார்ச்சத்து, நீர்ச்சத்து உணவுகளை சாப்பிடுவது சீரான உடல் இயக்கத்திற்கு உதவும்.

கொரோனா வைரஸ் பிடியில் இருந்து தற்காத்துக்கொள்வதற்கு நோய் எதிர்ப்பு சக்தி முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் சி சத்து அதிகம் கொண்ட உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் வைட்டமின் சி சத்து மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க போதுமானது அல்ல. ஏனெனில் நோய் எதிர்ப்பு சக்தி என்பது பல்வேறு ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது.

அதனால் வைட்டமின் சி மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சீரான உணவை உண்பது அவசியமானது. மேலும் நன்றாக தூங்கவும் வேண்டும். உடற்பயிற்சிக்கும் நேரம் ஒதுக்க வேண்டும். மன அழுத்தத்திற்கு இடம் கொடுக்கக்கூடாது. பழங்கள், காய்கறிகளை சாப்பிட்டு வருவதும் நல்லது.

ஆண்டு முழுவதும் உடல் சுறுசுறுப்பாக செயல்படுவதற்கு நுண்ணூட்டச்சத்துக்கள் அதிகம் தேவைப்படுகின்றன. அவை பெரும் பாலும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் எனப்படும் இரண்டு முக்கிய கூறுகளால் ஆனவை. மனித உடல்கள் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களைத் தாங்களே உற்பத்தி செய்யும் திறன் கொண் டவை அல்ல. ஆதலால் போதுமான ஊட்டச்சத்துக்களை உட்கொள்ள வேண்டியது அவசியம்.

அனைத்து நுண்ணூட்டச்சத்துக்களும் தனித்துவமான குணங்களைக் கொண்டிருக்கின்றன. சாப்பிடும் உணவில் அவை போதுமான அளவு இல்லாதபோது நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையக்கூடும். அதனால் நோய்க்கிருமிகள் எளிதாக குடிகொண்டுவிடும். உடலுக்கு தேவையான அளவு ஊட்டச்சத்துக்களை வழங்குவதற்காக பால் பொருட்கள், இறைச்சி பொருட்கள், முழு தானியங்கள் மற்றும் தினைகளையும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

நுண்ணூட்டச்சத்துக்களைத் தவிர, அன்றாடம் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிடுவது சீரான உடல் இயக்க செயல்பாட்டிற்கு உதவும். அது குடல் ஆரோக்கியத்தையும், மூளையின் சரியான செயல்பாட்டிற்கான நீரேற்றத்தையும் உறுதி செய்துவிடும். எந்த ஊட்டச்சத்துக்களை எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பது பற்றி உணவியல் நிபுணரை கலந்தாலோசித்துக்கொள்வதும் அவசியம்.

Tags:    

Similar News