பொது மருத்துவம்

செயற்கை புரதம் உடலுக்கு நல்லதா?

Published On 2022-07-26 08:16 GMT   |   Update On 2022-07-26 08:16 GMT
  • சிலர் புரோட்டின் பவுடர்களை மட்டும் உட்கொண்டு, உணவு சாப்பிடுவதை தவிர்க்கின்றனர்.
  • நமக்கு தினமும் சராசரியாக 50 கிராம் புரதம் அவசியம்.

இன்றைய சூழலில் நிறைய இளைஞர்கள் புரத சத்தை நேரடியான உணவில் இருந்து பெற விரும்புவதில்லை. அதற்கு பதிலாக புரோட்டின் பவுடர் என்று கடைகளில் கிடைக்கக்கூடிய பவுடரை வாங்கி பருகுகிறார்கள். அதிலும் ஜிம்முக்கு போகும் இளைஞர்கள் இதற்கென்று பெரும் செலவு செய்கிறார்கள். இது உண்மையில் நல்லதா?

புரதச்சத்து என்பது 20-க்கும் மேற்பட்ட பொருட்களின் கூட்டு சேர்க்கை. இது உடல் தசைகளுக்கு வலு சேர்க்கிறது. செல்களின் தேய்மானத்தை குறைத்து புதுப்பிப்பதற்கும், காயம், புண் போன்றவற்றை ஆற்றுவதற்கும் உதவுகிறது. என்சைம், ஹார்மோன் (இயக்குநீர்), வைட்டமின், பித்தநீர், ஹீமோகுளோபின் போன்றவை உற்பத்தியாக புரதம் அவசியம். நோய் எதிர்ப்பு சக்தியை தருகிற இமுனோ குளோபுலின்களை தயாரிக்கவும் இது தேவை.

நமக்கு தினமும் சராசரியாக 50 கிராம் புரதம் அவசியம். இதை நாம் சாப்பிடும் உணவில் இருந்தே பெறலாம். சைவம் சாப்பிடுபவர்கள் பால், தயிர், பருப்பு, பயறு, காளான், எண்ணெய் வித்துகள், கொட்டைகள் வழியாகவும், அசைவம் சாப்பிடுபவர்கள் மீன், முட்டை, இறைச்சியை உட்கொள்வதன் வழியாகவும் புரதச் சத்தை பெறலாம்.

இப்படி இயற்கையாக உற்பத்தியாகும் உணவை சாப்பிடும்போது, புரதச்சத்துடன் உடலுக்கு தேவையான நார்ச்சத்து, வைட்டமின், தாது, ஆன்ட்டி ஆக்ஸிடன்ட், பிளேவனாய்டு, பைட்டோகெமிக்கல் போன்ற மற்ற சத்துகளும் கிடைத்துவிடும். இது உடல் ஆரோக்கியத்துக்கு இன்னும் வலு சேர்க்கும். ஆனால், புரோட்டின் ஷேக் அல்லது பவுடரை உட்கொள்ளும்போது, அதிலுள்ள புரதம் மட்டுமே உடலில் சேரும். மற்ற சத்துகள் சேர வழியில்லை.

சிலர் உடல் எடையை குறைக்கிறேன் என்று புரோட்டின் பவுடர்களை மட்டும் உட்கொண்டு, உணவு சாப்பிடுவதை தவிர்க்கின்றனர். இதுவும் தவறு. இவர்களுக்கு மற்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஜிம்முக்குப் போகிறவர்களுக்கு மற்றவர்களைவிடப் புரதச் சத்து கூடுதலாகத் தேவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அப்படிப்பட்டவர்கள் தகுந்த அளவுடன், மற்ற ஊட்டச்சத்துகளும் உடலில் சேருவது பாதிக்கப்படாமல் உட்கொள்ள வேண்டும்.

இது சத்துபானம் தானே என்று அதிகமாக உட்கொண்டால், சிறுநீரகத்தை பாதிக்கும். சிறுநீரகத்தில் கல் உருவாகும். ரத்தத்தில் கொழுப்பு அதிகரித்து, இதய நோய்க்கு பாதை அமைக்கும். கல்லீரல் நோய்க்கு அடிபோடும். ஜிம்முக்கு செல்பவர்கள் தினமும் இரண்டு முட்டைகளின் வெள்ளை கரு, பருப்பு குழம்பு அல்லது கூட்டு, அரை லிட்டர் பால், 200 கிராம் பயறு, 300 கிராம் கோழி இறைச்சி, நவதானியங்கள் கலந்த சத்துமாவு 200 கிராம் சாப்பிட்டு வந்தால், அவர்களுக்குத் தேவையான அளவு புரதம் கிடைத்துவிடும்.

Tags:    

Similar News