பொது மருத்துவம்

அடிக்கடி ஏப்பம் வருகிறதா?- காரணங்களும், தடுப்பதற்கான வழிகளும்...

Published On 2025-07-11 12:12 IST   |   Update On 2025-07-11 12:12:00 IST
  • செரிமான பிரச்சனையும் ஏப்பம் ஏற்பட ஒருவகையில் காரணமாக அமைகிறது.
  • சோடா கலந்த பானங்கள், மது வகைகள், புகைப்பழக்கம் முதலானவற்றை முற்றிலும் கைவிட வேண்டும்.

அடிக்கடி ஏப்பம் வருகிறது. எதற்கு வருகிறது ஏன் வருகிறது என்றே தெரியவில்லை எரிச்சலாக இருக்கிறது என்று புலம்புகிறீர்களா? கவலையை விடுங்கள். இந்த பதிவில் ஏப்பம் ஏன் ஏற்படுகிறது, ஏப்பம் ஏற்படுவதற்கான காரணம் என்ன? அதை தடுப்பதற்கான எளிய வழிகளைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

ஏப்பம் ஏன் ஏற்படுகிறது?

நாம் உணவு உண்ணும் போது காற்றையும் விழுங்கி விடுகிறோம். அந்த காற்றானது வயிற்றையும் தொண்டையையும் இணைக்கும் உணவுக்குழாய் பகுதியில் அதிகமாக இருக்கும். நீங்கள் வேகவேகமாக சாப்பிடும் போது, தண்ணீர் குடிக்கும் போது அந்த காற்றானது ஏப்பமாக வெளியேறுகிறது.

ஏப்பம் ஏற்படுவதற்கான காரணம் என்ன?

உணவுக்குழாயில் உள்ள காற்று ஏப்பமாக வெளியேறுவது இயற்கையானது. ஆனால், சிலருக்கு எப்போதும் ஏப்பம் வந்துகொண்டே இருக்கும். அதற்கு அவர்கள் அன்றாட வாழ்வில் மேற்கொள்ளும் பழக்க வழக்கங்கள் தான் காரணமாக அமையும். மதுபானங்கள், புகை பழக்கம் உள்ளவர்களுக்கு அதிகமாக ஏப்பம் வரும். கார்பனேற்றப்பட்ட பானங்களை குடிக்கும் போதும் புகை பிடிக்கும் போதும் வாயுவானது அதிகமாக உள்ளிழுக்கப்பட்டு அதனால் ஏப்பம் ஏற்படுகிறது.

செரிமான பிரச்சனையும் ஏப்பம் ஏற்பட ஒருவகையில் காரணமாக அமைகிறது. சிலருக்கு செரிமான பிரச்சனை இருக்கும். அப்படிப்பட்டவர்கள் பால் போன்றவற்றை அதிகமாக எடுத்துக்கொள்ளும் போது ஏப்பம் ஏற்படும். அதேபோல், மன அழுத்தம் கூட செரிமான அமைப்பை பாதித்து ஏப்பம் வர காரணமாக இருக்கும் என கூறப்படுகிறது.

'ஏப்பம் 'வராமல் தடுப்பதற்கான எளிய வழிகள்:

ஏப்பம் வராமல் தடுப்பதற்கு உங்கள் அன்றாட வாழ்வில் சில பழக்க வழக்கங்களை முறைபடுத்தினாலே போதும். தினமும் நீங்கள் உட்கொள்ளும் உணவை வேகவேகமாக சாப்பிடாமல், மெதுவாக மென்று விழுங்க வேண்டும்.

இரவில் தாமதமாக சாப்பிட நேரிட்டால் மசாலா அதிகமான உணவுகளை தவிர்த்து விடுங்கள்.

செரிமான பிரச்சனைகளை தவிர்க்க அதிக அளவில் கீரை வகைகள், சோம்பு, இஞ்சி, மிளகு, சீரகம், புதினா, பெருங்காயம், தயிர், பூண்டு முதலானவற்றை உணவில் சேர்த்துகொள்ள வேண்டும்.

சோடா கலந்த பானங்கள், மது வகைகள், புகைப்பழக்கம் முதலானவற்றை முற்றிலும் கைவிட வேண்டும்.

செரிமான பிரச்சனை உள்ளவர்கள் லாக்டோஸ் இல்லாத பால் பொருட்களை முயற்சிக்கலாம்.

மனதை ஒருநிலைப்படுத்த தினமும் யோகா, தியானம் அல்லது உங்கள் மன விரும்பும் செயல்களில் ஈடுபடலாம்.

சாப்பிட்டவுடன் அதிக சத்தத்துடன், ஒருவித வாடையுடன் ஏப்பம் வருகிறது என்றால் அது வயிற்று புண், அஜீரணம், குமட்டல், நெஞ்செரிச்சலுக்கான அறிகுறியாகவும் இருக்கலாம். இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி, பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

Tags:    

Similar News