பொது மருத்துவம்

ஸ்மார்ட்போன் பார்த்தபடியே உணவு சாப்பிடுபவரா நீங்கள்?

Published On 2025-07-12 10:46 IST   |   Update On 2025-07-12 10:46:00 IST
  • டி.வி. அல்லது ஸ்மார்ட்போனை பார்த்துக்கொண்டே சாப்பிடும்போது வழக்கத்தை விட கூடுதலாக உணவு உண்ண நேரிடும்.
  • சாப்பிடும்போது டி.வி., செல்போன் பார்க்கும் பழக்கத்தால் தங்கள் பிரச்சனைகளை குடும்ப உறுப்பினர்களிடம் பகிர்ந்து கொள்ள நேரம் இருக்காது

சாப்பிடும்போது டி.வி., ஸ்மார்ட்போன் பார்க்கும் பழக்கம் பல இளைஞர்களுக்கும் உண்டு. அப்படி டி.வி. அல்லது ஸ்மார்ட்போனை பார்த்துக் கொண்டே சாப்பிடுவது சிலரது அன்றாட பழக்கமாகமாறிவிட்டது. ஆனால், டி.வி., ஸ்மார்ட்போன் பார்த்துக்கொண்டே சாப்பிடுவது உடல்நலக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். அதிலும் பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள், டி.வி., ஸ்மார்ட்போன் பார்த்துக்கொண்டே சாப்பிடுவதால், உடல் பருமன் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் கூறுகின்றனர். இவை மட்டுமல்ல இன்னும் பல பிரச்சனைகளுக்கு இந்த பழக்கம் காரணமாகிறது. அதுகுறித்து விரிவாக இங்கு பார்க்கலாம்...

* பல சிக்கல்கள்

ஸ்மார்ட்போன், டி.வி. பார்க்கும் பழக்கத்தை குறைக்காவிட்டால், நாளடைவில் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் இருவரும் இந்தப் பழக்கத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இதனால் கண் பலவீனம், உடல் பருமன், வயிற்று பிரச்சனைகள், வாயு பிரச்சனைகள், மன அழுத்தம் மற்றும் டென்ஷன் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

* கவனம்

இப்படி டி.வி. அல்லது ஸ்மார்ட்போனை பார்ப்பதால் அவர்களால் சாப்பிடுவதில் கவனம் செலுத்த முடியாமல் போகும். இதனால் உணவை மென்று சாப்பிடாமல், விழுங்கி சாப்பிடுவார்கள். இதனால், செரிமான பிரச்சனை ஏற்படுகிறது. மேலும் இரவில் இப்படி சாப்பிட்டால் தூக்கம் சீர்குலையும்.

* அதிகம்

டி.வி. அல்லது ஸ்மார்ட்போனை பார்த்துக்கொண்டே சாப்பிடும்போது வழக்கத்தை விட கூடுதலாக உணவு உண்ண நேரிடும். இதனால் உண்ட உணவு எளிதாக ஜீரணமாகாது. சில சமயங்களில், அதிகப்படியான உணவினால் மூச்சுவிடக்கூட முடியாத சூழ்நிலைகள் கூட ஏற்படும்.

* உறவு பாதிப்பு

சாப்பிடும்போது டி.வி., செல்போன் பார்க்கும் பழக்கத்தால் தங்கள் பிரச்சனைகளை குடும்ப உறுப்பினர்களிடம் பகிர்ந்து கொள்ள நேரம் இருக்காது. சாப்பிட்ட பிறகும் அந்த பழக்கத்தை தொடரும்போது அவர்கள் தனி உலகத்தில் இருப்பது போன்ற நிலை ஏற்பட்டுவிடும். இதனால் குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இந்த விளைவு டீன் ஏஜ் பருவத்தினரை அதிகமாக பாதிக்கிறது. சாப்பிடும்போது, சில நேரங்களில் ஸ்மார்ட்போனில் அதிகமாக கவனத்தை வைப்பதால், உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை பற்றி நீங்கள் கவலைப்படுவதில்லை. இது உளவியல் ரீதியாகவும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எனவே முடிந்தவரை சாப்பிடும் போது டி.வி., போன் பார்க்காமல் இருப்பதை தவிர்க்கவும். அதுதான் நல்லதும் கூட.

Tags:    

Similar News