பொது மருத்துவம்
தண்ணீர்

பிணிகளை நீக்கும் நீர் சிகிச்சை

Published On 2022-05-27 08:29 GMT   |   Update On 2022-05-27 08:29 GMT
நமது தமிழ் மருத்துவ நூல்களில் நீரின் வகைகள் பற்றியும், அவற்றின் மருத்துவ பயன்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தண்ணீரை அருந்தும் முறை பற்றியும் விளக்குகின்றன.
தண்ணீர் நமது உடலின் வெப்பநிலையை சமநிலையில் வைக்கிறது.சராசரியாக நமது உடலுக்கு 2½லிட்டர் நீர் பருகவேண்டும். நீரின்றி அமையாது உலகு என்கிறார் திருவள்ளுவர். உலகில் முக்கால்பங்கு நீராகவும், கால் பங்கு நிலமாகவும் அமைந்துள்ளது. அதே போல நமது உடலிலும் 60 முதல்70 சதவீதம் திரவப் பொருள்களே உள்ளன.

நாம் உண்ணும் உணவின் மூலமாகவும், பருகும் நீரின் மூலமாகவும் நமது உடலுக்கு தேவையான நீர் கிடைக்கின்றது. வளர்ந்த வாலிப பருவத்தில் உள்ளவர்கள் 2 முதல் 2½ லிட்டர் தண்ணீர் ஒரு நாளைக்கு அருந்தலாம். உடல் எடைக்கு ஏற்பவும், வயதிற்கு ஏற்பவும் நாம் அருந்தும் நீரின் அளவு மாறுபடும். நமது தமிழ் மருத்துவ நூல்களில் நீரின் வகைகள் பற்றியும், அவற்றின் மருத்துவ பயன்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பனி நீரினால் பலவிதமான தோல் நோய்கள் நீங்கும். ஆலங்கட்டி நீரினால் வெள்ளை நோய், பெரும்பாடு, தேள்கடி வி‌ஷம் போன்றவை நீங்கும். மழை நீரினால் உடலுக்கு குளிர்ச்சி உண்டாகும். அகால மழைநீர் பருகுவதற்கு தகுந்ததாக அமையாது. இதே போல கிணறு, ஆறு, ஏரி, குளம் போன்ற அனைத்து நீர்நிலைகளுக்கும் குறிப்பிட்ட மருத்துவ பயன் இருப்பதாக நம் முன்னோர்கள் கூறுகின்றனர்.

சராசரியாக நமது உடலுக்கு 2½லிட்டர் நீர் தேவைப்படுவதாக கூறினோம். அதில் 1500மிலி நாம் பருகும் நீராகவும், 750மிலி நாம் உண்ணும் உணவின் மூலமாகவும், 250மிலி நமது உடலின் வளர்ச்சிதை மாற்றத்தின் மூலமாகவும் கிடைக்கின்றது. அதேபோல 2½லிட்டர் நீர் தினசரி நம் உடலில் இருந்து வெளியேற்றவும் செய்யப்படுகிறது. 1500மிலி சிறுநீரின் மூலமாகவும், 700மிலி நமது தோல் மற்றும் சுவாசத்தின் மூலமாகவும், 100மிலி மலத்தின் வழியாகவும், 200மிலி வியர்வையின் மூலமாகவும் வெளியேற்றப்படுகிறது.

நாம் அருந்தும் நீரில் சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற கனிமங்கள் உள்ளன. இவற்றை எலக்ட்ரோலைட்ஸ் என்று கூறுகிறோம். நமது உடலின் சமநிலை திட்டத்திற்கு, நாம் பருகும் தண்ணீர் மற்றும் வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவும், எலக்ட்ரோலைட்களின் அளவும் இன்றியமையாதது. எனவே தண்ணீரை தேவைக்கு அதிகமாக பருகினாலும், குறைவாக பருகினாலும் அது நமது உடலின் சமநிலை திட்டத்தை பாதித்து நோய் நிலையை ஏற்படுத்தும்.

தண்ணீரை அருந்தும் முறை பற்றி நம் தமிழ் மருத்துவ நூல்கள் விளக்குகின்றன. உணவு உண்ணும் போது வெந்நீரையோ அல்லது தண்ணீரையோ குடித்தலால் பசி மந்தப்படும். உணவு உண்ட சிறிது நேரம் கழித்து தண்ணீர் அருந்துவதால் செரிமானம் எளிதாகும். உடலுக்கு நன்மை உண்டாகும். காய்ந்து ஆறிய தண்ணீரால் பேதி, குன்மம், வாதாதிக்கம் போன்றவை நீங்கும் என வைத்திய நூல்கள் விளக்குகின்றன.

நாம் பருகும் தண்ணீர் மற்றும் அதில் கரைந்துள்ள கனிமங்கள் மூலமே நமது உடலின் செயல் இயக்கம் இயல்பாக நடைபெறுகிறது. தண்ணீர் நமது உடலின் வெப்பநிலையை சமநிலையில் வைக்கிறது. நமது உடலில் வளர்ச்சிதை மாற்றம் நடைபெறுவதற்கு வெப்பச்சமநிலை அவசியம். மேலும் தண்ணீரின் அமில கார சமநிலை ஜீலீ 7. இது அமிலத்திற்கும் காரத்திற்கும் நடுநிலையான அளவு ஆகும். எனவே உடலின் பல வேதி வினைகளுக்கு தண்ணீர் அடிப்படையாக உள்ளது.

நமது உடலுக்கு தேவையான சத்துக்களை எடுத்து செல்லவும், கழிவுப்பொருள்களை வெளியேற்றவும், உணவு செரிமானத்திற்கும் தண்ணீரே அடிப்படை. இதேபோல கனிமங்களான சோடியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவை நரம்புகளில் தூண்டல்களை கடத்தவும், இதயத்தின் இயக்கத்திற்கு இன்றியமையாதவை ஆகும். உடலின் அமில கார சமநிலைக்கு குளோரின் என்ற கனிமம் இன்றியமையாதது. அதே போல தசைகளின் இயக்கம் மற்றும் நரம்புகளின் இயக்கத்தில் கால்சியம்) என்ற கனிமம் முக்கியப் பங்கு வகிக்கின்றது.

இந்த சமநிலை பாதிக்கப்படும் பொழுது உடல்வறட்சி, தசைகளில் வலி, இதய செயல்பாட்டில் மாற்றம், சிறுநீர் வெளியேறுவதில் மாற்றம், குழப்பம், மன அழுத்தம், உடல் வீக்கம், தலைவலி, வலிப்பு, ஹார்மோன் மாற்றங்கள், செரிமான குறைபாடுகள் போன்ற பல நோய்கள் ஏற்பட அடிப்படையாக அமைகின்றன. இதன்மூலம் நாம் பருகும் நீரின் முக்கியத்துவத்தை நம்மால் அறிய முடியும்.

எனவே தண்ணீரானது தாகத்தினை தணிப்பதற்கு மட்டும் இன்றி, அது இயல்பாகவே பல பிணிகளில் இருந்து நம்மை பாதுகாக்கும் மருந்தாகவும், உடலின் இயல்பான இயக்கத்திற்கு அடிப்படையாகவும் உள்ளது. இத்தகைய மருத்துவ பயனுடைய தண்ணீரைக் கொண்டு பிணிகளை நீக்கும் ஒரு இயற்கை மருத்துவ முறையே நீர் சிகிச்சை ஆகும். இந்த நீர் சிகிச்சையில் 2 வகைகள் உள்ளன.

அவை புற சிகிச்சை, அக சிகிச்சை. இவை இரண்டும் மேலும் பல துணை வகைகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. முதலில் அக சிகிச்சையில் காலை எழுந்து பல் துலக்கிய உடன் ½ முதல் 1 லிட்டர் வரை சாதாரண தண்ணீரோ (அ) வெதுவெதுப்பான தண்ணீரையோ மெதுவாக பருகவேண்டும். இதன் பின்னர் 30 நிமிடங்கள் வரை வேறு எதுவும் அருந்த கூடாது. மீண்டும் உறங்கச் செல்லாமல் சிறிது தூரம் நடப்பது சிறந்தது.

இதன் மூலம் உடலில் உள்ள கழிவுகள் சிறுநீரின் மூலமாக வெளியேற்றப்படும். மலச்சிக்கலை நீக்கும். உணவு பாதையின் செயல்பாடு சீராகும். அஜீரணம் நீங்கும். உடல் மற்றும் மனதிற்கு புத்துணர்ச்சி ஏற்படும். இங்கு கூறப்பட்ட நீரின் அளவு இயல்பான உடல் நிலையில் உள்ள ஒருவருக்கு பொருந்தும். ஏற்கனவே சிறுநீரக நோய்கள், உடல் வீக்கம், குடல் புண் போன்ற வேறு ஏதும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரின் அறிவுரைப்படியே இச்சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

அகசிகிச்சையின் மற்றொரு முக்கியமான பிரிவு குடல் பகுதியை கழுவுதல். இதில் மலவாயில் வழியாக குறிப்பிட்ட அளவு நீரானது மருத்துவர்களால் குடல்பகுதியில் செலுத்தப்படும். இந்த சிகிச்சையின் மூலம் குடல் பகுதியானது முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. இதனால் உணவு செரிமானம் மற்றும் உணவில் உள்ள சத்துக்களை உட்கிரகிக்கும் திறன் மேம்படுகிறது.

நீர் சிகிச்சையின், புற சிகிச்சையில் பல வகைகள் உள்ளன. இவை அதற்கென குறிப்பிட்ட மருத்துவ உபகரணங்களுடன், மருத்துவரிடமே மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் வலிப்பு, நரம்பு நோய்கள் , இருதய நோய்கள் இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்று இச்சிகிச்சையை தொடங்க வேண்டும். இந்த புறநீர் சிகிச்சையின் மூலம் உடலின் ரத்த ஓட்டம் மேம்படுகிறது. உடலின் வெப்ப நிலை சமச்சீராகிறது.

இதன் ஒரு சில வகைகளாவன:

1. வட்சு : இது மிதவெப்பமான நீரில் மேற்கொள்ளப்படும் ஒரு வித சிகிச்சை முறை ஆகும்.

2. சிட்ஸ் பாத் : இது மூலம், மாதவிடாய் கோளாறுகள் போன்றவற்றிற்கு பயன்படுத்தும் முறை.

3. ஸ்டீம் பாத்: இது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் ஒரு வித மருத்துவ முறை ஆகும். இவை தவிர மேலும் பலவகையான புறநீர் சிகிச்சை முறைகள் இயற்கை மருத்துவ முறையில் மேற்கொள்ளப்படுகின்றது,

மேலும் இம்மருத்துவ முறையானது மூட்டு நோய்கள், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், மன அழுத்தம், தசைவலி, தலைவலி போன்ற பல நோய்களில் இருந்து எளிதாக விடுபட உதவுகிறது. மேலும் ஜலநேத்தி என்ற மருத்துவ முறையானது நமது நாசியினை தூய்மை செய்யும் ஒரு இயற்கை மருத்துவ முறை ஆகும். இதன் மூலம் தொடர் தும்மல், மூக்கில் நீர் வடிதல், சைனஸ் போன்ற நோய்களில் இருந்து விடுபட முடியும். மேலும் இதன் மூலம் சுவாசம் சீராக நடைபெறும். கண்கள், காது, தொண்டை இம்மூன்று உறுப்புகளும் ஜலநேத்தி செய்வதன் மூலம் சீராக இயங்குகின்றன.

மேலும் நமது மனதிற்கு புத்துணர்ச்சியும், முகத்திற்கு பொலிவும் தருவதோடு கோபம், மனச்சோர்வு ஆகியவற்றை நீக்கி மனதையும், உடலையும் நேர்த்தியாக இயங்கச் செய்கிறது. இந்த ஜலநேத்தி முறையை இயற்கை மருத்துவரிடம் முறையாக பயிற்சி பெற்ற பின்னர் செய்வது சிறந்தது. நாம் முன்னரே கூறியது போல மழை நீரானது உடலுக்கு குளிர்ச்சியை தரக் கூடியது. அதனை அப்படியே பயன்படுத்துவதை விட, காய்ச்சிய பின் பயன்படுத்துவதால் மழைநீரில் உள்ள மலினங்கள் நீக்கப்படுகின்றன. இதனை சமையலுக்கு பயன்படுத்துவதன் மூலம் வயிற்றின் அமிலச் சுரப்பை சீர் செய்கிறது.

மேலும் உடலின் அமில கார சமநிலையை சரியான அளவில் இருக்கச் செய்கிறது. இவை தவிர மண் பானையில் வைத்து அருந்தும் நீரானது இயற்கையிலேயே குளிரூட்டப்படுகிறது. மண் பானையில் தண்ணீரை வைத்து குடிப்பதன் மூலம் தண்ணீரில் காரத்தன்மை ஏற்பட்டு அதனை பருகும் போது உடலின் அமில கார சமநிலை ஏற்படுவதாகவும் உடலின் தேவையற்ற கழிவுகள் வெளியேற்றப்படுவதாகவும் தற்கால நவீன ஆராய்ச்சியில் நிரூபித்து உள்ளனர்.

மேலும் செம்பிற்கு கிருமிகளை கொல்லும் ஆற்றல்இருப்பதாகவும், செம்பு பாத்திரத்தில் நீரை சேமித்து அருந்துவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, உணவுச் செரிமானம் மற்றும் ரத்தத்தின் அமில கார சமநிலை மேம்படுவதாக தற்கால நவீன ஆராய்ச்சி தரவுகள் கூறுகின்றன. ஆனால் இவைகளுக்கு எல்லாம் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே நம் தமிழ் முன்னோர் மண்பானை மற்றும் செம்பு பாத்திரங்களில் நீர் அருந்துவதால் ஏற்படும் பயன்கள், மழைநீர் மற்றும் பலவிதமான நீர்நிலைகளின் பயன்களை பற்றியும் மருத்துவ குணங்களை பற்றியும் தம் நூல்களில் விளக்கி உள்ளனர்.

எனவே தண்ணீரானது நோய் நீக்கும் மருந்தாகவும், நோய்கள் வராமல் பாதுகாக்கும் பேருபகாரியாகவும் உள்ளது. இத்தகைய மருத்துவ பயன்கள் இருக்க கூடிய தண்ணீரை சரியான அளவில், சரியான முறையில் பருகி அனைவரும் நோயில் இருந்து தற்காத்து, நல்ல உடல் நலனோடு வாழ்வோம்.
Tags:    

Similar News