லைஃப்ஸ்டைல்
காலாவதி மருந்துகள்... எதிர்விளைவுகள்...

காலாவதி மருந்துகள்... எதிர்விளைவுகள்...

Published On 2019-08-14 07:36 GMT   |   Update On 2019-08-14 07:36 GMT
காலாவதியான மருந்துகள் நோய் தீர்க்காது என்பதைவிட, சில நேரம், எதிர்விளைவுகளை ஏற்படுத்தி உயிருக்கே உலை வைத்துவிடும் அபாயமும் உள்ளது.
கல்வியும், மருத்துவமும் வணிகமயமாகிவிட்டால் மிகப் பெரிய பண்பாட்டு வீழ்ச்சி ஏற்படும். மிருக உணர்வுகளும் வளர்ந்து விடும். எனவேதான், அரசு கல்வியையும், மருத்துவத்தையும் குடிமக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்ற கொள்கையை ஏற்றிருந்தன. இன்று அரசாங்க மருத்துவமனையை நம்பிச் செல்கிறவர்களைவிட, தனியார் ஆஸ்பத்திரிகளை நோக்கிச் செல்கிறவர்கள்தான் அதிகம் என்ற நிலை உள்ளது.

ஒரே வகையான மருந்துகள், தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஏற்ப பெரும் விலை வேறுபாட்டுடன் சந்தையில் உள்ளன. மருந்துகளின் விலையைக் கட்டுக்குள் வைக்கும் நோக்கில் சில வகையான மருந்துகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. “ஜெனரிக் மெடிசன்ஸ்‘ (மூலப்பொருள் பெயரிலான மருந்துகள்) அதிகம் பிரபலமாகாத நிறுவனங்களால் தயாரிக்கப்படுபவை.

ஆனால், முறையான அனுமதி பெறாமல் இந்தியா முழுவதும் ஏராளமான மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கி வருவதாக ஒரு மருத்துவர் தெரிவித்ததோடு, மேலும் பல அதிர்ச்சியூட்டும் செய்திகளையும் கூறினார். உலக நாடுகள் பலவற்றிலும் தடை செய்யப்பட்டுள்ள பல மருந்துகள் நம் நாட்டில் தங்கு தடையின்றி சந்தையில் விற்கப்படுகின்றன. காலாவதியான மருந்துகளையும் காசாக்கும் தகவல்கள் பதற வைக்கின்றன. காலாவதியான மருந்துகள் நோய் தீர்க்காது என்பதைவிட, சில நேரம், எதிர்விளைவுகளை ஏற்படுத்தி உயிருக்கே உலை வைத்துவிடும் அபாயமும் உள்ளது.

மருந்துக் கடைகளில், காலாவதியாகி தேங்கிவிட்ட மருந்துகளை ஒரு கும்பல் சேகரித்துச் சென்று காலாவதி தேதியை மாற்றி, புது லேபிள் ஒட்டி, மறுசுழற்சி செய்கின்றனவாம். பொதுவாக மருந்தை வாங்கியதும், காலாவதி தேதியை முதலில் பார்ப்போம். தேதியே போலியானது என்றால் என்னதான் செய்வது?. எந்த மருந்து வாங்கினாலும், அதற்கு பில் வாங்க வேண்டும்.

மருந்து குறித்து சந்தேகம் இருந்தால், மருந்தின் மேற்புறம் அச்சிடப்பட்டுள்ள பேட்ச் எண்ணை, மருந்து நிறுவனத்தின் இணையதளத்திற்குள் சென்று பதிவு செய்தால், உண்மையான காலாவதி தேதி தெரிந்துவிடும். ஒருசமயம், பேட்ச் எண்ணே போலியாக இருந்தால், எந்தத் தகவலும் வராது. அந்த விவரங்களை நகல் எடுத்து, நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். எல்லா நோயாளிகளுக்கும் இயல்கிற செயலா இது?.

மருத்துவர்கள் எழுதும் மருந்துகள், அவற்றின் பயன்கள் குறித்து மருத்துவரிடம் நோயாளிகள் கேட்க வேண்டும். மருத்துவர் தரும் மருந்துச் சீட்டில் நோயின் தன்மை, பெயர் எழுதப்பட்டுள்ளதா என கவனிக்க வேண்டும். இவ்வாறு நோய் குறித்த விவரங்களைக் குறிப்பிடுவது கட்டாயம். வெளியூரில் அந்த மருந்து கிடைக்குமா என்று கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். சில மருந்து நிறுவனங்கள் மருத்துவர் குறிப்பிடும் பெயர்களிலேயே மருந்து தயாரித்துத் தருகின்றனவாம். குணமாக்கும் மருத்துவத்தையும், மருந்துகளையும் கொண்டு பணமாக்க மட்டுமே பயன்படுத்துவது வேதனையானது என சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டாமல் இல்லை. 
Tags:    

Similar News