பெண்கள் உலகம்
தினமும் சிறிதளவு மது ஆரோக்கியமா?

தினமும் சிறிதளவு மது ஆரோக்கியமா?

Published On 2019-07-20 13:08 IST   |   Update On 2019-07-20 13:08:00 IST
தினமும் சிறிதளவு மது அருந்தினால் அது உடல்நலனுக்கு நல்லது என்பவர்களுக்கு இது பொய்யான நம்பிக்கை என்பது ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம் பற்றிய பல மூட நம்பிக்கைகள் காலம், காலமாக உண்டு. சாதாரண மனிதர்களிடம் காணப்படும் மூட நம்பிக்கைகளை தாண்டி, மருத்துவ உலகிலும் சில நம்பிக்கைகள் நிலவி வருவதை பார்க்கிறோம். அதில் ஒன்று தான் தினமும் சிறிதளவு மது அருந்தினால் அது உடல்நலனுக்கு நல்லது என்பதும். ஆனால், இது பொய்யான நம்பிக்கை என்பது ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் அதிகப்படியான உடல்நல பாதிப்புகளுக்கும், உயிரிழப்புகளுக்கும் மது முக்கிய காரணமாக இருந்து வருகிறது. ஆனால், மதுவினால் நன்மை உண்டு. அதனை அளவோடு சிறிதளவில் தொடர்ச்சியாக பயன்படுத்துவதன் மூலம் அதன் பயன் கிடைக்கும் என்று சொல்லி வந்தார்கள். இதனை கண்டறியும் பொருட்டு ஆராய்ச்சியில் இறங்கியது ‘குளோபல் பர்டன் ஆப் டிசீஸ் இஞ்சுரிஸ் அண்ட் ரிஸ்க் பேக்ட்டர்ஸ் ஸ்டெடி‘ என்ற அமைப்பு.

இதற்காக உலகம் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. உலகமெங்கும் உள்ள முக்கியமான 195 நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக ஆண், பெண் இருபாலருமாக 7 லட்சம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார்கள். 1990-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட முயற்சியில், இறுதியாக 694 தகவல் அறிக்கைகள் தயாரானது. இவற்றில் இருந்து கிடைத்த முடிவுகள் அதிர்ச்சி தரும் வகையிலேயே இருந்தது. மது அருந்துகிறவர்களுக்கு புற்றுநோய் மற்றும் உயிரிழப்பு அபாயம் அதிகம் என்பதையே அந்த ஆய்வுகள் புரிய வைத்தது.

ஒரு துளி மதுவாக இருப்பினும், ஒரு கோப்பை மதுவாக இருப்பினும் அதன் தீய விளைவுகள் ஒன்றுதான். சம்பந்தப்பட்டவரின் மரபியல் காரணிகள், நோய் எதிர்ப்பு சக்தி போன்றவற்றின் காரணமாக பாதிப்பின் விகிதத்தில் மாறுபாடு ஏற்படலாமே தவிர, பாதிப்பே ஏற்படாது என்று கூறமுடியாது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

மதப் புனித நூல்கள் சிலவற்றில் கூட ஒயின் அருந்துவது உடலுக்கு நல்லது என்று சொல்கின்றன. இந்த கருத்துக்கும் விளக்கமளித்திருக்கிறது இந்த ஆய்வு. அதன்படி, ஒயின் வகை மதுக்கள் திராட்சைப் பழங்களை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படுபவை.

எனவே, திராட்சையில் இருக்கும் ‘ஆன்ட்டி ஆக்சிடென்டுகள்‘ உடலுக்கு நன்மை செய்யும் என்ற கோணத்தில் மது ஆரோக்கியமானது என்ற நம்பிக்கை பரவி இருக்கிறது. அதில் உண்மையில்லை. அதற்கு பதிலாக நேரடியாகவே திராட்சையை உண்டு வந்தால் ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம் கிடைக்கும். மதுவால் ஏற்படும் பாதிப்புகளும் நம்மை அண்டாது என்று பரிந்துரைத்திருக்கிறது ‘குளோபல் பர்டன் ஆப் டிசீஸ் இஞ்சுரிஸ் அண்ட் ரிஸ்க் பேக்ட்டர்ஸ் ஸ்டெடி‘.

மிக முக்கியமான இந்த ஆய்வு முடிவு ‘லான்செட்‘ மருத்துவ இதழில் வெளியாகி இருக்கிறது. ஆக, எந்தவகையில் மது நம் உடலுக்குள் சென்றாலும் கெடுதி தான். உலக வர்த்தக நிறுவனங்கள் மதுவை தனது லாபத்திற்காக ஊக்குவிக்கின்றன. அந்த வலையில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதே இளைஞர்களுக்கு ஆரோக்கியம் என்று மேலும் கூறுகிறது.

Similar News