லைஃப்ஸ்டைல்

இந்த உணவுகளை சாப்பிட்டால் மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம்

Published On 2019-04-29 08:45 GMT   |   Update On 2019-04-29 08:45 GMT
உடலில் நீரிழப்பு ஏற்படுவது தான் மலச்சிக்கலுக்கு முக்கிய காரணம். இந்த உணவுகளை சாப்பிட்டு மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம்.
யோக பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்ய நேரமில்லாதவர்கள் சிலவகை டயட்களை பின்பற்றுகிறார்கள். அதில் ஒன்றுதான் கீடோ டயட். சமீபகாலமாக பிரபலமான இந்த டயட்டை பலரும் பின்பற்றி வருகின்றனர். கீடோ டயட் என்பது கார்போஹைட்ரேட் உணவை முழுவதுமாக தவிர்த்து, கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவது. கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட்டே கொழுப்பை கரைப்பதுதான் கீடோ டயட். இதன் விளைவாக மலச்சிக்கல் ஏற்படக்கூடும். மேலும் வயிறு உப்புசம், வீக்கம், வயிற்று வலி, பைல்ஸ் ஏற்படும் வாய்ப்பும் இருக்கிறது. கீடோ டயட்டில் இருந்து கொண்டே மலச்சிக்கலை எப்படி போக்குவது என்பது குறித்து பார்ப்போம்.

* ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, மல்பெர்ரி போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் உடலுக்கு உகந்த ஊட்டச்சத்துக்களும் அதிகம் உள்ளது. இவை சீசனில் மட்டும்தான் கிடைக்கும் என்பதால் தவறவிடாமல் சாப்பிடுங்கள்.

* ஆரஞ்சு பழத்தில் நரின்ஜெனின் என்னும் ஃப்ளேவனாய்ட் இருப்பதால் செரிமான பிரச்னைக்கு தீர்வாக இருக்கும்.

* கீரைகளில் அதிகபடியான நார்ச்சத்து இருக்கிறது. இதில் மக்னீஷியம் மற்றும் பொட்டாஷியம் இருப்பதால் தசைகளின் ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.

* அவகாடோவில் பொட்டாஷியம் மற்றும் சோடியம் இருப்பதால் உடலுக்கு தேவையான எலக்ட்ரோலைட்கள் கிடைத்துவிடும். இதனால் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் இருக்கும்.

* தக்காளியில் அதிகபடியான நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து இருக்கிறது. இது உங்கள் குடல் இயக்கங்களை சீராக்கி மலச்சிகலை போக்குகிறது.

* சியா விதை, சூரியகாந்தி விதை, ஆளிவிதை போன்றவற்றில் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும் தன்மை இருக்கிறது. மேலும் செரிமான மண்டலத்தின் இயக்கத்தை பராமரிக்கிறது.

*வெள்ளரியில் 90 சதவிகிதம் நீர்ச்சத்து இருக்கிறது. வெள்ளரியை சாப்பிடுவதனால் உடலில் நீரிழப்பு ஏற்படுவது தடுக்கப்படுகிறது. உடலில் நீரிழப்பு ஏற்படுவது தான் மலச்சிக்கலுக்கு முக்கிய காரணம். குறிப்பாக கோடை காலத்தில், வெள்ளரி சாப்பிடுவதால் மலச்சிக்கல் குணமாகும்.

நாம் என்னதான் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டாலும் சரியாக நீர் அருந்தவில்லை என்றால், உடல் உபாதைகள் ஏற்படுவதை தடுக்க முடியாது. நீங்கள் உடல் எடையை கொழுப்பை குறைக்க நினைத்தால் கீடோ டயட்டை பின்பற்றலாம். இந்த உணவுகளை சாப்பிட்டு மலச்சிக்கல் இல்லாமல் கீடோ டயட்டை பின்பற்றலாம்.
Tags:    

Similar News