லைஃப்ஸ்டைல்

ஏசி அறையில் அதிக நேரம் இருப்பதால் ஏற்படும் பின்விளைவுகள்

Published On 2019-03-15 08:39 GMT   |   Update On 2019-03-15 08:39 GMT
எந்நேரமும் ஏசியில் அமர்ந்திருப்பவர்களுக்கு சூரிய ஒளியானது போதுமான அளவு கிடைக்காது. தொடர்ந்து ஏசி அறையில் அதிக நேரம் இருந்தால் உடலில் என்ன பிரச்சனைகள் ஏற்படும் என்று பார்க்கலாம்.
ஏசியின் பயன்பாடு சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். அது சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும். இதனால் சருமம் வறட்சி அடையும். உதடுகளும் உலர்ந்து போய் விடும். எந்நேரமும் ஏசியில் அமர்ந்திருப்பவர்களுக்கு சூரிய ஒளியானது போதுமான அளவு கிடைக்காது. இதனால் வைட்டமின் டி குறைபாடு உருவாகும். ஏசிக்கு நேராக முகத்தை வைத்து உட்காரக் கூடாது. அப்படி உட்கார்ந்தால் சைனஸ் தூண்டப்படும். மூக்கடைப்பு, தலைவலி, காது அடைத்தாற் போல இருப்பது ஆகிய பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஏற்கனவே சோரியாசிஸ், எக்சிமா போன்ற சரும நோய்கள் உள்ளவர்கள் ஏசியில் அதிக நேரம் அமர்ந்தால் நோய் இன்னும் தீவிரமாகும்.

இந்த வைட்டமின், கருவுறுதலில் ஆரம்பித்து இதயம், நுரையீரல் சீராக இயங்குவது வரை தேவையான ஒன்றாகும். இது கிடைக்காமல் போனால் எலும்புகள் பலவீனமடையும். மூட்டுவலி, முதுகுவலி போன்றவை எளிதாக வரும். ஒரு சிலருக்கு ஆஸ்துமா போன்ற பாதிப்புகள் கூட ஏற்படலாம். தலைவலி, நுரையீரல் தொற்று போன்ற பாதிப்புகள் ஏற்படவும் வழிவகுத்துவிடும். நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்கள் சரும வறட்சி பிரச்சினையை அதிகம் எதிர்கொள்ள நேரிடும். ஏசியில் அதிகநேரம் அமர்ந்திருப்பவர்களுக்கு தலைமுடியும் உடைய ஆரம்பிக்கும்.

கூந்தலின் வலுவும் குறையும். சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படும். ஏசியை முறையாக சுத்தம் செய்யாமல் பயன்படுத்துபவர்களுக்கு பாக்டீரியா தொற்று ஏற்பட்டு சருமம் பாதிக்கும். அலுவலகத்தில் ஒருவருக்கு காய்ச்சல், அம்மை அல்லது மெட்ராஸ் ஐ போன்ற நோய்கள் இருந்தால், அது மற்றவர்களுக்கும் எளிதில் பரவிவிடும். சிலருக்கு கண்களில் கண்ணீர் சுரக்காமல் உலர்ந்துவிடும். இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை வாழ்வதன் மூலம் ஏசியால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்தலாம்.

Tags:    

Similar News