லைஃப்ஸ்டைல்

இதய நலனுக்கு இன்றியமையாத கடமைகள்

Published On 2018-11-15 08:41 GMT   |   Update On 2018-11-15 08:41 GMT
தொடர்ந்து துடித்துக் கொண்டே இருக்கும் இதயம் நமக்கு உணர்த்துவது நாம் செய்ய வேண்டிய கடமைகளையும், பிறருக்கும் நாம் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் அவசியத்தையும் என்றும் கூறலாம்.
இதயம் என்றாலே நம் நினைவிற்கு வருவது அன்பு, காதல், பாசம் மற்றும் உறவுகள். தொடர்ந்து துடித்துக் கொண்டே இருக்கும் இதயம் நமக்கு உணர்த்துவது நாம் செய்ய வேண்டிய கடமைகளையும், பிறருக்கும் நாம் அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் அவசியத்தையும் என்றும் கூறலாம். மனிதர்கள் செய்ய வேண்டிய கடமைகள் என்பது, தனதளவிலும், தன் குடும்ப அளவிலும், தன் சமுதாய அளவிலும் மற்றும் உலகளவில் அல்லது எதிர்கால சந்ததியர்க்கு என்ற அளவிலும் விரிந்து செயல்படுவதே சிறப்பு. அந்த வகையில் இதயத்தை சிறப்பாய் காக்கும் நம் கடமையும் மேற்கண்ட வகையில் விரிந்து இருக்க வேண்டும்.

தன்னளவில் செய்ய வேண்டியவை

தொடர்ந்து இயங்கும் என்ஜினை எண்ணெய் போட்டு முறையாய் பராமரிப்பது போல் நம் உணவுமுறை இருக்க வேண்டும். பதப்படுத்திய உணவு, அதிகளவில் செறிவுள்ள கொழுப்பு உணவு, மாட்டிறைச்சி போன்றவகைகளை தவிர்த்து அதிகளவில் இயற்கையான பச்சை காய்கறிகள், பழங்கள் மற்றும் கோழி இறைச்சி போன்றவைகளை உண்ண வேண்டும். புகை மற்றும் மதுவை தவிர்த்து துரித நடைபயிற்சியை மேற்கொண்டு, மன உளைச்சல் இல்லாத வாழ்க்கை முறையை கடைபிடிக்க வேண்டும்.

தன் குடும்பத்திற்கு செய்ய வேண்டியவை

குடும்பத்தில் உள்ளவர்கள் ஆரோக்கியமாக வாழ்க்கை முறையை கடைபிடிக்க உதவ வேண்டும். குடும்பத்தில் பாசம், வாழ்க்கை துணையின் மேல் அக்கரை, குழந்தைகளுக்கு நல்ல விஷயங்களையும் பழக்க வழக்கங்களையும் போதித்தல், குடும்பத்துடன் ஓய்வாக இருக்க நேரம் ஒதுக்குதல் போன்றவை குடும்பத்தின் ஆரோக்கியம் மட்டுமின்றி முழுமையான உடல் நலத்திற்கே நல்லது.

சமுதாய அளவிலான கடமைகள்

புகை பிடித்தல் என்பது தன்னை மட்டுமின்றி சுற்றியுள்ள மனிதர்களையும் பாதிக்கக்கூடியது. முன்பெல்லாம் விளம்பரங்களில் ‘புகை பிடித்தல் உயிரை குடிக்கும்’, புகை பிடிக்காதீர்கள் என்று மட்டுமே கூறப்படுவதுண்டு. ஆனால் தற்போது ‘இந்த இடத்தில் புகை பிடிக்கக்கூடாது’ என்றும் ‘புகை பிடித்தலை அனுமதிக்காதீர்’ என்றும் விளம்பரப்படுத்தப்படுகிறது. இது வரவேற்க வேண்டிய சிறந்த மாற்றம். இன்று மக்களுக்கு அதிகளவில் மன அழுத்தம் தருவது வாகனம் ஓட்டுவது. பொறுப்பற்ற ஓட்டுனர்களால் இது ஏற்படுகிறது எனவே பொறுப்பாகவும், விதிகளை கடைபிடித்தும், சாலையில் விட்டுக்கொடுத்தும் பதட்டமின்றி வண்டி ஓட்டுவது தனக்கும் சமுதாயத்திற்கும் நலமளிக்கும் செயலாகும்.

எதிர்காலத்திற்கான கடமை

ஒவ்வொரு மனிதரும் தன்னளவிலும், தன் குடும்பத்திலும், தன்னை சுற்றியுள்ள சமுதாயத்திலும் மேற்கூறிய முறைகளில் மாற்றங்களை கடைபிடித்தால் அதுவே ஒரு சமுதாயத்தின் நாகரிகமாகவும் பண்பாடாகவும் மாறி விடும். மக்களின் இதயம் மட்டுமின்றி வாழ்க்கையும் கூட ‘டிக் டிக்’ என்பதற்கு பதில் தித்திப்பாக செயல்பட துவங்கி விடும். இந்த நல்ல மாற்றம் ஒன்றே ஆரோக்கிய முதலீடாகி எதிர்கால சந்ததியினர் அதன் பலனை அனுபவிக்க வழிவகுக்கும்.மேற்கண்ட கடமைகள் இதய நலனுக்கு மட்டுமல்ல முழுமையான நலனுக்குமாகும்.

டாக்டர் ஜேக்கப் ஜேம்ஸ்ராஜ்

மூத்த இதய அறுவை சிகிச்சை வல்லுநர் மெட்ராஸ் மெடிக்கல் மிஷன்

சென்னை. 
Tags:    

Similar News