லைஃப்ஸ்டைல்
நீரிழிவை விரட்டும் யோகா

நீரிழிவை விரட்டும் நாற்காலி யோகா

Published On 2021-11-15 03:37 GMT   |   Update On 2021-11-15 03:37 GMT
உடலையும், மனதையும் செம்மையாக்கும் யோகா பயிற்சி மூலம் நிச்சயமாக சுகர் வராமல் வளமாக வாழலாம். இப்பொழுது நாற்காலியில் அமர்ந்து செய்யும் எளிய பயிற்சிகளை காண்போம்.
இன்று சமுதாயத்தில் நிறைய நபர்களுக்கு இருக்கும் ஒரு பெரிய குறைபாடு சுகர் (நீரிழிவு) என்ற நோய். ஆண், பெண், சிறியவர், பெரியவர் என்ற பாகுபாடு இல்லாமல் நிறைய நபர்களுக்கு சுகர் உள்ளது. அதற்காக பலவித மருந்துகள் எடுத்து உடல், மன சோர்வுடன் வாழ்கின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு நம்மிடமே உள்ளது. அது தான் யோகக்கலையாகும். இந்த யோகக்கலை மூலம் சரியான சிகிச்சையாக அதுவும் அனைத்து வயதினரும் செய்யும் வகையில் ஒரு நாற்காலியில் அமர்ந்தே சுகர் நீங்கி சுகமாக வாழும் யோகச் சிகிச்சையை காண்போம்.

சுகரும் - மனமும்

நமது மனதில் எழும் எண்ணங்கள், உணர்வுகளுக்கு ஏற்ப நமது உடலில் சுரப்பிகள் சுரக்கும் தன்மைகள் மாறுபடுகின்றது. மனதில் கவலை, டென்ஷன், கோபம், பயம், எரிச்சல் இருந்தால் கணையம் ஒழுங்காக சுரக்காது. கணையத்தில் உள்ள இரு செல்கள் ஆல்பா/ பீட்டா செல், இதில் பீட்டா செல் இன்சுலினை சுரக்கின்றது. நாம் முதலில் மனதளவில் நல்ல நேர்முகமான எண்ணத்துடன் வாழ வேண்டும். அதற்குத்தான் முத்திரைகள் பயன்படுகின்றது.
முத்திரை என்பது கை விரல் நுனிகள் மூலம் மனித உடலில் ஐந்தாவது அடுக்கில் உள்ள உயிர் சக்தியை, ஆத்ம சக்தியை உடல் முழுவதும் பரவச் செய்து உடல் உள் உறுப்புக்களை சிறப்பாக இயங்கச் செய்யும் கலையாகும். எல்லா வயதினருக்கும் ஏற்ற எளிமையான அருமையான கலையாகும். நம்பிக்கை மட்டும் வேண்டும். உங்களை நம்புங்கள், நமது உயிர் ஆற்றலை நம்புங்கள். உடலையும், மனதையும் செம்மையாக்கும் யோகா பயிற்சி மூலம் நிச்சயமாக சுகர் வராமல் வளமாக வாழலாம். இப்பொழுது நாற்காலியில் அமர்ந்து செய்யும் எளிய பயிற்சிகளை காண்போம்.

நேரம் காலை 4 மணி முதல் 7 மணிக்குள்ளும், மதியம் 12 முதல் 2 மணிக்குள்ளும், மாலை 5 மணி முதல் 7 மணிக்குள்ளும் சாப்பிடும் முன் பயிற்சி செய்ய வேண்டும்,

சின் முத்திரை

நாற்காலியில் நிமிர்ந்து அமரவும். முது கெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை பத்து விநாடிகள் கவனிக்கவும். பின் ஆள்காட்டி விரல், கட்டை விரல் நுனியை இணைக்கவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும். இரு கைகளிலும் பயிற்சி செய்யவும். இரண்டு நிமிடங்கள் இருக்கவும். பின் சாதாரண நிலைக்கு வரவும் . அதிக மன அழுத்தம் உள்ளவர்கள் ஐந்து நிமிடங்கள் பயிற்சி செய்யவும்.

இம் முத்திரை மனதில் உள்ள பயம், கவலை எரிச்சல், மன அழுத்தத்தை நீக்கி மனதிற்கு புத்துணர்வு கொடுக்கும் முத்திரையாகும். நேர்முகமான எண்ணங்களை கொடுக்க வல்லது. எதிர் மறை எண்ணங்களை அழிக்க வல்லது. இதனால் உடல் முழுக்க ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், மூச்சோட்டம் சமமாக இயங்கும். நல்ல பிராண சக்தி உடல் முழுக்க கிடைக்கும். எல்லா நாளமில்லா சுரப்பிகளும் சமமாக சுரக்கும்.

வருண முத்திரை

நாற்காலியில் நிமிர்ந்து அமரவும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை இருபது விநாடிகள் கூர்ந்து தியானிக்கவும். பின் சுண்டு விரல், பெரு விரல் நுனியை இணைக் கவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் முதல் ஐந்து நிமிடங்கள் செய்யவும். காலை / மதியம் / மாலை சாப்பிடும்முன் பயிற்சி செய்யவும். இந்த முத்திரை மூலம் கணையம் நன்றாக இயங்கும். அதில் உள்ள குறைபாடுகள் நீங்கும். சரியான அளவு இன்சுலின் சுரக்கும்.

சுமண முத்திரை

நாற்காலியில் நிமிர்ந்து அமரவும். கண் களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை இருபது விநாடிகள் கூர்ந்து தியானிக்கவும். பின் கைகளை கும்பிடுவதை அப்படியே மாற்றி கும்பிடவும். படத்தில் உள்ளது போல் செய்யவும். இரண்டு நிமிடங்கள் முதல் ஐந்து நிமிடங்கள் செய்யவும். காலை, மதியம், மாலை சாப்பிடும்முன் பயிற்சி செய்யவும்.

இந்த முத்திரை கணையத்தை மிகச் சிறப்பாக இயங்கச் செய்யும். இன்சுலின் சுரக்கும் குறைபாட்டை நீக்க வல்லது. நரம்புத் தளர்ச்சியை நீக்கும். சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் வாழ வழி வகை செய்கின்றது. செரிமானம் நன்றாக இயங்கும். தோள்பட்டை வலி, கால் பாத வலி, வீக்கம் வராமல் தடுக்கின்றது. உடலில் நீரின் தன்மை சரியாக இருக்க செய்கின்றது. சுகர் உள்ளவர்கள் இந்த முத்திரை செய்தால் மிக விரைவிலேயே நல்ல பலன் நிச்சயம் கிடைக்கும்.

அபான வாயு முத்திரை

நாற்காலியில் நிமிர்ந்து அமரவும். முது கெலும்பு நேராக இருக்கட்டும். இயல்பாக நடக்கும் மூச்சை இருபது விநாடிகள் கூர்ந்து கவனிக்கவும். பின் நடுவிரல் மோதிர விரலை மடித்து அதன் நடுவில் கட்டை விரலை வைக் கவும். ஆள்காட்டி விரலை மடித்து கட்டை விரலின் அடியில் வைக்கவும். சுண்டு விரல் மட்டும் தரையை நோக்கி இருக்கட்டும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் முதல் ஐந்து நிமிடங்கள் செய்யவும். பின் சாதாரண நிலைக்கு வரவும்.

மணிபூரகச் சக்கரா தியானம்

ஒரு நாற்காலியில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கைகளை சின் முத்திரையில் வைக்கவும். இரு நாசி வழியாக மிக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பின் உங்களது மனதை வயிற்று உள் பகுதியில் நிலை நிறுத்தவும். நல்ல பிராண சக்தி அந்த சக்கரத்திற்கு கிடைப்பதாக எண்ணுங்கள். இயல்பாக நடக்கும் மூச்சோட்டதை வயிற்று உள் பகுதியில் கூர்ந்து கவனிக்கவும். ஐந்து நிமிடங்கள் முதல் பத்து நிமிடங்கள் தியானிக்கவும். பின் மெதுவாக கண்களை திறந்து சாதாரண நிலைக்கு வரவும்.

இந்த தியானம் வயிற்று உள் பகுதியில் உள்ள கணையத்தை மிக நன்றாக இயங்கச் செய்கின்றது. அதில் உள்ள குறைபாட்டை நீக்கி நல்ல பிராண சக்தியை தருகின்றது. மனித உடலில் ஒவ்வொரு சக்கரமும் ஒவ்வொரு சுரப்பியை நன்கு இயங்கச் செய்யும். அதில் மணிபூரகச் சக்கரம் கணையத்தை நன்கு இயங்கச் செய்கின்றது.

மேற்குறிப்பிட்ட பயிற்சிகளை ஒரு முத்திரை சிகிச்சையாக எடுத்துக் கொள்ளுங்கள் நாற்காலியில் அமர்ந்து தினமும் பயிலுங்கள். ஒரு மண்டலம் 48 நாட்களில் மிக நல்ல பலன் நிச்சயம் கிடைக்கும்.
Tags:    

Similar News