மாணவர்களுக்கு கட்டாய நீச்சல் பயிற்சி அளிக்கப்படுமா?: ஆசிரியை-அதிகாரிகள் கருத்து
- பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு கண்டிப்பாக நீச்சல் கற்றுக்கொடுக்க வேண்டும்.
- பள்ளி மாணவர்களுக்கு கட்டாய நீச்சல் பயிற்சி அளிக்க வேண்டும்.
பூமியில் பிறந்த மனிதன் உலகை மட்டுமின்றி பஞ்சபூதங்களையும் அடக்கி ஆளும் வல்லமை பெற்றவனாக திகழுகிறான். எனினும் சிலர் அந்த பஞ்ச பூதங்களுக்குஇரையாகும் துயரமும் தொடருகிறது. 'நீரின்றி அமையாது உலகு' என்பது வள்ளுவர் வாக்கு. அத்தகைய தண்ணீரை தேக்கிவைத்தும், ஆறு, கால்வாய்கள் வழியாகவும் விவசாயத்துக்கு கொண்டு செல்கிறோம். பூமியை தோண்டி கிணறுகளில் இருந்து தண்ணீரை எடுத்தும் பயன்படுத்துகிறோம்.
தண்ணீரில் நிகழும் உயிரிழப்புகள்
'உள்ளூர்காரனுக்கு பேயை கண்டால் பயம், வெளியூர்காரனுக்கு தண்ணீரை கண்டால் பயம்',
'ஆழம் தெரியாமல் காலை விடாதே'
போன்ற பழமொழிகள் தண்ணீரில் உள்ள ஆபத்தை எச்சரிக்கின்றன. எனினும் வெளியூர்களுக்கு செல்லும் இளைஞர்கள் அங்குள்ள நீர்நிலைகளை கண்டதும் குதூகலம் அடைகிறார்கள். நீச்சல் தெரியாவிட்டாலும், அதில் குளித்தே தீர வேண்டும் என்று ஆர்வம் ஏற்படுகிறது. நீச்சல் தெரிந்தவர் அழைக்கும்போது, நீச்சல் தெரியாதவரும் தண்ணீருக்குள் இருக்கும் ஆபத்தை உணராமல் உள்ளே இறங்கி உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன.
அந்த வகையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும்பாலும் தாமிரபரணி ஆற்றில் குளிக்கும் வெளியூர் நபர்கள் மற்றும் சிறுவர்கள் உயிரிழக்கும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. இதை தடுக்க ஆற்றங்கரையில் ஆபத்தான பகுதி, ஆழமான பகுதி குளிக்கக்கூடாது என்று எச்சரிக்கை பலகைகள் அமைத்துள்ளனர். ஆனாலும் அதையும் மீறி, கரையில் நின்று குளிக்க சென்று, ஆழமான பகுதிக்கு நகரும்போது காலனின் பிடியில் சிக்கிக்கொள்கிறார்கள்.
நெல்லை மாவட்டம் பாபநாசம் தலையணையில் யாரும் உள்ளே சென்று குளிக்கக்கூடாது என்று தடுப்புச்சுவர் கட்டி கேட் போடப்பட்டு உள்ளது. ஆனாலும் சுவர் ஏறி குதித்து குளிக்க செல்கிறார்கள். இதனால் அடிக்கடி உயிரிழப்பு சம்பவங்கள் நடந்தேறி வருகிறது. சமீபத்தில் சென்னையைச் சேர்ந்த 2 இளைஞர்கள் நெல்லை அருகே திருவேங்கடநாதபுரம் தாமிரபரணி ஆற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த 2022-ம் ஆண்டு மட்டும் நீர்நிலைகளில் மூழ்கி 38 பேர் இறந்து உள்ளனர். இந்த ஆண்டில் இதுவரை 13 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளனர்.
கரூர் பகுதிக்கு விளையாட சென்ற பள்ளி மாணவிகள் காவிரி ஆற்றில் குளித்தபோது அடுத்தடுத்து உள்ளே விழுந்து பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது.
தூத்துக்குடியில் 14 பேர் பலி
நீண்ட கடற்கரையை தன்னகத்தே கொண்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆறு மாவட்டத்தின் நடுவே பாய்ந்தோடி சென்று கடலில் கலக்கிறது. தாமிரபரணி ஆற்றின் கீழ் பல்வேறு குளங்கள் உள்ளன. மேலும் மானாவாரி பகுதியிலும் குளங்கள் அமைந்துள்ளன. மழைக்காலங்களில் இந்த குளங்கள் நிரம்பி வழிகின்றன. கோடைகாலங்களில் பெரும்பாலான குளங்களில் குறைந்த அளவு தண்ணீரே கிடக்கிறது.
இதுபோன்ற குளங்கள், ஆறு, கடல் பகுதியில் சிறுவர்கள் ஆர்வத்துடன் விளையாடி மகிழ்கின்றனர். அப்போது நீச்சல் தெரியாமல் சிறுவர்கள், இளைஞர்கள் மூழ்கி இறக்கும் துயரமும் நிலவுகிறது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 7 பேர் நீர்நிலைகளில் மூழ்கி இறந்து உள்ளனர். நடப்பு ஆண்டில் இதுவரை 7 பேர் நீர்நிலைகளில் மூழ்கி பலியாகி உள்ளனர். விளாத்திகுளம் அருகே புதூர் சிவலார்பட்டியில் கடந்த 13-ந் தேதி கண்மாயில் மூழ்கி அண்ணன்-தம்பி உள்பட 3 சிறுவர்கள் இறந்த சம்பவம் மீளாத்துயரை ஏற்படுத்தியது.
நீச்சல் பயிற்சி
கோடை விடுமுறையில் ஒவ்வொரு நாளும் குழந்தைகள் தண்ணீரில் மூழ்கி உயிரிழக்கும் நிகழ்வுகள் நெஞ்சை நொறுங்க செய்கிறது. இதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்க அனைவரும் நீச்சல் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும். சில நாடுகளில் ராணுவத்தில் சேர்ந்து பணிபுரிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது போன்று நீச்சல் பயிற்சியும் கட்டாயம் என்று கொண்டு வருவது நன்மை பயக்கும் என்பது பொதுவான கருத்தாக உள்ளது. குறிப்பாக மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக அதிகாரிகள், நீச்சல் ஆர்வலர்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
பயப்பட தேவையில்லை
நெல்லை மாவட்ட நீச்சல் கழக தலைவர் திருமாறன்:-
மனித வாழ்க்கையில் நீச்சல் அத்தியாவசியமான ஒன்று ஆகும். இது உயிர் காக்கும் கலை ஆகும். நீச்சல் தெரியாமல் இருப்பது உடல் ஊனம் போன்றது. தண்ணீர் அருகில் செல்ல முடியாமல், ஆபத்தை எதிர்கொள்ள வேண்டியது வரும். பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு கண்டிப்பாக நீச்சல் கற்றுக்கொடுக்க வேண்டும். இசை, நடனம், கணினி உள்ளிட்ட பயிற்சிகளை போன்று நீச்சல் கற்கும் பயிற்சிக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் பெற்றோரிடம் போதிய ஆதரவு இல்லை.
நீச்சல் பயிற்சி உயிர்காக்கும் கலை மட்டுமல்லாமல், ஒருமுறை கற்றுக்கொண்டால் எப்போது வேண்டுமானாலும் தண்ணீருக்குள் நீந்தி செல்ல முடியும். இதன்மூலம் உடல் வலுப்பெறும். நீச்சல் அடிக்கும்போது அனைத்து உடல் உறுப்புகளும் செயல்படும். மனம் ஒருமுகப்படும். நெல்லையில் அண்ணா விளையாட்டு அரங்கில் 25 மீட்டர் நீள நீச்சல் குளம் மற்றும் கீழநத்தம் விளையாட்டு அரங்கில் சர்வதேச தரத்தில் பந்தய நீச்சல் குளம் ஆகிய 2 இடங்களில் நீச்சல் குளங்கள் உள்ளன. இங்கு 12 நாட்கள் கோடைகால நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாவட்ட விளையாட்டு அதிகாரியை சந்தித்து, உடனடியாக நீச்சல் பயிற்சி பெறலாம்.
பெற்றோர், குழந்தைகளை இந்த பயிற்சிக்கு அழைத்து செல்ல வேண்டும். 12 நாட்கள் மட்டும் அழைத்து சென்று நீச்சல் பயிற்சி அளித்து விட்டால் வாழ்நாள் முழுவதும் நீர்நிலைகளுக்கு செல்லும் குழந்தைகள் குறித்து பயப்பட தேவையில்லை. முறையாக நீச்சல் கற்றுக்கொண்டால் மற்றவர்களை விட தண்ணீரில் அதிகநேரம் மிதக்க முடியும். பேராபத்தில் பிறரையும் காப்பாற்ற முடியும்.
நெல்லை மணிமூர்த்தீசுவரத்தை சேர்ந்த ஆசிரியைநந்தினி:-
நான் நெல்லை தாமிரபரணி ஆற்றில் 4 வயதிலேயே நீச்சல் கற்றுக் கொண்டேன். நீச்சல் தெரிந்திருப்பதால் ஆறு, குளத்தில் பயம் இன்றி குளிக்க முடிகிறது. நீச்சல் தெரிந்தால் நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ளலாம். எனவே, குழந்தை பருவத்திலேயே நீச்சல் கற்றுக் கொடுக்க வேண்டும். மனிதனுக்கு நீரும், காற்றும் முக்கியம் என்பது போல் நீச்சலும் முக்கியமாகும்.
எச்சரிக்கைகளை மதித்து...
நெல்லை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அதிகாரி கணேசன்:-
தண்ணீரை கண்டதும் பலருக்கும் குளிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும். முன்பு பருவநிலை சரியாக இருக்கும். குளம், குட்டைகளில் நீர் நிரம்பி கிடக்கும். பெற்றோருடன் அங்கு சென்று நீச்சல் கற்றுக் கொள்வார்கள்.
தமிழகத்தில் வற்றாத ஜீவநதியாக தாமிரபரணி ஆறு மட்டுமே ஓடிக்கொண்டு இருக்கிறது. இதில் குளிக்கும் உள்ளூர் மக்கள் பாதுகாப்பாக குளித்துச் செல்கிறார்கள். ஆனால் வெளியூரில் இருந்து உறவினர்கள் வீட்டுக்கு வருகிறவர்கள், தாமிரபரணி ஆற்றில் சென்று குளிக்கும்போது ஆழமான பகுதிக்கு சென்று சிக்கிக் கொள்கிறார்கள். இதற்கு நீச்சல் தெரியாததே காரணம் ஆகும்.
எனவே, தாமிரபரணி ஆற்றங்கரையில் பொதுமக்கள் குளிக்கும் பல இடங்களில் அபாய எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது. இருந்தாலும் எச்சரிக்கையை மீறி விடுகிறார்கள். சீவலப்பேரியில் பாலத்தில் கிழக்கு பகுதியில் அடிக்கடி நிகழ்ந்த உயிரிழப்பை தடுக்கும் வகையில் அங்கு பொதுமக்கள் இறங்கும் படிக்கட்டு அகற்றப்பட்டு, பாதுகாப்பான இடத்தில் மட்டுமே குளிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இதுதவிர கிணறுகள், குளங்களிலும் சில நேரங்களில் நீச்சல் தெரியாமலும், வேறு காரணங்களினாலும் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. மாவட்ட நிர்வாகம், தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையின்எச்சரிக்கைகளை மதித்து பொதுமக்கள் செயல்பட வேண்டும்.
உடல் ஆரோக்கியம்
நெல்லை மாவட்டத்தில் கடந்த 2022-ம் ஆண்டு மட்டும் நீரில் மூழ்கி 38 பேர் இறந்து உள்ளனர். அதில் ஆண்கள் 25, பெண்கள் 10, குழந்தைகள் 3 பேர் ஆவார்கள். 66 பேரை காப்பாற்றி உள்ளோம். இதில் 59 ஆண்கள், 6 பெண்கள், 1 குழந்தை அடங்குவர். இந்த ஆண்டில் இதுவரை 9 ஆண்கள், 3 பெண்கள், ஒரு குழந்தை என 13 பேர் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளனர். 5 பேரை காப்பாற்றி உள்ளோம்.
தமிழகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் அனைத்து விளையாட்டு பிரிவுகளுக்கும் பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். நெல்லை அண்ணா விளையாட்டு அரங்கிற்கு நீச்சல் பயிற்சிக்கு புதிதாக பயிற்சியாளர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
கிராமப்புறத்தை சேர்ந்தவர் சிறுவர், சிறுமியராக இருக்கும்போதே நீச்சல் உள்ளிட்ட கலைகளை அவர்களாகவே கற்றுக் கொள்வார்கள். ஆனால் நகர்ப்புறத்தில் அதற்கான வாய்ப்புகள் உருவாவதில்லை.
வாகன ஓட்டிகளுக்கு ஓட்டுனர் உரிமம், ஹெல்மெட் அவசியம் என்பது போன்று நீச்சல் என்பதும் மிக அத்தியாவசியமான ஒன்றாகும். எனவே பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு கட்டாயமாக நீச்சல் கற்றுக்கொடுக்க வேண்டும். நீச்சல் தெரிந்தவர்களாக வளர்க்க வேண்டும். தமிழகம் முழுவதும் பள்ளியில் படிக்கும் பருவத்திலேயே மாணவர்களுக்கு நீச்சல் கற்றுக்கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பிளஸ்-2 வரை பெற்றோர் கண்காணிப்பில் இருக்கும் மாணவர்கள் கல்லூரிக்கு செல்லும்போது சுதந்திரமாக செயல்படுகிறார்கள். அப்போதுதான் நீர்நிலைகளின் ஆபத்தை உணராமல் உள்ளே இறங்கி சிக்குகிறார்கள். எனவே அவர்களை நீச்சல் தெரிந்தவர்களாக உருவாக்க வேண்டும். இது ஆபத்து காலத்தில் உயிர் பலியாவதை தடுக்கும். மேலும் நீச்சல் பயிற்சியானது உடல் ஆரோக்கியத்துக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது.
நீர்நிலைகளில் இறங்க வேண்டாம்
தூத்துக்குடியை சேர்ந்த ரோஜா ராஜ்:-
நான் நீரில் சிக்கித் தவிப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். இதுவரை நான் பல உயிர்களை காப்பாற்றி உள்ளேன். கடவுள் படைத்த உயிர் வீணாக போய் விடக்கூடாது. இதனை நான் மிகவும் விரும்பி செய்கிறேன். நீர்நிலைகளில் இளைஞர்கள் குளிக்கும்போது, கவனமாக இருக்க வேண்டும். நீச்சல் தெரியாதவர்கள் நீர்நிலைகளில் இறங்க வேண்டாம். இளைஞர்கள் அனைவரும் கண்டிப்பாக நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நீர்நிலைகளில் ஏற்படும் இறப்பை தடுக்க முடியும். நீச்சல் பயிற்சி அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இதற்காக தனியாக ஒரு குழுவையே ஏற்படுத்தவும் இருக்கிறோம். எனவே, பள்ளி மாணவர்களுக்கு கட்டாய நீச்சல் பயிற்சி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.