லைஃப்ஸ்டைல்
ஆரோக்கியம் தரும் குழந்தைகளின் உணவு பாதுகாப்பு

ஆரோக்கியம் தரும் குழந்தைகளின் உணவு பாதுகாப்பு

Published On 2019-07-19 02:56 GMT   |   Update On 2019-07-19 02:56 GMT
குழந்தைகள் பள்ளி செல்லும் இளம் பருவத்தில் உணவு பாதுகாப்பில் அக்கறை செலுத்தினால் எதிர்காலத்தில் சிறந்த ஆரோக்கியமானவர்களாக வாழ்வீர்கள். உணவு பாதுகாப்பு பற்றிய சில வழிகளை தெரிந்து கொள்வோமா...
குட்டீஸ், சாப்பிடும் முன்பு கைகழுவ வேண்டும் என்று அம்மா சொல்லியிருக்கிறார்களா? கழிவறையை பயன்படுத்தினாலும் கைகால்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று கற்றுத்தந்திருக்கிறார்களா? நிஜம்தான், நாம் சுத்தமாக இருந்தால்தான் ஆரோக்கியமாக இருக்க முடியும். ஏராளமான நோய்கள், கைகள் மற்றும் உணவுகள் மூலமாக நம் உடலில் தொற்றுகின்றன. உண்ணும் உணவை பாதுகாப்பாக கையாளுவது நோய்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளும் சிறந்த வழியாகும். பள்ளி செல்லும் இளம் பருவத்தில் உணவு பாதுகாப்பில் அக்கறை செலுத்தினால் எதிர்காலத்தில் சிறந்த ஆரோக்கியமானவர்களாக வாழ்வீர்கள். உணவு பாதுகாப்பு பற்றிய சில வழிகளை தெரிந்து கொள்வோமா...

* சமைத்த உணவில் கிருமிகள் தொற்றும் வாய்ப்பு கைகளில் இருந்துதான் தொடங்குகிறது. எனவே கழிவறை சென்று திரும்பியதும் கை கழுவுவது, சாப்பிடும் முன்பு கை கழுவுவது போன்ற சுகாதார பழக்க வழக்கங்கள் மூலம் உணவுடன் கலந்து கிருமிகள் உடலுக்குள் செல்வதை தடுக்கலாம். சாதாரண நேரத்தில் உடலில் சொறிவது, மூக்கு, காதுகளில் விரல்களால் குடைவது, அசுத்தமான இடங்களில் கைகளால் விளையாடமல் இருப்பது சுத்தத்திற்கான சிறந்த வழியாகும்.

* இந்த பழக்க வழக்கத்தால் தொற்றும் கிருமிகளை தவிர்க்கவே கைகளை நன்கு கழுவிய பின்பு உணவருந்த பெற்றோரும், பெரியோரும் சொல்கிறார்கள். நீங்கள் பள்ளி சென்றாலும், வேறு எங்கு சென்றாலும் தவறாமல் இந்த நல்ல பழக்கங்களை பின் பற்ற வேண்டும். கைகளை கழுவும் “குழாய்” உயரமாக இருந்தால், உங்களுக்கு கைகழுவ தனியே தண்ணீர் வைக்கச் சொல்லுங்கள் அல்லது குழாய் உயரத்திற்கேற்ற ஒரு இருக்கையை அதன் அருகே போட்டு வைத்துக் கொண்டு கைகழுவி பழகுங்கள்.

* கைகழுவ குறிப்பிட்ட நேரம் ஒதுக்க வேண்டும். 20 விநாடிகளுக்கு குறையாமல் கை கழுவுவது அவசியமாகும். “அம்மா இங்கே வா...வா” அல்லது “ஜானி ஜானி எஸ் பாப்பா” போன்ற ஏதாவது ஒரு பாடலை பாடிக்கொண்டு சுமார் 20 விநாடிகளுக்கு குறையாத நேரத்தை கைழுவ பயன்படுத்துங்கள். உங்களுக்கு விருப்பமான சோப்பை கைகழுவ பயன் படுத்தலாம்.

* குளிர்ந்த இடத்தில் உணவுப் பொருளை பராமரிப்பது எளிதில் கிருமிகள் தொற்றுவதையும், உணவுகள் கெட்டுப்போவதையும் தடுக்கும். குளிர்வூட்டி “லஞ்ச் பாக்ஸ்”கள் விற்பனைக்கு கிடைக்கின்றன. அதை பயன்படுத்த முடியாதவர்கள் உலோக பாத்திரங்களை பயன்படுத்தலாம். அதுவும் கிருமித் தொற்றை தடுக்கும். முடிந்தவரை பிளாஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்த வேண்டாம். அதிலும் சூடான உணவுகளை பிளாஸ்டிக் பாத்திரங்களில் வைக்க வேண்டாம்.

* உணவுப்பொருட்கள் சூடாகவே இருக்க வேண்டுமென்றால் அதற்காக வெப்பத்தை வெளியிடாத உலோக பாத்திரங்களை பயன்படுத்தலாம். தெர்மாகோல் மூடி பராமரித்தாலும் உணவுகள் சூடு குறையாமல் இருக்கும்.



* குழந்தைகளிடையே எளிதில் நோய்பரவ நொறுக்குத் தீனிகளும் ஒரு காரணமாகும். நீங்கள் தின்பண்டங்களை கொடுத்தால் போட்டிபோட்டு சாப்பிடுவீர்கள்தானே. ஆனால் அனைவரது கைகளும் ஒரே மாதிரியாக சுத்தம் பராமரிக்கப்பட்டிருக்காது என்பதால் நீங்கள் நண்பர்கள் அல்லது சகோதர சகோதரிகளுடன் தின்பண்டங்களை சேர்ந்து சாப்பிடுவதாக இருந்தால் அவற்றை பகிர்ந்து தனித்தனியே சாப்பிடுங்கள். அல்லது கிருமித்தொற்றுகள் ஏற்படலாம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

* குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு மண்டலம் முழு வளர்ச்சி அடைந்திருக்காது என்பதால் எளிதில் நோய்த் தொற்றுக்கு உள்ளாகலாம். எனவே உணவு சமைக்கும் இடம் மற்றும் “லஞ்ச் பாக்ஸ்” மற்றும் பைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும். இது பொறுப்புள்ள பெற்றோரின் கடமையாகும். குட்டீஸ் நீங்கள் குழம்புகள், உணவுப் பொருட்களை சிந்துவதை தவிர்த்தால் கிருமித் தொற்று ஏற்படுவதையும், நோய் பரவுவதையும் தடுக்கலாம்.

* அதுபோலவே திறந்த வெளியில் வைத்து விற்கும் பண்டங்களை சாப்பிடுவதை தடுக்க வேண்டும். வெளியில் கிடைக்கும் அவித்த முட்டைகள், பாதுகாப்பானதல்ல. அதை வாங்கினால் குளிர்பதன பெட்டியில் 2 மணி நேரம் வைத்திருந்து பின்னர் சாப்பிடலாம்.

* பெரிய உணவுத் துண்டுகள், கடினமான உணவுப் பொருட்களை துண்டாக்கி சாப்பிடுங்கள். நன்கு மென்று சாப்பிடுங்கள். வேர்க்கடலை, மக்காச்சோளம், மிட்டாய்கள், தக்காளி, உருளை போன்றவை பெரிய துண்டுகளாக இருந்தால் கவனமாக சாப்பிட வேண்டும்.

* சாப்பிடும்போது அமர்ந்து நிதானமாக சாப்பிட வேண்டும். நடக்கும்போதும், ஓடும்போதும், விளையாடும்போதும் பண்டங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். படுத்துக்கொண்டும் சாப்பிடக் கூடாது.

* ஒமேகா-3 கொழுப்புச்சத்துள்ள கடல்மீன் உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இது அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.சுகாதாரமான பழக்க வழக்கங்களும், உணவுப் பாதுகாப்பு முறைகளும் உங்களுக்கு ஆரோக்கியத்தை வழங்கட்டும்.
Tags:    

Similar News