லைஃப்ஸ்டைல்

குழந்தைகளை தாக்கும் மாசு - ஏற்படும் உடல் பாதிப்புகள்

Published On 2018-11-15 03:31 GMT   |   Update On 2018-11-15 03:31 GMT
மாசடைந்த காற்றை சுவாசிக்கும்போது குழந்தைகளின் மூளைக்கு பாதிப்பு நேரும். அதைத்தொடர்ந்து பல வழிகளில் உடல் ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகும்.
காற்று மாசுபடுவது சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாவதோடு பச்சிளம் குழந்தைகளின் உயிரையும் பலிவாங்கிக்கொண்டிருக்கிறது. மாசுவால் உருவாகும் நச்சுக்காற்றால் பாதிக்கப்பட்டு 2016-ம் ஆண்டில் மட்டும் 6 லட்சம் குழந்தைகள் மரணமடைந்திருக்கிறார்கள். அவர்களில் இந்தியாவில் மட்டும் ஒரு லட்சத்து 10 ஆயிரம் குழந்தைகள் இறந்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இவற்றுள் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 60,987.

நைஜீரியாவில் 47,674 குழந்தைகளும், பாகிஸ்தானில் 21,136 பேரும், காங்கோவில் 12,890 பேரும் இறந்திருக்கிறார்கள். இந்தியாவில் ஆண் குழந்தைகளைவிட (28,097) பெண் குழந்தைகள்தான் (32,889) அதிக அளவில் இறக்கிறார்கள். 5 வயது முதல் 14 வயதுக்குட்பட்டவர்களில் 4,360 பேர் மரணத்தை தழுவியிருக்கிறார்கள்.

உலக அளவில் காற்று மாசுபாடு காரணமாக இறப்பவர்களில் 25 சதவீதம் பேர் இந்தியர்களாக இருக்கிறார்கள். உலகில் பெருமளவு மக்கள் நச்சுக்காற்றை சுவாசிப்பதால் சுவாசக்கோளாறு பிரச்சினைகளுக்கு ஆளாகிறார்கள். ‘‘மாசடைந்த காற்றை சுவாசிக்கும்போது குழந்தைகளின் மூளைக்கு பாதிப்பு நேரும். அதைத்தொடர்ந்து பல வழிகளில் உடல் ஆரோக்கியம் பாதிப்புக்குள்ளாகும்’’ என்கிறார், உலக சுகாதார நிறுவனத்தின் சுற்றுச்சூழல் மற்றும் பொது சுகா தாரத்துறை இயக்குனர் மரியா நெய்ரா.

காற்று மாசுபாடு கர்ப்பிணி பெண்களுக்கும் பாதிப்பை உண்டாக்குகிறது. குறைப்பிரசவத்தில் குழந்தை பிறப்பது, குழந்தையின் உடல் எடை குறைவாக இருப்பது போன்ற பிரச்சினைகள் தோன்றும்.
Tags:    

Similar News