லைஃப்ஸ்டைல்

குழந்தைகளுக்கு சமைக்க கற்றுக் கொடுங்க

Published On 2018-10-12 08:55 GMT   |   Update On 2018-10-12 08:55 GMT
இன்றைய பிள்ளைகள் சமையல் என்றாலே ஓடுபவர்களாக இருக்கிறார்கள். உங்கள் பிள்ளைகளுக்கு சிறுவயதிலேயே சமையல் கற்றுக் கொடுப்பது மிகவும் அவசியம்.
பல குடும்பங்களில் வீட்டில் மனைவிக்கு உடல் நிலை சரியில்லாமல் போகும்போது அங்கே உணவு சமைப்பது யார் என்ற மிகப்பெரிய கேள்வி எழுகிறது. இது போன்ற இக்கட்டான நிலையை தவிர்க்க உங்கள் பிள்ளைகளுக்கு சிறுவயதிலேயே சமையல் கற்றுக் கொடுப்பது மிகவும் அவசியம். 12 வயதிலிருந்து அவர்களை சமையல் செய்யத் தயார்படுத்தலாம்.

மகள் மட்டுமின்றி மகனையும் சமையலுக்கு பழக்கலாம். ஆனால் இன்றைய பிள்ளைகள் சமையல் என்றாலே தூரம் ஓடுபவர்களாக இருக்கிறார்கள். இதனால் பிள்ளைகளை சமையல் செய்ய பழக்கும்போது, படிப்படியாகத்தான் கற்றுத் தரவேண்டும். எடுத்த எடுப்பிலேயே அதைச் செய், இதைச் செய் என்று அதட்டி வேலை வாங்காமல் சிறு சிறு வேலைகளை அவர்களுக்கு கொடுக்கவேண்டும்.

முதலில் கியாஸ், மண்எண்ணெய் அடுப்பு என்றால் பாதுகாப்பான முறையில் அவற்றை பற்ற வைக்க கற்றுத் தரவேண்டும். தண்ணீர் சுட வைப்பது, பால் காய்ச்சுவது, டீ-காபி போடுவது, தோசை சுடுவது, ஆம்லெட் போடுவது, முட்டையை வேக வைப்பது போன்றவற்றை செய்ய பழக்கவேண்டும். இந்த மாதிரி சிறுசிறு வேலைகளில் எல்லா பிள்ளைகளுக்குமே ஆர்வம் இருக்கும்.



இதற்கு பழக்கிய பின்னர் அரிசி களைவது, காய்கறிகளை நறுக்குவது, கழுவுவது, மசாலாப் பொருட்களை ஒன்று சேர்ப்பது போன்ற வேலையை செய்யச் சொல்லலாம். நான்காவது கட்டமாக அவற்றை குக்கர்-வாணலியில் எந்த நேரத்தில் போடவேண்டும், எந்த நேரத்தில் இறக்கவேண்டும், வாணலியில் வறுப்பது என்றால் எந்தெந்த நேரத்தில் எல்லாம் காய்கறிகளை கிளறிவிடவேண்டும் என்பதைச் சொல்லித் தரலாம்.

இதேபோல் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களின் அளவிற்கேற்ப பாத்திரங்களை கையாள்வது பற்றி பிள்ளைகளுக்கு எடுத்துக் கூறவேண்டும். பொருட்களின் அளவை நீங்கள் எடுத்துக் கொடுக்காமல் அவர்களிடமே அந்த பொறுப்பை விடவேண்டும். சமையலைக் கற்றுத் தரும்போது அருகிலேயே நீங்கள் இருந்து விளக்கவேண்டும்.

எண்ணெயை உபயோகிக்கும்போது அதை அவர்கள் சரியான அளவில் ஊற்றுவதற்கும் சொல்லித் தரவேண்டும். சாதம் வடிப்பதற்கு தேவைப்படும் தண்ணீரின் அளவு, குடும்ப நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவைப்படும் அரிசியின் அளவு, காய்கறிகளை வேக வைப்பதற்கு போதுமான தண்ணீர், சாம்பார் பொடி, மசாலாப் பொடி எவ்வளவு தேவை என்பதையும் சுயமாக தேர்ந்தெடுக்கும் வகையில் பழக்கவேண்டும். கத்தி, அரிவாள் மனையை அவர்களாகவே கையாளும் அளவிற்கு பழக்கவேண்டாம்.
Tags:    

Similar News