லைஃப்ஸ்டைல்

திசை மாறிச்செல்லும் குழந்தை வளர்ப்பு முறை

Published On 2018-05-31 02:53 GMT   |   Update On 2018-05-31 02:53 GMT
குழந்தை வளர்ப்பினை புரிந்து, குழந்தையை கொண்டாடி, ஆனந்தமான, வலுவான, செறிவான இளைய சமூகத்தைக் கட்டமைக்க முற்படுவோம்.
இன்றைய குழந்தைகள் வி‌ஷயத்தில், விளையாட்டுகளை நாம் பறிகொடுத்துவிட்டு நிற்கிறோம். கிராமப்புறங்களைத் தவிர்த்து தெருக்களில் சிறுவர்கள் புழுதிகளில் விளையாடுவது அரிதாகிவிட்டது. விளையாட்டுகளுக்குப் பதிலாக மாணவர்களின் நேரம் தொலைக்காட்சியிலும், வீடியோ கேம்களிலும், டியூ‌ஷன்களிலும் சென்றுவிடுகின்றது. விளையாட்டுகள் கொடுக்கும் உடலுறுதியும் மன உறுதியும் அசாத்தியமானது.

நம் தாத்தா-பாட்டிகள் போல வயதான காலத்திலும் உறுதியாக, திடமாக இருக்க முடியுமா என்பது சந்தேகமே. அதனை விட நம் குழந்தைகள் நிலைமையை நினைத்தால் அச்சமே மிஞ்சுகின்றது. பெரியவர்கள் நிலையும் அதற்கு மேல். வீட்டுக்கு வீடு ஸ்மார்ட்போன். எல்லோர் கையிலும் எந்நேரமும் ஸ்மார்ட்போன். அருகருகே அமர்ந்து கொண்டு செல்போனில் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். குழந்தைகளை கவனிப்பதில்லை.இப்படி புறக்கணிக்கப்படும் குழந்தைகளுக்கு உளவியல் ரீதியாக வெற்றி-தோல்விகளைச் சரிசமமாகப் பாவிக்கும் மனநிலை பாதிக்கப்படுகின்றது.

தோல்வியைக் கண்டால் ஓடி ஒளிந்து கொள்கின்றனர். கூட்டாக சிறுவர்கள் விளையாடும்போது ஏற்படும் நன்மைகள் ஏராளம். மற்ற குடும்பங்கள் பற்றிய அறிதல், விட்டுக்கொடுக்கும் பாங்கு, வெற்றி-தோல்வி இரண்டையும் ருசிபார்த்தல் ஆகியவை சாதாரணமாக நிகழும். அந்நாட்களில் தொலைக்காட்சி குறைந்த நேரத்தையே எடுத்துக்கொண்டிருந்தது. நிகழ்ச்சிகளும் குறைவு, தொலைக்காட்சி பெட்டிகளும் குறைவு.



ஆனால் இன்று இல்லம் தவறாமல் பெட்டி ஓடிக்கொண்டே இருக்கின்றது. பெரும் நேரத்தை இது விழுங்கிவிடுகின்றது. தொலைக்காட்சியில் நன்மைகள் இருந்தாலும் அதன் சதவீதம் மிகக்குறைவே. குழந்தைகள் தொலைக்காட்சியை அதிக நேரம் பார்க்காமல் இருக்க வைப்பது பெரும் போராட்டமே. கல்வியைப் பற்றிய எதிர்பார்ப்பிலும் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. பிள்ளைகள் பெரும் மதிப்பெண் பெற்றால் போதும் என்ற எண்ணம் ஆரம்ப பாடசாலையில் இருந்தே ஆரம்பித்துவிடுகின்றது. இதனால் இதர வி‌ஷயங்களில் குழந்தைகள் கவனம் செல்வதைப் பெற்றோர்கள் விரும்புவதில்லை.

பாடம், படிப்பு, டியூ‌ஷன், மனப்பாடம், மதிப்பெண் இது போதும் என்ற மனநிலையில் உள்ளனர். இதனைத் தவிர, ஏராளமான கவனச்சிதறல்கள், எதிலும் நாட்டமில்லாமை ஆகியவை பெரும் கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. சிதறிப்போன கூட்டுக்குடும்ப வாழ்க்கை நம் சிறுவர்களை வரும்காலத்தில் பாதிக்கலாம். பெரியவர்கள் பல வி‌ஷயங்களில் சமன் செய்தார்கள். உணவு முதற்கொண்டு கதை சொல்வது, கண்டித்து வளர்ப்பது என குழந்தை வளர்ப்பின் பெரும் பகுதிகளை அவர்கள் செய்துவந்தார்கள்.

இத்தகைய சூழலில் குழந்தை வளர்ப்பு கவனமும் முக்கியத்துவம் பெறுகிறது. உலகமயமாக்கப்பட்ட சூழலில் நமக்குள் புகுந்துள்ள உணவுப் பழக்கம் தொடங்கி, குழந்தைகளை அணுகுதல், கல்வியை அணுகுதல், ஊடகங்களைப் பயன்படுத்துதல், உறவுகளைப் பேணுதல், குழந்தைகளுக்கான கதைச் சொல்லலின் அவசியம், தரமான நேரத்தை குழந்தைகளுடன் செலவழித்தல், விளையாட ஊக்கப்படுத்துதல், அதற்கான தளங்களை உருவாக்குதல், இன்னும் ஏராளமான வி‌ஷயங்கள் குழந்தை வளர்ப்பின் அவசியத்தை உணர்த்துகின்றன. குழந்தை வளர்ப்பினை புரிந்து, குழந்தையை கொண்டாடி, ஆனந்தமான, வலுவான, செறிவான இளைய சமூகத்தைக் கட்டமைக்க முற்படுவோம்.
Tags:    

Similar News