வழிபாடு

குடும்ப ஒற்றுமையை காக்கும் வீரபத்ரன்

Published On 2023-12-01 05:18 GMT   |   Update On 2023-12-01 05:18 GMT
  • வீரபத்திரர் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார்.
  • இடக்கரத்தில் தண்டாயுதத்திற்குப் பதிலாக கேடயம் வைத்திருக்கிறார்.

சேலம் மாவட்டத்தின் மைய பகுதியில் வீரபத்திரசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. வீரபத்திரர் நான்கு கரங்களுடன் காட்சி தருகிறார். இடக்கரத்தில் தண்டாயுதத்திற்குப் பதிலாக கேடயம் வைத்திருக்கிறார். வலப்புறம் தட்சனும், இடப்புறம் பத்திரகாளியும் காட்சி தருகின்றனர். பத்திரகாளியின் கைகளில் பாசம், சூலம், உடுக்கை ஆகியவை அமைந்துள்ளன.

சிவராத்திரியன்று இரவில் வீரபத்திரருக்கு ஒரு கால பூஜை சிறப்பாக நடைபெறுகிறது. மறுநாள் அவர் அம்பாளுடன் முத்துப்பல்லக்கில் வீதி உலா செல்கிறார்.

பொதுவாக வீரபத்திரருக்கு வில்வம், வெற்றிலை மாலை அணிவித்து வழிபடுவது வழக்கம். ஆனால், இங்கு இவருக்கு மூங்கில் இலை மாலை அணிவிப்பது விசேஷம். பிரிந்திருக்கும் தம்பதியர் மற்றும் உறவினர்கள் வீர பத்திரருக்கு மூங்கில் இலை மாலை அணிவித்து குடும்ப ஒற்றுமைக்காக வேண்டுகின்றனர்.

மூலஸ்தானத்தில் சிவலிங்கம் தனிச்சன்னிதியில் பிரதிஷ்டை செய்துள்ளனர். இவர், 'ஜங்கமேஸ்வரர்' என்று அழைக்கப்படுகிறார். இவரையும் வீரபத்திரராகவே பாவித்து பூஜை செய்கின்றனர்.

ஐப்பசி பவுர்ணமியில் ஐங்கமேஸ்வரருக்கு அன்னா பிஷேகம் செய்யப்படுகிறது. மற்ற சிவாலயங்களில், சுவாமிக்கு அபிஷேகம் செய்த அன்னத்தை ஆண். பெண் இருபாலருக்கும் பிரசாதமாக தருவர். ஆனால் இங்கு புத்திர பாக்கியம் இல்லாத பெண்களுக்கு மட்டுமே இந்த பிரசாதம் வழங்கப்படுகிறது.

நவக்கிரக சன்னிதி எதிரில், ராஜ கணபதி அருள்பாலிக்கிறார். நவக்கிரக சன்னிதியில் உள்ள சனீஸ்வரர், விநாயகரின் பார்வையில் இருப்பதால் இவர் 'அனுக்கிரக மூர்த்தியாக காட்சி தருகிறார்.

அம்பாள் வேதநாயகி, வள்ளி, தெய்வானை சமேத முருகன் சன்னிதிகளும் இத்திருக்கோவிலில் அமைந்துள்ளன. சிவன் சன்னிதி எதிரே மேல் விதானத்தில் 12 ராசி களுடன் கூடியராசிக்கட்டம் மற்றும் ராசிக்குரிய பரிவார தெய்வங்கள் உள்ளன.

சிவராத்திரி, நவராத்திரி, மார்கழி திருவாதிரை ஆகிய விழாக்கள் இக்கோவிலில் சிறப்பாக நடைபெறுகிறது. திருமணம் மற்றும் புத்திர பாக்கியத்திற்காக இங்கு பிரார்த்தனை செய்கின்றனர். சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், விநாயகர் மற்றும் சனீஸ்வரரை பிரார்த்தனை செய்கின்றனர்.

இக்கோவிலில் வேண்டுதல்கள் நிறைவேறிய உடன் சிவனுக்கு அபிஷேகம் செய்தும், வீரபத்திரருக்கு வெற்றிலை மாலை அணிவித்தும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

சேலம் பழைய பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ தொலைவில் இத்திருக்கோவில் அமைந்துள்ளது.

Tags:    

Similar News