வழிபாடு

வாழ்ந்து காட்டிய வள்ளல் நபி

Published On 2023-09-26 10:30 IST   |   Update On 2023-09-26 10:30:00 IST
  • சிறுவயதில் அவர் வீண் விளையாட்டுகளில் அறவே ஈடுபாடு காட்டவில்லை.
  • அநாதையாக நின்ற முகம்மதை அவரது பாட்டனார் வளர்த்து வந்தார்.

கி.பி. 6-ம் நூற்றாண்டின் இறுதியில், இன்றைய சவுதி அரேபியாவின் பாலைவன பகுதியிலுள்ள மக்கா நகரில் அப்துல்லா-ஆமினா தம்பதியருக்கு ஒற்றை மகனாக பிறந்தார் முகம்மது. தாய் வயிற்றில் ஆறு மாத சிசுவாக இருக்கும் போதே அவர் தம் தந்தையை இழந்தார், தம் ஆறாம் வயதில் தாயை இழந்தார். அநாதையாக நின்ற முகம்மதை அவரது பாட்டனார் அப்துல் முத்தலிப் பாசத்துடன் வளர்த்து வந்தார்.

சிறுவயதில் அவர் வீண் விளையாட்டுகளில் அறவே ஈடுபாடு காட்டவில்லை. தம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு உதவி செய்பவராக, சிரமப்படுபவர்களுக்கு தன்னால் இயன்றவரை உபகாரம் செய்பவராக இருந்தார். எந்த ஒரு சூழ்நிலையிலும் பொய் பேசாதவராக இருந்தார். இதனால் தான் அவரை ஊர்மக்கள் 'அல் அமீன்' (நம்பிக்கைக்குரியவர்) என்றும், 'அஸ்ஸாதிக்' (உண்மையாளர்) என்றும் சிறப்புப் பெயரிட்டு அழைத்து வந்தனர்.

தமது வாலிப வயதில் ஆடு மேய்ப்பது, வியாபாரத்திற்குச் செல்வது போன்ற முன்னேற்றச் செயல்பாடுகளில் ஆர்வமாக ஈடுபட்டார்கள். தமது இருபத்து ஐந்தாம் வயதில் நாற்பது வயதான விதவை கதீஜா அம்மையாரை திருமணம் செய்து கொண்டார்கள்.

இதே காலகட்டத்தில் 'ஹில்ஃபுல் ஃபுளூல்' என்ற பெயரில் செயல்பட்டு வந்த சமூக நீதிச்சங்கத்திலும் தம்மை இணைத்துக் கொண்டு பாதிக்கப்பட்ட உள்ளூர், வௌியூர் மக்களின் நீதிக்காக போராடினார்கள், நாளடைவில் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள மனம் விரும்பியதின் அடிப்படையில் மூன்று மைல்களுக்கு அப்பாலுள்ள சுமார் இரண்டாயிரத்து ஐநூறு அடி உயரத்தில் அமைந்திருந்த 'ஹிரா' குகையில் தியானம் செய்து வந்தார்கள்.

அப்படி ஒருநாள் தியானத்தில் இருக்கும் போது தான் வானவர் ஜிப்ரயீல் வந்து முகம்மதை கட்டிப்பிடித்து, 'ஓதுவீராக..., உம்மைப் படைத்தவனின் பெயரைச் சொல்லி ஓதுவீராக' என்று கூற, அன்று முதல் வஹி மூலம் அவருக்கு திருக்குர்ஆன் வசனங்கள் வெளிப்படத் தொடங்கின. அப்போது தான் அவர் நபி எனப்படும் இறைத்தூதர் ஆனார்.

அப்போது முதல் அல்லாஹ்வின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட திருக்குர்ஆன் வசனங்களையும், அதில் இடம்பெற்றுள்ள இஸ்லாமிய கொள்கை, கோட்பாடுகளை, சட்டதிட்டங்களை தமக்கு நெருக்கமானவர்களிடம் முதலில் சொல்ல ஆரம்பித்தார். அதில் முதன் முதலாக இஸ்லாமை மனப்பூர்வமாக ஏற்று தனது ஆதரவுக்கரத்தை நீட்டியது மனைவி கதீஜா அம்மையார்தான்.

முகம்மது நபி (ஸல்) அவர்களின் சிறப்பு குறித்து திருக்குர்ஆனில் இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளது:

'நபியே நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்'. (68:4)

'அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு: நிச்சயமாக, அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது'. (33:21)

நம்பிக்கையாளர்களே, நிச்சயமாக உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார்; நீங்கள் துன்பத்திற்குள்ளாகி விட்டால், அது அவருக்கு மிக்க வருத்தத்தைக் கொடுக்கின்றது; அன்றி, உங்(கள் நன்மை)களையே அவர் பெரிதும் விரும்புகிறார்; இன்னும் முஃமின்கள் மீது மிக்க கருணையும் கிருபையும் உடையவராக இருக்கின்றார்'. (9:128)

'நபியே, அகிலத்தார் அனைவருக்கும் கிருபையாகத் தான் உம்மை நாம் அனுப்பியுள்ளோம்'. (21:107)

நபிகள் நாயகம் மதீனா வந்த இறுதிப் பத்தாண்டுகளில் தான் இஸ்லாம் வேகமாக வளரத் தொடங்கியது, யஸ்ரிப் என்றிருந்த அந்த ஊர்ப் பெயர் 'மதீனத்துர் ரசூல்- இறைத் தூதரின் நகரம்' என்று பெயர் மாற்றம் பெற்றது. கூடவே மனிதர்களின் நடவடிக்கைகளும் மாற்றம் பெறத் துவங்கின.

மது, மாது, சூது, வட்டி, திருட்டு, கொலை, கொள்ளை, அடிமைத்தனம், விபச்சாரம், பெண் சிசுவை உயிரோடு புதைப்பது, குலப்பெருமை, குடும்பப் பகைமை, குறிப்பாக சிலை வணக்கம் போன்றவற்றில் மூழ்கித்திளைத்த மக்கள் அதில் இருந்து விடுபட்டு நபிகளார் காட்டிய பாதையில் வாழத்தொடங்கினார்கள்.

'நான் இரக்கம் காட்டுபவனாகத் தான் அனுப்பப்பட்டிருக்கின்றேன். சபிப்பவனாக அல்ல...' என்று தம்மை அவ்வப்போது அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். சொன்னபடி வாழ்ந்து காட்டினார்கள்.

தமது இறுதி நாட்களை நெருங்கும் நேரத்தில் சுமார் ஒரு லட்சத்து இருபத்து ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனிதப் புனிதர்களையும் உருவாக்கி, அவர்களில் எவரையும் நீங்கள் தாராளமாக பின்பற்றி நடக்கலாம் என்று உத்திரவாதம் அளித்திருந்தார்கள் என்பதில் தான் அவர்களது வெற்றியின் ரகசியம் மறைந்திருக்கிறது.

தோன்றின் புகழோடு தோன்றுக என்ற சொல்லிற்கு உரியவர்களாக நாயகத்தின் தோழர்களும், தோழியர்களும் அடுத்தடுத்த தலைமுறைக்கு நாயகர்களாகவே இருந்தார்கள் என்பது தான் ஆச்சரியம்.

தொழுகையில் கவனமுடன் இருங்கள், பெண்களிடம் கண்ணியமுடன் நடந்து கொள்ளுங்கள், மகத்தான எனது வழித்தோழ(னான இறைவ)னை நோக்கி.... என்று சொன்னவாறே தமது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டார்கள். அப்போது நபிகளாரின் வயது அறுபத்து மூன்று.

வாருங்கள் நபிகளின் வாழ்வியலைப் படிப்போம்...! நல்ல பல வரலாறுகளை படைப்போம்...!

Tags:    

Similar News