வழிபாடு

முருகன் கோவில்களில் வைகாசி விசாக திருவிழா 2-ந் தேதி நடக்கிறது

Update: 2023-05-31 06:26 GMT
  • கும்பம் கொட்டுதல், காத்தவராயன் பூஜை நடக்கிறது.
  • 108 கலச அபிஷேகம் நடக்கிறது.

மும்பையில் உள்ள முருகன் கோவில்களில் வருகிற 2-ந் தேதி வைகாசி விசாகம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

கோரேகாவ் டீன் டோங்கிரி பகுதியில் உள்ள முருகன் கோவிலில் கடந்த வெள்ளிக்கிழமை கால்நாட்டு, காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் வைகாசி விசாகம் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்து வந்தது. இன்று (புதன்கிழமை) காலை முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது. நாளை (வியாழக்கிழமை) 108 கலச அபிஷேகம் நடக்கிறது. இரவு 8 மணிக்கு குழந்தைகள் கலை நிகழ்ச்சி, பரிசு வழங்குதல் நடைபெறுகிறது.

வரும் வெள்ளிக்கிழமை (2-ந் தேதி) வைகாசி விசாக தினத்தில் காலை 6 மணிக்கு சாமிக்கு மூலமந்திர ஜெப ஹோமம் நடக்கிறது. காலை 7 மணிக்கு பக்தர்கள் அலகு, வேல்குத்தி, பால்குடம், காவடி எடுத்து ராமர் கோவில் வழியாக முருகன் கோவிலுக்கு ஊர்வலம் வருகின்றனர். மதியம் 12 மணிக்கு பிறகு மகா அபிஷேகமும், மகா தீபாராதனை மற்றும் அன்னதானம் நடக்கிறது.

இரவு சந்தனகாப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடக்கிறது. சனிக்கிழமை (3-ந் தேதி) மாலை 6.45 முதல் 8.30 மணிக்குள் வள்ளி தேவசேனா சுப்பிரமணியசுவாமி திருகல்யாணம் நடைபெறுகிறது. அதன்பிறகு வீதி உலா, அன்னதானம் நடக்கிறது.

செம்பூர் திலக்நகரில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் சார்பில் 65-வது ஆண்டு வைகாசி விசாக திருவிழா விமரிசையாக நடைபெற உள்ளது. வருகிற 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வைகாசி விசாகத்தன்று காலை 11 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து, அலகு குத்தி, சக்தி கிரகம், அக்னி சட்டி எடுத்து ஸ்ரீபுலங்கேஷ்வர் சிவன் கோவிலில் இருந்து, கோவிலுக்கு ஊர்வலமாக வருகின்றனர். மாலை 6 மணிக்கு பக்தர்கள் பொங்கல் வைத்து பூஜை செய்கின்றனர். இரவு 8 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது.

3-ந் தேதி (சனிக்கிழமை) இரவு முத்துமாரியம்மன் திருவீதி உலா நடைபெறுகிறது. 4-ந் தேதி இரவு நித்திய பூஜை நடந்து கோவில் நடை சாத்தப்படுகிறது. கும்பம் கொட்டுதல், காத்தவராயன் பூஜையும் நடக்கிறது.

Tags:    

Similar News