வழிபாடு

திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் இரவு 7 மணி முதல் அதிகாலை 2 மணி வரை கருடசேவை

Published On 2022-09-14 04:52 GMT   |   Update On 2022-09-14 04:52 GMT
  • 27-ந்தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை பிரம்மோற்சவ விழா நடக்கிறது.
  • 26-ந்தேதி அங்குரார்ப்பணம் நடக்கிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு நடக்கும் பிரம்மோற்சவ விழாவில் இரவு 7 மணியில் இருந்து அதிகாலை 2 மணிவரை கருடசேவை நடக்கிறது, என முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி கூறினார்.

திருமலை அன்னமயபவனில் பக்தர்களிடம் இருந்து தொலைப்பேசி மூலம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 27-ந்தேதியில் இருந்து அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதையொட்டி 20-ந்தேதி காலை 6 மணியில் இருந்து பகல் 11 மணிவரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் ஆலய சுத்தி நடக்கிறது. மதியம் 12 மணிக்கு மேல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

26-ந்தேதி இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை அங்குரார்ப்பணம் நடக்கிறது. 27-ந்தேதி மாலை 5.45 மணியில் இருந்து மாலை 6.15 மணி வரை மீன லக்னத்தில் கொடியேற்றம் நடக்கிறது. இரவு 9 மணியில் இருந்து இரவு 11 மணி வரை பெரிய சேஷ வாகன வீதிஉலா நடக்கிறது.

கொடியேற்றம் அன்று ஆந்திர முதல்-மந்திரி ஒய்.எஸ்.ஜெகன்மோகன்ரெட்டி, மாநில அரசின் சார்பில் மூலவர் ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பணம் செய்கிறார்.

அதைத்தொடர்ந்து தினமும் காலை 8 மணியில் இருந்து காலை 10 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரையிலும் வாகன சேவை நடக்கிறது. ஆனால் கருட வாகன சேவை மட்டும் இரவு 7 மணியில் இருந்து அதிகாலை 2 மணி வரை நடக்கிறது.

அக்டோபர் மாதம் 5-ந்தேதி காலை 6 மணிக்கு சக்கர ஸ்தானம், இரவு 9 மணியில் இருந்து இரவு 10 மணி வரை கொடியிறக்கம் நடக்கிறது. பிரம்மோற்சவத்துக்கு வரும் பக்தர்களை கவனத்தில் கொண்டு, இலவச தரிசனத்தை மட்டும் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் அமல்படுத்த முடிவு செய்துள்ளது.

பக்தர்களின் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, வி.ஐ.பி. பிரேக் தரிசனங்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளுடன் வரும் பெற்றோர், என்.ஆர்.ஐ. பக்தர்கள், பாதுகாப்புப் பணியாளர்களுக்கான சிறப்பு தரிசனங்களை ரத்து செய்துள்ளோம்.

சேவைகளுடன், ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு காணிக்கை வழங்கும் பக்தர்கள், பிற அறக்கட்டளைகளுக்கு காணிக்கை வழங்கும் பக்தர்களுக்கான தரிசனம், ரூ.300 தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன. 50 சதவீத அறைகள் பக்தர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்ய வசதி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

திருமலையில் அறைகள் குறைவாக இருப்பதால், பக்தர்கள் அறைகள் பெற்று, திருப்பதியில் தங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். சாதாரண நாட்களில் தரிகொண்டா வெங்கமாம்பா அன்னப்பிரசாத கட்டிடத்தில் காலை 9 மணியில் இருந்து இரவு 11 மணி வரை அன்னப்பிரசாத வினியோகம் நடக்கிறது.

பிரம்மோற்சவ நாட்களில் காலை 8 மணியில் இருந்து இரவு 11.30 மணி வரை அன்னப்பிரசாதம் வழங்கப்படும். கருட சேவை அன்று இரவு 2 மணி வரை பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்படும்.

வாகன சேவை முன்பு ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் மராட்டிய மாநிலங்களில் இருந்து ஆன்மிக உணர்வைத் தூண்டும் வகையில் நம்பமுடியாத கலை வடிவங்களை ஏற்பாடு செய்வோம்.

இதேபோல் திருப்பதியில் உள்ள மகதி கலையரங்கம், ராமச்சந்திரா புஷ்கரணி, அன்னமாச்சாரியார் கலையரங்கம், திருமலையில் உள்ள ஆஸ்தான மண்டபம் ஆகிய இடங்களில் இசை, நடன நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

ஆச்சாரமான இந்து மதத்தை பரப்பும் நடவடிக்கையாக, மாநிலம் முழுவதும் மொத்தம் 1342 கோவில்களை கட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம். சமர சதாசேவா அறக்கட்டளையோடு இணைந்து எஸ்.சி, எஸ்.டி, பி.சி. மற்றும் மீனவர்கள் வசிக்கும் பகுதிகளில் ஸ்ரீவாணி அறக்கட்டளை திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 502 கோவில்களின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன. இங்கு பக்தர்களுக்கு தரிசன பாக்கியம் கிடைக்கும்.

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தயாரிக்கும் 15 வகையான பஞ்சகவ்ய பொருட்கள் பக்தர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதேபோல், தூபக் குச்சிகள் பக்தர்களால் பிரத்யேகமாக வாங்கப்படுகின்றன. பஞ்சகவ்ய பொருட்கள், ஊதுபத்தி விற்பனை மூலம் கிடைக்கும் வருமானத்தை மாடுகளின் வளர்ச்சிக்கு பயன்படுத்தி வருகிறோம்.

திருமலை-திருப்பதி தேவஸ்தான கோவில்களில் பயன்படுத்தப்படும் மலர்களைப் பயன்படுத்தி உலர் மலர் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட ஸ்ரீவாரி உருவப் படங்கள், கீ செயின்கள் மற்றும் பிற பொருட்களை பக்தர்கள் பெருமளவில் வாங்கி செல்கின்றனர்.

குழந்தைகளின் பல நோய்களுக்கு இலவச அறுவை சிகிச்சைகள் மற்றும் மருத்துவ சேவைகளை வழங்க பக்தர்களின் காணிக்கையில் ஸ்ரீபத்மாவதி குழந்தைகள் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை விரைவில் கட்டப்படும். தற்போதுள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் இதுவரை 652 இதய அறுவை சிகிச்சை செய்து ஏழை குழந்தைகளின் உயிரை காப்பாற்றி உள்ளோம். ஏழுமலையானின் அருளால் வங்கதேசம் போன்ற தொலைதூர நாடுகளில் இருந்து பெற்றோர் தங்களின் குழந்தைகளை அழைத்து வந்து இலவசமாக இதய அறுவை சிகிச்சை செய்தனர்.

பசுவை அடிப்படையாகக் கொண்ட இயற்கை விவசாயப் பொருட்களுடன் திருமலை வெங்கடாசலபதிக்கு பிரசாதம் மற்றும் பிற பிரசாதங்கள் தயாரிக்க 12 வகையான பொருட்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இயற்கை விவசாயிகளை ஊக்குவிக்க குறைந்த பட்ச ஆதரவு விலையை விட சற்றே கூடுதல் விலை கொடுத்து வருகிறோம்.

ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 17 காணிக்கையாளர்கள் திருமலையில் அன்னப்பிரசாதம் தயாரிப்பதற்காக 2004-ம் ஆண்டு முதல் ரூ.200 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள காய்கறிகளை இலவசமாக வழங்கி உள்ளனர். இயற்கை விவசாயத்துடன் காய்கறிகளை பயிரிட விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News