வழிபாடு

அருணாசலேஸ்வரர் கோவில் உற்சவமூர்த்தி பூஜைகளை செல்போன் செயலி மூலம் தரிசனம் செய்யும் வசதி

Published On 2023-05-23 13:38 IST   |   Update On 2023-05-23 13:38:00 IST
  • உற்சவ மூர்த்தி சன்னதிக்கு எதிரில் அதிநவீன கேமரா பொருத்தப்பட்டு உள்ளது.
  • பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் அக்னி ஸ்தலமாகவும் விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். குறிப்பாக பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு நேரில் சென்று தரிசனம் செய்ய இயலாத பக்தர்களின் வசதிக்காக உற்சவ மூர்த்திக்கு நடைபெறும் சிறப்பு வழிபாடுகளை நேரடியாக கண்டு தரிசிக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி அருணாசலேஸ்வரர் கோவிலில் நடை திறப்பு முதல் நடை அடைக்கும் நேரம் வரை உற்சவ மூர்த்திக்கு நடைபெறும் அனைத்து வழிபாடுகளையும், பூஜைகளையும், அலங்காரத்தையும் நேரடியாக இணையதளத்தின் மூலம் யூடியூப் சேனல் வழியாக ஒளிபரப்பப்படுகிறது.

இதற்காக உற்சவ மூர்த்தி சன்னதிக்கு எதிரில் அதிநவீன கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இது குறித்து கோவில் இணை ஆணையர் குமரேசன் கூறியதாவது:-

அருணாசலேஸ்வரர் கோவிலில் உற்சவ மூர்த்தி வழிபாடுகளை நேரில் தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் https://youtube.com/@arunachaleswarartemple livestrea என்ற இணைய தள முகவரி வழியாக காணலாம். மேலும் தமிழ்நாட்டின் பிரசித்த பெற்ற கோவில்களின் தகவல்கள் மற்றும் சேவைகளை எளிதில் பெறுவதற்காக உருவாக்கப்பட்டு உள்ள Thirukkoil என்ற செல்போன் செயலியை பயன்படுத்தியும் நேரடி ஒளிபரப்பை காணும் வசதி செய்யப்பட்டு உள்ளது.

உற்சவ மூர்த்தி வழிபாடு நேரடி ஒளிபரப்புக்கு பக்தர்களிடம் கிடைக்கும் வரவேற்பை தொடர்ந்து கோவில் விழாக்கள் அனைத்தையும் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான முயற்சிகளையும் அறநிலையத்துறை மேற்கொள்ளும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News