வழிபாடு

தேரோட்டத்தை முன்னிட்டு தேர் தயார்படுத்தும் பணி நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.

திருப்பரங்குன்றம் தேரை இழுக்க 2-ந்தேதி பாரம்பரியப்படி வெற்றிலை, பாக்கு வைத்து அழைப்பு

Published On 2023-03-30 08:19 GMT   |   Update On 2023-03-30 08:19 GMT
  • 9-ந் தேதி மகா தேரோட்டம் நடக்கிறது.
  • திருப்பரங்குன்றம் கோவிலின் தேரில் எண்ணற்ற அழகிய சிற்பங்கள் உள்ளன.

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி பெருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகின்ற 9-ந் தேதி மகா தேரோட்டம் நடக்கிறது. இதனையொட்டி முகூர்த்த கால் ஊன்றப்பட்டு கோவில் வாசல் முன்பு நிலை நிறுத்தப்பட்டுள்ள பெரிய தேர் தயார்படுத்தும் பணி தொடங்கியது. 3 கி.மீ. சுற்றளவு கொண்ட கிரிவலப்பாதையில் மகாதேர் வலம் வரும். லட்சக்கணக்கான பக்தர்கள் தேரினைவடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்கிறார்கள். அரிச்சந்திர மகராஜா வழங்கியதாக செவிவழி செய்தி கூறும் இந்த தேரினை வடம்பிடித்து இழுப்பதற்கு கோவில் உருவான காலம் தொட்டு இன்றுவரை பாரம்பரிய பழக்க வழக்கங்கள் கடைபிடிக்கப்படுகிறது.

அதன்படி திருப்பரங்குன்றம் அருகே உள்ளபெருங்குடி, பரம்புபட்டி, வலையப்பட்டி, சம்பக்குளம், நிலையூர், கூத்தியார்குண்டு, தோப்பூர், வேடர் புளியங்குளம், தனக்கன்குளம், வடிவேல்கரை, கீழக்குயில்குடி, மேலக்குயில்குடி ஆகிய கிராமங்களுக்கு சென்று தேரினை இழுப்பதற்காக கிராம மக்களுக்கு வெற்றிலை, பாக்கு கொடுத்து அழைப்பு விடுவது நடைமுறையில் உள்ளது. அதன்படி வருகின்ற 2 -ந்தேதி கோவிலில் இருந்து கோவில் முதல் ஸ்தானிகரும், முன்னாள் பேரூராட்சி தலைவருமான சுவாமிநாதன் தலைமையில் வைராவி, கணக்குப்பிள்ளை, நாட்டாண்மைகள், காவல்காரர்கள் ஆகியோர் அந்த கிராமங்களுக்கு நேரடியாக சென்று முக்கியஸ்தர்கள், நாட்டாண்மைகள் மற்றும் முதன்மைக்காரர்களை சந்தித்து வெற்றிலை, பாக்கு மற்றும் திருவிழா பத்திரிக்கை ஆகியவை தட்டில் வைத்து தேரினை இழுக்க வாருங்கள் என்று அழைப்பு விடுக்கிறார்கள்.

திருப்பரங்குன்றம் கோவிலின் தேரில் எண்ணற்ற அழகிய சிற்பங்கள் உள்ளன. அதில் ஆறுமுகப்பெருமான் தனது திருக்கரத்தில் வேலுக்கு பதிலாக தராசு பிடித்து இருப்பது போன்று ஒரு சிற்பம் உள்ளது. இது நீதி, நேர்மை, நியாயத்தின் அடையாளமாக அமைந்து உள்ளதாகவும், இதனால் ்திருப்பரங்குன்றத்தை தராசுக்கார பூமி என்று அழைப்பதாகவும் கூறுகிறார்கள்.

Tags:    

Similar News