வழிபாடு

ராமேசுவரம் கோவிலில் ராமநாதசாமி- பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாணம்

Published On 2022-08-04 06:57 GMT   |   Update On 2022-08-04 06:57 GMT
  • வழக்கத்தைவிட ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
  • 8-ந்தேதி சாமி-அம்பாள் கெந்தமாதனபர்வத மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.

ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இந்த ஆண்டின் ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ராமேசுவரம் கோவிலில் நடந்து வரும் ஆடி திருக்கல்யாண திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று ராமநாதசாமி-பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக நேற்று அதிகாலை 2 மணிக்கு ராமதீர்த்தம் பகுதியில் உள்ள தபசு மண்டகபடியில் இருந்து பர்வத வர்த்தினி அம்பாள் பலவகை பூக்களால் அலங்கரிக்கப் பட்ட தங்க பல்லக்கில் எழுந்தருளி திட்டக்குடி சாலை, நடுத்தெரு, மேற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி, கிழக்கு ரத வீதி சாலை வழியாக கோவிலுக்கு வந்தடைந்தார்.

தொடர்ந்து திருக்கல்யாண நிகழ்ச்சிக்காக ராமநாதசாமி- பர்வத வர்த்தினி அம்பாள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இரவு 7.30 மணிக்கு தெற்கு கோபுர வாசல் பகுதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் உள்ள மணமேடைக்கு எழுந்தருளினர்.

தொடர்ந்து அங்கு திருக்கல்யாணத்திற்கான பூஜை நடைபெற்றது. பின்னர் 8.20 மணிக்கு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாணத்தை கண்டுகளித்தனர்.

கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக ஆடித்திருக்கல்யாண திருவிழாவில் கோவிலுக்குள் அனுமதிக்கப்படாத நிலையில் நேற்று நடந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் வழக்கத்தைவிட ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

திருக்கல்யாண திருவிழாவின் கடைசி நாள் நிகழ்ச்சியாக வருகிற 8-ந்தேதி சாமி-அம்பாள் கெந்தமாதனபர்வத மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது.

Tags:    

Similar News