2025 மார்கழி மாத ராசிபலன் - மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்
- புதிய திட்டங்கள் தீட்டி வெற்றி காண்பீர்கள்.
- வருமான அதிகரிப்பிற்கு வழிபிறக்கும்.
மேஷ ராசி நேயர்களே!
மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் லாப ஸ்தானாதிபதி சனி லாப ஸ்தானத்திலேயே சஞ்சரிக்கிறார். இதனால் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். கொடுக்கல் - வாங்கல் நல்லபடியாக அமையும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது சஞ்சரிக்கிறார். பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி சூரியனும், உங்கள் ராசிநாதன் செவ்வாயும் இணைந்து சஞ்சரிப்பதால் இம்மாதம் இனிய மாதமாகவே அமையும்.
மிதுன - குரு
மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு வக்ர இயக்கத்தில் செல்கிறார். அப்பொழுது அவரது பார்வை பதியும் இடங்கள் பலம் பெறுகின்றன. இதன் விளைவாக கல்யாணக் கனவுகள் நனவாகும். நீண்ட நாட்களாக பேசிப் பேசி கைவிட்டுப் போன வரன்கள் இப்பொழுது மீண்டும் வரலாம். அவற்றை பரிசீலனை செய்து தகுந்ததை தேர்வு செய்ய உகந்த நேரம் இது. தந்தை வழியில் இருந்த பிரச்சினைகள் அகலும். தடைப்பட்ட காரியங்கள் தானாக முடிவடையும். முந்திய காலத்தில் நடைபெறாத சில காரியங்கள் இப்பொழுது படிப்படியாக நடைபெறத் தொடங்கும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடிய வழிபிறக்கும். பொருளாதார நிலை உயர வெளிநாடு செல்ல நினைத்தவர்களுக்கு, நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். ஏழரைச் சனி தொடங்க இருப்பதால், சுய ஜாதகத்தின் பலம் அறிந்து ஏற்றுக்கொள்வது நல்லது.
தனுசு - சுக்ரன்
மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் பாக்கிய ஸ்தானத்திற்கு வரும் இந்த நேரத்தில், பொன் - பொருள் சேர்க்கை ஏற்படும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அள்ளிக் கொடுக்கும் சுக்ரன் நல்ல இடத்திற்கு வருவதால், எல்லா வழிகளிலும் நன்மை கிடைக்கும். குறிப்பாக பொருளாதார நெருக்கடி அகலும். உத்தியோகத்தில் உயர் பதவிகளும், ஊதிய உயர்வும் கிடைப்பதற்கான அறிகுறி தென்படும். நல்ல சந்தர்ப்பங்கள் நாடிவரும் நேரம் இது.
மகர - செவ்வாய்
மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்கு செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். ராசிநாதன் செவ்வாய் உச்சம்பெறும் இந்த நேரம், அற்புதமான நேரமாகும். எந்த செயலைச் செய்தாலும், அதற்கான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இடம் வாங்குவது, பூமி வாங்குவது போன்றவற்றில் ஆர்வம் கூடும். உடன்பிறப்புகளும், உடன் இருப்பவர்களும் உறுதுணையாக நடந்துகொள்வர். கடன்சுமை குறையும். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். புதிய திட்டங்கள் தீட்டி வெற்றி காண்பீர்கள்.
பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும். கலைஞர்களின் எண்ணங்கள் எளிதில் வெற்றிபெறும். மாணவ - மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை கூடும். பெண்களுக்கு திருமண முயற்சி கைகூடும். திடீர் மாற்றம் உருவாகும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
டிசம்பர்: 20, 21, 26, 27, ஜனவரி: 1, 2, 5, 6.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.
ரிஷப ராசி நேயர்களே!
மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே உங்கள் ராசிநாதன் சுக்ரன், தன - பஞ்சமாதிபதியான புதனோடு இணைந்து சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இந்த யோகமான நேரத்தில் பொருளாதார நிலை உயரும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். குடும்ப முன்னேற்றம் கூடும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். கடுமையாக முயற்சித்தும் இதுவரை நடைபெறாத காரியங்கள் இப்பொழுது துரிதமாக நடைபெறும். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து இணைவர். ஆயினும் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது.
மிதுன - குரு
மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு வக்ர இயக்கத்தில் செல்கிறார். அப்பொழுது அவரது பார்வை பதியும் இடங்கள் அனைத்தும் புனிதம் அடைகின்றன. உங்கள் ராசிக்கு அஷ்டம - லாபாதிபதியானவர் குரு. அவரது பார்வை பலத்தால் உத்தியோகம், தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த ஒரு சில காரியங்கள் இப்பொழுது துரிதமாக முடிவடையும். எதிரிகள் விலகுவர். லாபம் வரும் வழியைக் கண்டுகொள்வீர்கள். சென்ற மாதத்தில் தொழிலில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும் என்றாலும், குரு வக்ரமாக இருப்பதால் ஒரு சில சமயங்களில் மன வருத்தமும் வந்துசேரும். வெளிநாடு சென்று பணிபுரிய வேண்டு மென்று நினைத்தவர்களுக்கு, இப்பொழுது அதற்கான சூழல் உருவாகும். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் முயற்சி கைகூடும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகள் சில நுணுக்கங்களை கற்றுக்கொடுப்பர்.
தனுசு - சுக்ரன்
மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 6-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் சுக்ரன். அவர் அஷ்டமத்தில் சஞ்சரிப்பது அற்புதமான நேரமாகும். எதிர்பாராத திருப்பங்கள் பலவும் ஏற்படும். இடமாற்றம், வீடு மாற்றம் இனிமை தரும் விதம் அமையும். உத்தியோகத்தில் கூடுதல் உயர்வு கிடைத்து, சம்பள உயர்வு எதிர்பார்த்தபடி அமையும். எந்த காரியத்தை முயற்சித்தாலும், அது உடனடியாக முடிவடையும் நேரம் இது.
மகர - செவ்வாய்
மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்கு செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். விரயாதிபதி உச்சம்பெறுவதால் இந்த நேரத்தில் விரயங்கள் அதிகரிக்கும். வீண் விரயங்களில் இருந்து விடுபட சுபவிரயங்களை மேற்கொள்ளுங்கள். பிள்ளைகளின் திருமணத்தை முன்னிட்டு சீர்வரிசைப் பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்தலாம். கட்டிய வீட்டைப் பழுது பார்க்கும் யோகம் உண்டு. வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கும் முயற்சி கைகூடும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகளில் மாற்றம் ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு அதை விரிவு செய்யும் முயற்சி வெற்றி பெறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். கலைஞர்களுக்கு கவுரவம் உயரும். மாணவ - மாணவிகள் கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படித்து முடிப்பது உத்தமம். பெண்களுக்கு பணவரவு திருப்தி தரும். சுபச்செய்திகள் வந்துசேரும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
டிசம்பர்: 23, 24, 27, 28, ஜனவரி: 3, 4, 7, 8.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.
மிதுன ராசி நேயர்களே!
மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன் 6-ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். 'மறைந்த புதனால் நிறைந்த தன லாபம் உண்டு' என்பார்கள். எனவே பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும் மாதம் இது. சுக்ரனோடு புதன் இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குவதால், தொழில் மற்றும் உத்தியோகத்தில் கணிசமான லாபம் கைகளில் புரளும் வாய்ப்பு உண்டு. இம்மாதம் ஜென்ம குரு வரப்போவதால் திடீர் இடமாற்றங்கள், ஊர் மாற்றம் வரலாம். உத்தியோகத்தில் கூட ஒரு சிலருக்கு நீண்ட தூரங்களுக்கு மாறுதலாகி செல்லும் வாய்ப்பு உண்டு.
மிதுன - குரு
மார்கழி 6-ந் தேதி மிதுன ராசிக்கு குரு செல்கிறார். அங்ஙனம் ஜென்ம குருவாக வரும்பொழுது அவர் வக்ர இயக்கத்திலும் இருக்கிறார். எனவே ஆரோக்கியத் தொல்லைகளும், மருத்துவச் செலவுகளும் அதிகரிக்கும். திடீர் இடமாற்றங்களால் மனக்குழப்பம் ஏற்படும். உத்தியோகத்தில் வரும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளலாமா?, வேண்டாமா? என்பது பற்றி சிந்திப்பீர்கள். தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. தனித்து இயங்க முடியாமல் பிறரை சார்ந்திருப்பவர்கள் பொறுமையோடு செயல்பட வேண்டிய நேரம் இது. உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை மற்றவர்களிடம் கொடுப்பதால் ஒரு சில பிரச்சினைகள் உருவாகும்.
'குரு இருக்கும் இடத்தைக் காட்டிலும் பார்க்கும் இடத்திற்கு பலன் அதிகம்' என்பார்கள். அந்த அடிப்படையில் பார்க்கும்பொழுது, அதன் பார்வை பலனால் சில நன்மைகளும் நடக்கும். சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். பிள்ளைகளால் உருவான பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். பெற்றோரின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு அது கைகூடும். பழைய வாகனங்களை கொடுத்துவிட்டு, புதிய வாகனங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். 'சொத்து விற்பனையால் வரும் லாபத்தைக் கொண்டு சுப காரியங்கள் நடத்தலாமா?' என்று யோசிப்பீர்கள்.
தனுசு - சுக்ரன்
மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 7-ம் இடத்திற்கு வரும்போது வாழ்க்கைத் துணைக்கு வேலை கிடைக்கும். அதேநேரம் கணவன் - மனைவி இருவரும் வேறு வேறு இடத்தில் பணிபுரியக்கூடிய சூழ்நிலை உருவாகும். வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் பணிபுரிய ஆசைப்பட்டவர்களுக்கு அது கைகூடும். தனுசு ராசியானது குருவிற்குரிய வீடு என்பதால், அதில் சஞ்சரிக்கும் பகை கிரகமான சுக்ரன் பலவித வழிகளிலும் திடீர் திடீரென மாற்றங்களைக் கொடுப்பார். மன வருத்தங்களும் அதிகரிக்கும்.
மகர - செவ்வாய்
மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், அங்கு உச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் உச்சம்பெறும் இந்த நேரத்தில் உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்படும். உயர் அதிகாரிகள் உங்கள் வளர்ச்சிக்கு வழிகாட்டுவர். ஒரு சிலருக்கு கடல் கடந்து செல்லும் வாய்ப்பு கைகூடும். குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். வருமானம் உயரும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு இதுவரை ஏற்பட்ட வீண் பழிகள் அகலும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மாணவ - மாணவிகளுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். பெண்களுக்கு பிரச்சினைகள் ஒவ்வொன்றாகத் தீரும். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
டிசம்பர்: 26, 27, 29, ஜனவரி: 5, 6, 9, 10.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.
கடக ராசி நேயர்களே!
மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்திலேயே அஷ்டமத்துச் சனி பலம்பெற்று சஞ்சரிக்கிறார். ஜென்மத்தில் சஞ்சரிக்கும் குருவும், வக்ர இயக்கத்தில் இருக்கிறார். எனவே இம்மாதம் சோதனைக் காலமாகவே இருக்கும். சிக்கல்களும், சிரமங்களும், சிறுசிறு தொல்லைகளும் வரலாம். பக்கபலமாக இருப்பவர்களை நம்பி எதையும் செய்ய இயலாது. பல பணிகள் பாதியிலேயே நிற்கும். சோதனைகளை சாதனைகளாக மாற்றிக் காட்ட வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். அந்த வழிபாட்டை முழுமையாக சனியின் மீது செலுத்த வேண்டிய நேரம் இது.
மிதுன - குரு
மார்கழி 6-ந் தேதி, மிதுன ராசிக்கு குரு வக்ர இயக்கத்தில் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு பகவான். அவர் 12-ம் இடத்திற்கு வரும்போது பயணங்கள் அதிகரிக்கும். பல வழிகளிலும் விரயங்கள் ஏற்படும். இடமாற்றம் திடீரென வந்து இதயத்தை வாட்டும். குரு பார்வை பதியும் இடங்கள் நன்மை தரும் என்பதால், தாய்வழி ஆதரவு கிடைக்கும். மற்ற சகோதரர்களிடம் அன்பு காட்டிய பெற்றோர், இப்போது உங்கள் மீதும் பாசம் காட்டுவர். இடம், பூமியால் ஏற்பட்ட பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். பத்திரப் பதிவில் இருந்த தடை அகலும்.
உத்தியோகத்தில் இதுவரை உங்களுக்கு தொல்லை கொடுத்து வந்த மேலதிகாரிகள் மாறுதலாகிச் செல்வர். எதிர்பாராத சலுகைகளைப் பெறுவீர்கள். வீடு கட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். இதுவரை வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்ய எடுத்த புது முயற்சிக்கு பலன் கிடைக்கும். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து இணைவர். வருமானம் திருப்திகரமாக இருக்கும். வழக்குகள் சாதகமாக முடியும். வாகன மாற்றம் செய்ய உகந்த நேரம் இது.
தனுசு - சுக்ரன்
மார்கழி 7-ந் தேதி, தனுசு ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 4, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். சுகம் மற்றும் லாப ஸ்தானத்திற்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் 6-ம் இடத்திற்கு வரும் பொழுது, உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கலாம். ஒரு சிலர் விருப்ப ஓய்வில் வெளிவந்து சுயமாக எதையாவது செய்யலாமா? என்று சிந்திப்பர். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி நீங்கள் எடுத்த முடிவு வெற்றி பெறும். வெளிநாட்டு வணிகத்தால் ஆதாயம் காண்பீர்கள். சென்ற மாதத்தில் நடைபெறாமல் நழுவிச் சென்ற காரியங்கள், இப்பொழுது ஒவ்வொன்றாக நடைபெறத் தொடங்கும். பெண் வழிப் பிரச்சினைகள் தீர வழிபிறக்கும்.
மகர - செவ்வாய்
மார்கழி 30-ந் தேதி மகர ராசிக்குச் செல்லும் செவ்வாய், உச்சம் பெறுகிறார். இக்காலம் ஒரு பொற்காலமாகவே அமையும். யோகம் செய்யும் கிரகம் வலுவடைவதால் தேக நலன் சீராகும். செல்வ வளம் பெருகும். தெய்வப்பற்று அதிகரிக்கும். கூட்டு முயற்சியில் இருந்து விலகி தனித்து இயங்க முற்படுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் மூலம் நன்மை கிடைக்கும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய திருப்பங்கள் ஏற்படும். உறவினர்களிடையே இருந்த மனஸ்தாபங்கள் மாறும். வருமான அதிகரிப்பிற்கு வழிபிறக்கும்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு மேலிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு வங்கிகளில் ஒத்துழைப்பு உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மாதத்தின் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். கலைஞர்களுக்கு புகழ்கூடும். மாணவ - மாணவிகளுக்கு கடின முயற்சி கல்வியில் வெற்றி தரும். பெண்களுக்கு உறவினர்களிடம் இருந்த மனக்கசப்பு மாறும். வரவும், செலவும் சமமாகும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-
டிசம்பர்: 16, 27, 28, ஜனவரி: 1, 2, 7, 8.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பொன்னிற மஞ்சள்.