வழிபாடு

தர்ப்பணம் இடும்போது கடைபிடிக்க வேண்டியவை

Published On 2023-10-13 10:13 GMT   |   Update On 2023-10-13 10:13 GMT
  • தர்ப்பை புல்லால் செய்யப்பட்ட பவித்திரத்தை அணிந்து கொள்ளுதல் அவசியம்.
  • தெற்கு நோக்கி 12 முறை விழுந்து வணங்குதல் வேண்டும்.

1. சுத்தமான நீரில் தலை முழுவதாக நனையும்படி நீராடி உலர்ந்த ஆடையை அணிந்து நெற்றியில் அவரவர்களின் குலவழக்கத்திற்கு ஏற்றபடி விபூதியோ, திருமண்ணோ, கோபிச்சந்தனமோ, செந்தூரமோ அணிந்து கொண்டு கிழக்கு அல்லது வடக்கு நோக்கியபடி மனைப்பலகை அல்லது தர்ப்பைப்பாய் போட்டு அதன்மேல் பத்மாசனம் இட்டு அமர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

2. வலது கை மோதிர விரலில் தர்ப்பை புல்லால் செய்யப்பட்ட பவித்திரத்தை அணிந்து கொள்ளுதல் அவசியம்.

3. சுத்தமான பித்தளை தாம்பாளத்தில் கட்டை தர்ப்பையை 7 எண்ணிக்கை விரித்து அதன்மேல் கூர்ச்சம் கிழக்கு நுனியாக வைத்து நமது முன்னோர்களாகிய பித்ருக்களை அதில் ஆவாகனம் செய்தல் வேண்டும்.

4. முன்னோர் பெயரையும் வம்சாவளி கோத்திரம் தெரிந்தால் சொல்லிக் கொண்டு (தெரியாதவர்கள்) சிவ அல்லது விஷ்ணுகோத்திரம் என்று சொல்லிக் கொண்டு வலது உள்ளங்கையில் எள்ளை வைத்துக்கொண்டபடி வலது ஆள்காட்டி விரல் கட்டைவிரல் இடையில் நீரும் எள்ளும் கலந்தபடி தர்ப்பைமேல் விழுமாறு விடவேண்டும்.

5. தர்ப்பணம் முடிந்த பிறகு பித்ருக்கள் வசிக்கின்ற பித்ருலோகம் உள்ள திசை எனப்படும் தெற்கு நோக்கி 12 முறை விழுந்து வணங்குதல் வேண்டும்.

6. தர்ப்பணத்தை கிழக்கு நோக்கி செய்தல் மிகச் சிறப்பான பலன்களைத்தரும். ஒவ்வொரு திசைக்கும் வெவ்வேறு வகை பலன்கள் சிரார்த்தாங்க- தர்ப்பணம் விதியில் சொல்லப்பட்டுள்ளது.

7. தர்ப்பண நீரை சிறிதளவு குடும்பத்தார் தன் தலையில் தெளித்துக் கொண்டு பிறகு கால் படாத இடமான வில்வம், அரசு, மற்றும் பூச் செடிகளின் வே ரில் ஊற்றிவிட வேண்டும்.

8. தர்ப்பண தினத்தில் தன்னால் முடிந்த அளவு அன்னதானம் செய்தல் அவசியம். சன்னியாசி ஒருவருக்கு மட்டுமாவது அன்னதானம் செய்தல் வேண்டும்.

9. மந்திரங்கள் முறையாகத் தெரியவில்லையே என்று சிலர் இந்த தர்ப்பணத்தைச் செய்யாமல் விட்டு விடுகின்ற நிலை உள்ளது. அதைத்தவிர்க்க ஒரு எளிய தமிழ்க்கூறு உள்ளது. தர்ப்பைச் சட்டத்தை அமைத்து அதன்மேல் எள்ளும் நீரும் விட்டு, விண்ணில் இருக்கும் முன்னோரே....(பெயர்) மண்ணில் வந்து நிற்கும் நீவிர்.... (திதிநாளில்) என்னால் இடப்படும் எள்ளும் நீரும் சேர்ந்திட வேணும் நன்றாய் வாழ வாழ்த்து வீரே-நல்லருள் பெற வேண்டுகிறேன் என்று 16 முறை தர்ப்பணம் இடவேண்டும் உறுதியாக இப்படிச் செய்யப்படும் எளிய தர்ப்பணம் அவர்களைச் சென்றடைந்து அவர்கள் ஆசீர்வாதத்தைப் பெற்றுத்தந்து விடும்.

10. வடமொழியில் கூறப்படும் ஊர்ஜம் வகந்தீ என்ற மந்திரத்தின் பொருள் கடைசியில் திருப்யத...தருப்யத...த்ருப்யத என்று முடியும்.

Tags:    

Similar News