மெய்சிலிர்க்க வைக்கும் `கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா'
- 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும்.
- திறந்த வெளியில் 60 அடி நீளம் உடைய குண்டம் உள்ளது.
'குண்டத்து காளியம்மன் கோவில்' மக்களால் 'கொண்டத்து காளியம்மன் கோவில்' என்று அழைக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் வீற்றிருக்கும் இக்கோவில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும். பெருமாநல்லூரின் வடமேற்கு பகுதியில் வடக்கு நோக்கி இக்கோவில் அமைந்துள்ளது.
மதில் சுவர்களுடன் கருவறை, முன் மண்டபம் ஆகியவை உள்ளன. கருவறையில் காளியம்மன் அமர்ந்த நிலையில் 8 கைகளுடன் காட்சி தருகிறார். வலது பக்க கைகளில் முறையே வேல், உடுக்கை, கத்தி, பட்டாக்கத்தி உள்ளன. இடப்பக்கம் மேல் கை விரிச்ச நிலையில் பிஸ்மய முத்திரையாக உள்ளது.
ஏனைய கைகளில் சாட்டை, கபாலம் ஆகியன அமைந்துள்ளன. கோபத்தை வெளிப்படுத்தும் முகம், அக்கினி சுவாலையை காட்டும் தலைமுடி ஆகியவை சிறப்பாக உள்ளன. எதிரில் சிங்க வாகனம், பலி பீடம் ஆகியவை உள்ளன. விநாயகர், காளியம்மன் ஆகியோருக்கு செப்புத் திருமேனிகள் உள்ளன.
வலப்புறத்தில் விநாயகர் உருவமும், கோவில் கருவறை மேற்கில் செல்வ விநாயகர் உருவமும் உள்ளன. குண்டத்துக் காளியம்மன் கோவிலில் இரு வாயில்களிலும் துவாரபாலக உருவங்கள் சுதையால் செய்யப்பட்டவை உள்ளன. வெளியே நீட்டிய கோரப்பற்கள், பிதுங்கிய கண்கள், ஆயுதங்கள் முதலியவை அச்சுறுத்தும் வகையில் உள்ளன.
முன்வாயிலில் பெண், ஆண் என இரு துவாரபாலகர் பேருருவங்கள் உள்ளன. அவற்றை நீலி, நீல கண்டன் என அழைக்கின்றனர். உள் வாயிலில் இரு பெண் துவாரபாலகி உருவங்கள் உள்ளன. இடாகினி, மோகினி என இவற்றை மக்கள் அழைக்கின்றனர். கோவில் பிரகாரத்தில் அம்மனின் இடப்பக்கத்தில் முத்துக்குமாரசாமி சன்னதி உள்ளது.
கோவிலின் முன் திறந்த வெளியில் 60 அடி நீளம் உடைய குண்டம் உள்ளது. பங்குனி மாதம் பண்ணாரி அம்மன் திருவிழா நடைபெறும் நாட்களை ஒட்டி சில நாட்களுக்கு முன் பின்னாக இக்கோவிலில் விழா நடைபெற்று வருகின்றது.
இப்பகுதியில் விழாவை ஒட்டி நடைபெறும் குண்டம் திருவிழா மிகப்புகழ் வாய்ந்தது. பக்தி சிரத்தையுடன் குண்டம் இறங்குவது கண் கொள்ளாக் காட்சியாகும். குண்டத்தை ஒட்டியே அம்மனுக்குக் குண்டத்து காளியம்மன் எனப்பெயர் ஏற்பட்டது.
தீமிதி விழாவாகிய குண்டம் இறங்குவது மிகப்பழங்காலம் தொட்டே உலகின் பல பகுதிகளிலும் நடைபெற்று வந்துள்ளது. கால்நடைகளை தீ மிதிக்கச்செய்வதும் சில இடங்களில் நடைபெற்றுள்ளது.
விரதம் இருந்து குளித்து ஈரத்துணியுடன் வேப்பிலையை கையில் ஏந்தி தீ மிதிப்பதே மரபாகும். மன ஒருமைப்பாடு, தெய்வத்திற்கு அஞ்சும் நிலை, எண்ண சிதறல் ஏற்படாமை ஆகியன சிறப்புறுகின்றன. நாகரீக வளர்ச்சி ஏற்பட்டபோது மன ஒருமைப்பாட்டை வளர செய்வது யோக நிலையில் குண்டலினி சக்தி எனப்பெயர் பெற்றது.
குண்டு, குண்டம், குண்டலம், குண்டலி, குண்டலினி என்றவாறு இச்சொல்லை சிந்திப்பது பொருள் விளக்கத்துக்கு துணை செய்யும். இவை முறையே ஆழம், நீர் நிலை, ஓம குண்டம், வட்டம், பாம்பு எனப்பொருள் உடையன" என்று ஆய்வாளர்கள் கருதுவதால் குண்டத்திற்கும் குண்டலினி சக்திக்கும் தொடர்பு உண்டு என்பது புலனாகிறது.