வழிபாடு

சூல விரதத்தின் மகிமை

Published On 2024-02-09 04:12 GMT   |   Update On 2024-02-09 04:12 GMT
  • சவுபாக்கியங்களையும் அளிக்கக் கூடியது சூல விரதம்.
  • தை அமாவாசை தினத்தன்று அனுஷ்டிக்க வேண்டும்.

"சகல விதமான சவுபாக்கியங்களையும் அளிக்கக் கூடியது அஷ்ட மகா விரதங்களில் ஒன்றான சூல விரதம். சூல விரதத்தை, சூரியன் மகர ராசியில் இருக்கும் போது அதாவது தை அமாவாசை தினத்தன்று அனுஷ்டிக்க வேண்டும்.

அன்றைய தினம் அதிகாலையில் விழித்தெழுந்து சூலபாணியாகிய சிவபெருமானை உள்ளத்தில் வணங்கி, வழிபட்டு, வெளியே சென்று, சிவாலயத்திற்குள் இருக்கும் மங்கள தீர்த்தத்தில் நீராடி சந்தியாவந்தனம் முதலிய கர்மாக்களை நியமத்தோடு செய்து, பிறகு உமாதேவியோடு கூடிய சிவபெருமானின் விக்கி ரகத்தை வைத்துக் கொண்டு, அபிஷேகமும், நைவேத்தியமும் செய்ய வேண்டும்.

பிறகு மத்தியான வேளையில் திருநீறு, ருத்திராட்ச மாலைகளைத் தரித்த சிவபக்தர்களுக்குத் தன் பொருளாதார சக்திக்கு ஏற்றவாறுதானதர்மங்கள் செய்ய வேண்டும்.

அதன்பின் சிவாலயத்திற்குச் சென்று பிரதட்சிண வழிபாடுகள் செய்து, கோயிலுக்கு நம்மால் முடிந்த காணிக்கையும் செலுத்தி இறைவனை வணங்க வேண்டும். பிறகு சிவ பக்தர்களுடன் அமர்ந்து ஒரே ஒருமுறை மட்டும் உணவு உட்கொள்ள வேண்டும்.

இப்படியாக இச்சூல விரதத்தை யார் அனுஷ்டிக்கிறார்களோ அவர்கள் தங்களுடைய விரோதிகள் அனைவரையும் வென்று, தீராத கொடிய நோய்களில் இருந்தும் விடுபட்டு தீர்க்காயுள், புத்திரச் செல்வங்கள், தாங்கள் விரும்பிய பொருட்களையெல்லாம் அடைந்து, சகல சவுபாக்கியங்களையும் அனுபவித்து மகிழ்வார்கள். முடிவில் சிவபாக்கியத்தையும் அடைவார்கள்.

மகாவிஷ்ணு இவ்விரதத்தை அனுஷ்டித்து, தனக்கு ஏற்பட்ட பொல்லாத தலைவலியை நீங்கப் பெற்றார். மேலும் கொடிய அசுரனான காலநேமியைச் சம்ஹாரம் செய்தார்.

ஜமதக்னி முனிவரின் புதல்வனும், மிக பலசாலியுமான பரசுராமரும் இவ்விரதத்தை அனுஷ்டித்து அதன் மகிமையால் தன் விரோதியும் ராவணனையும் மிஞ்சும் பராக்கிரமசாலியான கார்த்தவீர்யார்ஜுனனைக் கொன்றார். பிரம்மனும் சூல விரதத்தை அனுஷ்டித்து தனக்கு ஏற்பட்டிருந்த கொடிய வயிற்றுவலி நீங்கப்பெற்றான்.

சுதர்மன் என்பவன் இவ்விரத மகிமையால் மரணத் தையே வென்றான். மேகாங்கன் என்னும் அரசனும் இவ்விரதத்தை கடைபிடித்து அதன் பயனாக வித்வான்களான ஆயிரம் புத்திர, பௌத்திரர்களைப் பெற்றெடுத்து, அளவற்ற போகங்களையும் அனு பவித்து இறுதியில சிவலோகத்தை அடைந்தான்.

இவர்களைப் போலவே இன்னும் பலர் இவ்விரதத்தை அனுஷ்டித்து தாங்கள் விரும்பியவற்றை அடையப்பெற்று இறுதியில் கயிலாயத்தையும் அடைந்தார்கள். ஆகையினால் மேலான சூல விரதத்தை யார் அனுஷ்டிக்கிறார்களோ, அவர்கள் தம் பகைவர்களை வென்றும், கொடிய நோய்களில் இருந்து நீங்கியும் மேலான நிம்மதியான வாழ்க்கையை அனுபவிக்கலாம. தோஷ நிவர்த்திப் பெறுவார்கள் இன்னும் ஏனைய பாவங்களில் இருந்தும் விடுபட்டு, பரமேஸ்வரரின் திருவருளால் சகல செல்வங்களையும் பெறுவார்கள்.

Tags:    

Similar News