வழிபாடு

முதலை வாயில் இருந்து மீண்ட சிறுவன்

Published On 2024-02-02 04:38 GMT   |   Update On 2024-02-02 04:38 GMT
  • `கரைக்கால் முதலையைப் பிள்ளைத் தரச் சொல்லு காலனையே’
  • சிறுவனின் பெற்றோர் ஆனந்தம் கொண்டனர்.

சுந்தர மூர்த்தி நாயனார், சிவதலம் தோறும் தரிசனம் செய்து கொண்டு வந்தார். அப்படி அவர் இந்தத் திருத்தலம் வந்தபோது, ஒரு தெருவில் இரண்டு விதமான சத்தம் கேட்டு ஒரு கணம் நின்றார். அங்கே ஒரு வீட்டில் 7 வயது சிறுவனுக்கு முப்புரிநூல் (உபநயனம்) அணிவிக்கும் மங்கல விழா நடந்தது. அதன் எதிர் வீட்டில் இறப்பு நிகழ்ந்ததற்கான அழுகை ஓலம் கேட்டது. இதுபற்றி சுந்தரர் விசாரித்தபோது, 'பூணூல் அணிவிக்கும் சிறுவனின் வயதை கொண்ட எதிர் வீட்டு சிறுவனை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முதலை விழுங்கிவிட்டதாகவும், அந்தச் சிறுவன் இருந்தால் இன்று பூணூல் அணிவிக்கும் நிகழ்வு நடைபெறும் என்பதால் அந்த வீட்டினர் அழுவதாகவும் தெரியவந்தது.

சுந்தரர் அந்தச் சிறுவனின் பெற்றோருடைய துன்பத்தை துடைக்க எண்ணினார். அவர்களை சிறுவன் விழுங்கப்பட்ட முதலை வாழும் குளக்கரைக்கு அழைத்துச் சென்றார். `கரைக்கால் முதலையைப் பிள்ளைத் தரச் சொல்லு காலனையே..' என்று சிவனிடம் மனமுருக வேண்டிப் பாடினார், சுந்தரர். அப்போது நீருக்குள் இருந்து வெளிப்பட்ட முதலை, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தான் விழுங்கிய சிறுவனை உயிருடன் உமிழ்ந்தது.

அதுவும் அந்தச் சிறுவன் தற்போதைய பருவத்தில் இருந்தது மேலும் ஆச்சரியமான ஒன்று. அந்த சிறுவனின் பெற்றோர் ஆனந்தம் கொண்டனர். இறைவனின் கருணையையும், சுந்தரரின் பக்தியையும் நினைத்து மெய்சிலிர்த்தனர். பின்னர் சிறுவனை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று, அவனுக்கும் உபநயனம் செய்துவைத்தனர்.

Tags:    

Similar News